கோணாவில் வீதியில் உள்ள நிழல் தரும் மரங்கள்💚

புதன் செப்டம்பர் 29, 2021

கிளிநொச்சியிலிருந்து அக்கராயன் குளத்துக்கு இரண்டு வழிகளால் போகலாம். ஒன்று முறிகண்டி வழியாக. மற்றது கோணாவில் ஊடாக அது சுருக்கமான பாதைதான்.

கழிவாற்றுப் பாலத்துக்குத் திரும்பாமல் நேரே சென்றால் மரத்தோப்புக்குப் போகலாம். கோணாவில் - அக்கராயன்குள வீதியில் யூனியன்குளத்துச் சற்று அப்பால் உள்ளது மரத்தோப்பு.

மரத்தோப்பு என்றால் ஏதோ பெரிய வளாகத்தில் உள்ள தோப்பு என்றில்லை. வீதியோரத்தில் நீளத்துக்கு நிற்கின்ற மரங்களின் கூடல். வீதிக்கு மேலே பச்சைக்குடை விரித்திருக்கும் மரங்கள். அத்தனையும் நிழல்வாகை.

அதற்குக் கீழே செல்லும்போது அல்லது நிற்கும்போது மனமும் உடலும் பச்சையாகக் குளிரும். சிறகுகள் முளைத்துப் பறவையாகியதைப்போல உணர்வு ஏற்படும். அந்தக் காட்சியே எவருடைய மனதிலும் உற்சாகத்தைக் கிளப்பக் கூடியது.

கோடையில் கூட அந்த இடம் குணம் மாறாமல் அப்படியே இருப்பது ஆச்சரியமே. நெருப்பைச் சூடியதைப்போல உச்சிக் கிளைகள் வசந்தத்தில் பூத்துச் சொரியும்.

111

பாரதிராஜாவின் “16 வயதினிலே” படத்தில் வரும் செந்தூரப்பூக்களைப்போல, இந்த மரங்கள் உதிர்க்கும் பூக்களால் நிலம் செம்பவளமாகிக் கிடக்கும். இதையெல்லாம் பார்க்காமல் செல்ல முடியுமா?

வன்னியில் இது ஒரு அதிசயக் காட்சியே. வன்னியில் மட்டுமல்ல, வடக்கில் வேறு எங்கும் இப்படியொரு காட்சி இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த மரங்களையெல்லாம் நட்டு வளர்த்தது, கோணாவிலைச் சேர்ந்த குணரத்தினம் ஐயா  என்பவரே.

மரங்களை நடுவதொன்றும் லேசான காரியமல்ல. அதுவும் சாமானியர்கள் மரங்களை நடுவதென்றால் அது பெரியபாடு. அவற்றை பதியம்போட்டு வளர்க்க வேணும். வளர்த்த மரங்களைப் பக்குவமாகப் பொருத்தமான இடங்களில் நட வேணும்.  

நட்ட மரங்களைப் மிகப் பக்குவமாகப் பாதுகாப்பதற்கான கூடுகளை அடைக்க வேணும். மரங்கள் சற்று வளர்ந்து விட்டால் பிறகு அதில் ஊரவர்கள் ஆடுமாடுகளைக் கட்டுவார்கள். சில வேளை அதில் கிளைகளையோ தடிகளையோ வெட்டிக் கொண்டு போய்விடுவார்கள். அதையெல்லாம் கண்காணிக்க வேண்டும்.

குணரத்தினத்தினம் ஐயா  இளங்கோ போன்றவர்களை கேட்டால் இந்த மரங்களை வளர்த்தெடுப்பதற்குப் பட்டபாடுகளைக் கதைகதையாகச் சொல்லுவார்கள். மரங்களை நட்டபிறகு கோடையில் அவற்றுக்கு தண்ணீர் விடுவதற்கு ரொம்பச் சிரமப்பட்டிருக்கிறார்கள்.

