கொழும்பில் வாகனங்களை திருடி மட்டக்களப்பில் விற்பனை செய்யும் கும்பல் சிக்கியது!

திங்கள் செப்டம்பர் 21, 2020

கொழும்பு கடவத்தை பகுதியில் திருடப்பட்டு விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்ட கார் ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் துறை  நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து போதை தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எம்.துசிதகுமார தலைமையில் சென்ற காவல் துறைஉத்தியோகத்தர்களான எம்.பி.எம்.தாஹா, ஜி.ஐ.புஸ்பகுமார, எஸ்.வாசல ஆகியோர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த கார் ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்தோடு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதுடன், குறித்த சந்தேக நபருடன் இன்னும் பலர் இருக்கலாம் என்றும், குறித்த சந்தேக நபர் பல வாகனங்களை திருடி விற்பனை செய்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாகவும் வாழைச்சேனை காவல் துறை நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.