கொழும்பு-ஜெனீவா பலப்பரீட்சை

வியாழன் பெப்ரவரி 04, 2021

தனிமனித வாழ்விலும் நாடுகளின் வரலாறுகளிலும் சில தீர்மானங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைவதுண்டு. அதேபோன்று சில நாடுகள் வரலாற்றில் மறக்க முடியாத சில சம்பவங்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படுவதும் இயல்பானதே.

அந்த வகையில் இலங்கை அரசியல் வரலாற்றில் விஜயன் வருகை முதல் இன்றுவரை சில சம்பவங்கள் நமது வரலாற்றில் பெரும் தாக்கங்களைச் செலுத்தி வந்திருக்கின்றன. அந்தவகையில் சுதந்திரத்துக்குப் பின் நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளில் 1971ல் ஒடுக்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் நடத்திய அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிவுற்றாலும் அந்த கொள்கையைப் பின்பற்றுபவர்கள் இந்த நட்டில் ஜேவிபி என்ற பெயரில் இன்றும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் 1988-1989களில் மீண்டும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டு அதுவும் தோல்வியில் முடிந்ததுடன், 1971 மற்றும் 1988-1989களில் தமது பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களை இழந்தனர். இதில் போராட்டக்காரர்கள் தமது தலைவன் ரோஹன விஜேவீர மற்றும் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் அனைவரையும் இழக்க வேண்டி வந்தது. ஆனால் பிற்காலத்தில் தலைவராக வந்த சோமவங்ச அமரசிங்ஹ மட்டும் தப்பித்துக் கொண்டார்.

அவர் தான் எப்படி தப்பித்துக் கொண்டேன் என்ற கதையை இந்தக் கட்டுரையாளனுடனான சந்திப்பொன்றில் முதல் முறையாக சொல்லி இருந்தார். நாம் பல வருடங்களுக்கு முன்னர் அந்தக் கதையையும் எமது வார இதழில் சொல்லி இருந்தோம். அடுத்து சுதந்திரத்துக்குப் பின்னாலான அரசியலில் ஈழத் தமிழர் நடத்திய அரசியல் உரிமைக்கான சாத்வீகப் போராட்டங்கள் அனைத்தும் தோற்றுப்போக தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கினார்கள். இது இன்று இலங்கை அரசியலில் மிகப் பெரிய வரலாற்றுப் பதிவுகளையும் காயங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

ஆயுதப் போராட்டங்கள் நடத்திய பல குழுக்கள் களத்தில் இருந்தாலும் அவை பல்வேறு காரணங்களினால் சம பலத்தைக் கொண்டிருக்கவில்லை. பிற்காலத்தில் இவற்றில் பல குழுக்கள் இந்திய, இலங்கை அரசுகளின் கையாள்களாக மாறி அதற்கு நியாயம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். கடைசி நிமிடம் வரை களத்தில் நின்றவர்கள் என்றவகையில் விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபகாரன் மீதும் உலக வாழ் தமிழ் மக்கள் இன்றும் அபிமானத்தை வைத்திருக்கின்றார்கள்.

தனது நாட்டுக்குச் சொந்தமான ஒரு பெரும் நிலப் பரப்பை பிரபாகரன் ஆட்சி செய்துவருவதால்-கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் அதனை மீட்டெடுத்தவர்கள் என்ற வகையில்  தெற்கில் ராஜபக்ஸாக்கள் ஹீரோக்களாக மதிக்கப்படுகின்ற ஒரு நிலையும் இருந்து வருகின்றது. தெற்கில் ராஜபக்ஸாக்கள் தம்மை செல்வாக்கானவர்களாக வைத்திருக்க கடும்போக்கு இனவாதிகளை உற்சாகப்படுத்தும் ஒரு இராஜதந்திரத்தையும் தற்போது செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு கட்டத்தில் தாம் தேர்தலில் தோற்றுப் போனால் சர்வதேசம் எம்மை மின்சாரக் கதிரையில் ஏற்றிவிடும் என்றும் கூட கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆனால் 2015 தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தோற்றுப் போன போதும் அப்படியான நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை. நல்லாட்சிக் காலத்தில் சர்வதேசம் போர் குற்றம் என்பதனைக் கண்டு கொள்ளவில்லை. அத்துடன் புதிய மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசுக்கு அவை காலத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

நல்லாட்சி நடந்து கொண்டிருந்த ஓரிரு வருடங்களுக்குள்ளேயே ராஜபக்ஸாக்கள் மீண்டும் அரசியல் ரீதியில் எழுச்சி பெற்றுத்  தம்மைப் பலப்படுத்திக் கொண்டதுடன் அடுத்து வந்த தேர்தலில் கடும் போக்கு பௌத்த அமைப்புக்களின் மிகப் பெரும் ஆதரவுடன் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர்.

