கந்தக்காடு தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கு பாரிய நடவடிக்கை

சனி ஜூலை 11, 2020

கந்தக்காடு புனர்வாழ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் நாட்டின் பல சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான பாரிய நடவடிக்கையை இராணுவத்தினரும் தேசிய புலனாய்வு பிரிவினரும் ஆரம்பித்துள்ளனர்.

 இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் மேலும் பலர் தனிமைப்படுத்தப்படுவாhகள்,இரண்டாவது சுற்று கொரோனாவை தடுப்பதற்கான நடவடிக்கையாகவே இது இடம்பெறுகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்களை பார்ப்பதற்காக புனர்வாழ்வு நிலையத்திற்கு சமீபநாட்களில் சென்றவர்களை கண்டுபிடிப்பதற்கான 24 மணிநேர நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இதேபோன்று புனர்வாழ்வு நிலையத்தின் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்தவர்களையும் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. 

புனர்வாழ்வு நிலையத்தில் காணப்பட்டவர்கள்,அங்கிருந்து சிறைகளுக்கு மாற்றப்பட்டவர்கள், தொழிலாளர்கள் அதிகாரிகள் உட்பட அனைவரும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துசெல்லப்பட்டுள்ளனர்.

அதேவேளை குடும்பத்தவர்கள் நெருங்கிய உறவினர்கள் அயலவர்கள் நண்பர்களை சுயதனிமைப்ப்படுத்தலை முன்னெடுக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

கந்தக்காடு முகாமுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதால் சரியான புள்ளிவிபரங்களை வெளியிட முடியாத நிலை காணப்படுகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.