இப்போது அவர்களுக்கு கடும் போக்கு பௌத்த குழுக்களின் விருப்பிற்கு ஏற்றவாறு அரசாங்கத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் ஆட்சியாளர்கள் நெருக்கடிகளுக்கு இலக்காகி வருகின்றனர். எமது அவதானப்படி ராஜபக்ஸாக்கள் தற்போது கடும் போக்கு பௌத்த குழுக்களின் வீட்டுக்காவலில் இருந்து ஆட்சியை முன்னெடுத்துச் செல்லும் ஒரு நிலை நாட்டில் காணப்படுகின்றது. நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்ற இந்த நேரத்தில் தெற்கிலிருந்து வருகின்ற எதிர்ப்பை சமாளிப்பதற்காக சிறுபான்மையினருக்கு எதிரான செயல்பாடுகள் மூலம் தொடர்ந்து பேரினத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஆட்சியாளர்கள் முனைகின்றார்கள்.

வடக்கு,கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் தொல்பொருள் ஆய்வுகள் என்ற பெயரில் தொடரும் ஆக்கிரமிப்புக்கள்,முஸ்லிம் கொரோனா மரணங்கள் தகனம் செய்வதை சர்வதேசமே எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருப்பதும் மேலும் ஐ.நாவுக்கோ ஐரோப்பிய சமூகத்துக்கோ நாம் அடிபணியமாட்டோம் என்ற வீராப்புடன் நடந்து கொண்டு சர்வதேசத்துடன் ஒரு மோதல் போக்கையே அரசு கையாண்டு வருகின்றது. இது கடும்போக்கு பௌத்த குழுக்களைத் தொடர்ந்து தமது பிடியில் வைத்திருக்கும் உத்திகள் என நாம் நினைக்கின்றோம்.

ஆனால் இந்த அணுகுமுறைகள் தொடர்ந்தும் எந்தளவுக்கு வெற்றி பெறும் என்று தெரியவில்லை. ஜெனிவா விவகாரத்தை எடுத்துக் கொண்டால் இந்த முறை அது கடும் நிலைப்பாட்டில் இலங்கையுடன் நடந்து கொள்கின்றது என்று வெளித்தோற்றத்து தெரிந்தாலும் அது ஏகமனதாக என்ன தீர்மானங்களை எடுத்தாலும் எங்களுக்கு கவலையில்லை என்று அரசு இதுவரை கூறிக் கொண்டிருந்தது. இலங்கை இதற்கு ஒத்துழைத்தாலும் ஒத்துழைக்காவிட்டாலும் தீர்மானங்களை நிறைவேற்றியே தீர்வது என்ற ஒரு நிலை இருக்கின்றது. எனவே இப்போது அரசு சற்று அச்சப்படுகின்றது என்றும் தெரிகின்றது.

இதனால்தான் ஜனாதிபதி ஜீ.ஆர். சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமைக்கப்பட்ட ஆணைக்குழு தொடர்பான கடந்தகால அறிக்கைகளை மீள் ஆய்வு என்ற பெயரில் ஒரு ஆணைக்குழுவை மீண்டும் நியமித்து, அதற்கு ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதியைத் தலைவராகவும் நியமித்திருக்கின்றார். .

நீதித்துறையில் நவாஸ் என்று அனைவராலும் அறியப்பட்ட மனிதன் தொடர்பில் எமக்கு சில கேள்விகள் இருக்கின்றன. அவர் அந்தப் பதவிக்குப் பொருத்தமில்லாதவர் என்று நாம் சொல்ல வரவில்லை. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை அந்தப் பதவிக்கு அமர்த்தி அரசு சர்வதேசத்தின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று சிறுபிள்ளைத் தனமாகக் கருதுகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. மறுபுறத்தில் சிறுபான்மை சமூகங்களுக்குள் மனக் கசப்புக்களை  வளர்த்துவிடும் வேலையாகவும் நவாஸ் நியமனத்தைப் பார்க்க முடியும். இது எப்படிப் போனாலும் ஜனாதிபதி நியமித்திருக்கின்ற இந்த மீளாய்வு ஆணைக்குழு மீது சர்வதேசத்துக்கு நல்ல புரிதல் இருக்கின்றது என்பதை உணரமுடிகின்றது. இது காலத்தை கடத்துவதற்கு அரசு மேற்கொள்ளும் ஒரு நாடகம் என்று அவர்கள் பகிரங்கமாகவே ஜனாதிபதியின் நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றார்கள்.

தெற்காசியாவுக்கான ஐ.நா. பணிப்பாளர் மீனா கங்கூலி சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சி இது என நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவை நிராகரிக்கின்றார். இதுவரை வழங்கப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அமுல்படுத்தவில்லை. எனவேதான் இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தக்கும் ஐ.நா. சபைக்கும் முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.

மேலும் குற்றச்சாட்டப்படுகின்றவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் சொத்துக்களைத் தடுத்து வைத்தல் போன்ற அச்சுறுத்தல்கள் இந்த முறை இலங்கை எதிர்நோக்குகின்றது.  போர் குற்றவாளிகளுக்கு தண்டனைகளுக்குப் பதில் இந்த அரசு உயர் மட்டப் பதவிகளை வழங்கி அவர்களைக் கௌரவப்படுத்தி வருகின்றது என சர்வதேசம் குற்றம் சாட்டி வருகின்றது.

இதன் பாரதூரத்தை ஜெயநாத் கொலம்பகே என்ற இலங்கை இராஜதந்திரி நன்கு புரிந்திருக்கின்றார். இது பாரதூரமான விவகாரம் என்றும் ஏனைய நாடுகளை விட நாம் சர்வதேசத்துக்கு விசுவாசமாகவே நடந்து வந்திருக்கின்றோம் என்று கருத்து வெளியிட்டிருப்பதுடன், இது நியாயமற்ற செயல் என்றும் கொலம்பகே தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த முறை ராஜபக்ஸாக்கள் சர்வதேசத்திடம் நன்றாக மாட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று கருத்துத் தெரிவித்திருக்கின்றார். புலம் பெயர்ந்த தமிழர்கள் செல்வாக்கு ஜெனீவாவில் வெளிப்படுகின்றது என்று கொலம்பகே  குற்றம் சாட்டி வருகின்றார். அவர் கருத்துப்படி ஜெனீவா மனித உரிமைகள் அமைப்பு புலம்பெயர்ந்தவர்கள் எழுதிக் கொடுத்ததை வாசிக்கின்றார்கள் என்பது போல்தான் அமைந்திருக்கின்றது.

தற்போதய ஆட்சியாளர்கள் மீண்டும் மின்சாரக் கதிரை போன்ற கதைகளை கூறி தெற்கில் சிங்கள மக்களைக் கொதிப்படையச் செய்யவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. சர்வதேசத்துக்கு அடிபணிந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க மாட்டோம் என்று பேசியவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இது விடயத்தில் ஆரோக்கியமான முடிவுகளை நாம் எடுப்போம் என்று உத்தரவாதங்களை வழங்கி இருக்கின்றார்கள் என்றும் தெரிகின்றது. ஆடை ஏற்றுமதி விவகாரத்தில் நெருக்கடிகளுக்கு ஆளாவோம் என்ற அச்சம் காரணமாக இதில் அரசு மென்போக்குடன் நடந்து கொள்ள முனைகின்றது போலும்.

முஸ்லிம்களுடைய கொரோனா மரணங்கள் தகனம் தொடர்பில் கடுமையான சொற்பிரயோகங்களை பாவித்து இலங்கையைக் கடுமையாக கண்டித்திருக்கின்றது ஐ.நா. நிபுணர்கள் குழு. இப்போது  கடும் போக்காளர்களை திருப்திப்படுத்த போய் அரசு பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கின்றது. பாரபட்சம், வன்முறை, மிகைப்பட்ட தேசியவாதம் இனசார்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதே உடல்களை பலாத்காரமாகத் தகனம் செய்யும் கொள்கை என்று ஐ.நா. நிபுணர்கள் குழு இலங்கையைக் கண்டித்திருக்கின்றது. பிரித்தானியா, அமெரிக்க, கனடா, ஜேர்மன் போன்ற நாடுகள் தமது தூதுவர்கள் மூலம் இது விடயத்தில் தனிப்பட்ட ரீதியிலும் தமது அதிருப்தியை அரசுக்கு வெளியிட்டு வருகின்றது.

அதேநேரம் ரஸ்யா, சீனா, பாகிஸ்தான், கியுபா என்பன ஜெனீவா மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதில் உறுதியான நிலைப்பாட்டில் இருந்து வருகின்றன. இலங்கை விடயத்தில் பாகிஸ்தான் காட்டிவரும் ஆர்வம் ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எந்தளவுக்கு இருக்கின்றன என்பதில் நிறையவே நமக்கு சந்தேகங்கள் இருந்து வருகின்றன. ஆனால் தமிழக சமூக ஊடகங்கள்தான் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவுக்குப் பெரும்  அக்கறை இருப்பது போல் கதைகளை மிகைப்படுத்திப் புனைந்து கொண்டிருக்கின்றன. நம்பிக்கைகளைக் கொடுக்கின்றன என்பதுதான் யதார்த்த நிலை என்று நாம் நினைக்கின்றோம்.  எமது கருத்தின் நம்பகத் தன்மையை வருகின்ற ஜெனீவா அமர்வில் பார்த்துக் கொள்ள முடியும். கடந்த காலங்களில்கூட இந்தியா ஜெனீவா விவகாரத்தில் மதில்மேல் பூனை விளையாட்டைத்தான் செய்து கொண்டிருந்தது.

இன்னும் சில தினங்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை வர இருக்கின்றார். நிச்சயமாக சீனாவின் வழிகாட்டலில்தான் அவர் இந்த முறை இங்கு வருகின்றார் என்று நாம் நம்புகின்றோம். பிராந்திய ரீதியில் இந்தியாவுக்கு எதிரான சீனா தனது வலைப்பின்னலை சிறப்பாக அமைத்திருக்கின்றது. பர்மா, பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் போன்ற இடங்களில் துறைமுகங்களை மலை போல் அமைத்திரு ப்பதுடன் வடக்கில் நவீனமான வீதிகளைப் போட்டு இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கொடுத்து வருவதால் இந்தியா  ஈழத்தமிழர் விவகாரத்தை மிகவும் தயக்கத்துடனே அணு கிவருகின்றது. இம்ரான் வருகை மீது இலங்கை முஸ்லிம்கள் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது. தமது உடன் பிறப்புக்களின் உடல்கள் எரியூட்டுவதைத் தடுக்க அவர் ஏதாவது பண்ணக் கூடும் என்று நம்புக்கின்றார்கள். ஆனால் கான் இலங்கை விஜயத்தில் பிராந்திய ரீதியில் சீனாவின் மேலாதிக்கம் தொடர்பான பேச்சுக்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

இதற்கிடையில் ஜனாதிபதி பிரதமர் குழுக்களிடையே அரசின் செயல்பாடுகள் தொடர்பில் கடுமையான கருத்து மோதல்கள் நடந்து கொண்டு வருகின்றது என்றும் தெரிய வருகின்றது. அத்துடன் இந்திய அதானி நிறுவனத்துக்கு கொழும்புத்துறைமுக கிழக்கு களஞ்சிய இறங்கு துறையைக் கையளிப்பது என்ற நிலைப்பாட்டை யார் என்ன சொன்னாலும் நாம் மாற்ற மாட்டோம் என்று அமைச்சர்களே இப்போது பகிரங்கமாகப் பேசி வருகின்றார்கள். இது உறுதி. அமெரிக்கா கூட இதனை இந்தியாவுக்கு வழங்குவதை ஆதரிக்கின்றது. காரணம் அதன் சீனாவுக்கு எதிரான நிலைப்பாடாகும். இதனால் துறைமுகத்தில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும் அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டங்களை ஆரம்பித்திருக்கின்றன. இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய பல கடும்போக்கு பௌத்த குழுக்களும் போராட்டக்கார்களுடன் இணைந்திருக்கின்றார்கள். ஆனால் இது ஏற்கெனவே முடிந்து போன விவகாரம். இந்த எதிர்ப்புகளினால் என்னதான் நடக்கப்போகின்றது.

தமிழ் நாட்டில்  தனது நண்பரான அதானி நிறுவனத்துக்கு ஒரு துறைமுகத்தை அமைத்துக் கொள்ள மோடி இடம் தேடிய போது அங்கு எழுந்த எதிர்ப்பால் மோடி அந்த விவகாரத்தை கைவிட்டார் என்றும் தமிழக வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது. ஒரு தனியார் நிறுவனத்துக்கு துறைமுகத்தைப் பெற்றுக் கொடுப்பதில் இந்திய மத்திய அரசு பெரும் ஆர்வத்துடன் செலாற்றி வருவது ஆச்சர்யமான விடயமாக இருக்கின்றது. இந்த அதானி நிறுவனம் தேர்தல் காலங்களில் மோடிக்கு நிறையவே உதவிகளைச் செய்து வந்திருக்கின்றது.

நஜீப் பின் கபூர்