கொஞ்சம் ஈரம் கெட்டாலே கறையான் மரங்களைத் தின்று விடும். இதற்காக சிரமம் என்றாலும் பரவாயில்லை என்று கோடை முழுவதும் நீரிறைத்திருக்கிறார்கள்.

மரங்களில் ஆடு, மாடுகளைக் கட்டுவோருடன் சண்டை போட்டிருக்கிறார்கள். இதெல்லாம் பரவாயில்லை. கொடுமை  என்னவென்றால், “வேலை வெட்டியில்லாமல் ஊரெல்லாம் மரம் நட்டுத்திரிகிறார்கள். போதாக்குறைக்கு அதுக்குக் காவல் வேற” என்று தங்களைப் பகிடி பண்ணியவர்களைப் பொறுமையோடு கடந்து செல்ல வேண்டியிருந்திருக்கிறது.

ஆண்டுகள் பல கடந்து விட்டன. இதற்குள் மிகப் பெரிய யுத்தம், இடப்பெயர்வு எல்லாம் நிகழ்ந்து முடிந்து விட்டன. புயலும் கோடை வரட்சியும் வந்து போய்விட்டன. ஆனாலும் இன்னும் இந்த மரங்கள் அப்படியே உயிர்ப்போடிருப்பது ஆச்சரியமே. சில இடங்களில் ஒழுங்கான பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாமல் அழிந்ததும் உண்டு.

பாடசாலைகளில் சில மரங்களை தேவைகளுக்காக வெட்டியிருக்கிறார்கள். ஆனால், கோணாவில் - அக்கராயன்குள வீதியில் நிற்கும் மரங்கள் அழகோவியமாகவே நிற்கின்றன.

வன்னி முழுவதும் காடும் வயல்வெளியும் மரங்களுந்தானென்றாலும் இந்த மரங்களும் அதைச் சுற்றியிருக்கிற வயல்வெளியும் கீழே ஊடறுத்துச் செல்கிற வீதியும் அருகிலே ஓடுகின்ற வாய்க்காலும் மாறாத அழகுச் சின்னமே. ஊருக்கே ஒரு அடையாளமாக மாறிவிட்ட சின்னம்.

குணரத்தினம் ஐயாவை போல மரங்களை நடுவதில் ஆர்வம் உள்ளவர்கள் அங்கங்கே ஒன்றிரண்டு பேர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் நட்ட மரங்களை இப்போதும் நாங்கள் பார்க்கலாம்.

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில், கிளிநொச்சி நகரில் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக, வவுனியா நகரில் என ஓங்கி வளர்ந்து அவர்களுடைய எண்ணத்தின் அடையாளமாக நிற்கின்றன. கரடிப்போக்கிலிருந்து உருத்திரபுரம் செல்கின்ற வீதியில் இரணைமடு வாய்க்காலோரமாக வரிசைகட்டி நிற்கிற மருத மரங்கள் இன்னொரு அழகு. வளம்.

நாம் ஒவ்வொருவரும் எங்களுடைய வாழ்க்கைக் காலத்தில் ஏதேதோ தேவைகளுக்காக எத்தனையோ மரங்களை வெட்டுகிறோம். அந்தளவுக்கு புதிய மரங்களை நாட்டுகிறோமா? என்றால் இல்லை என்பதே பதிலாகும். அதிலும் நமது வீட்டுக்கு அப்பால் பொது இடங்களில் மரங்களை நட்டவர்கள் எத்தனைபேர்? அப்படித்தான் நட்டிருந்தாலும் எத்தனை மரங்களை நட்டிருப்போம்? அப்படி நட்டாலும் அவற்றை ஒழுங்காகப் பராமரித்து வளர்த்திருப்போமா?

உண்மையில் மரங்களே நமது நினைவுச் சின்னங்களாகும். அவை உயிருள்ள சின்னங்கள். நம்மை உயிர்ப்பூட்டும் சின்னங்கள். பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் நடப்பட்ட மரங்களே யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளவை.

உடையார்கட்டு தேறாங்கண்டலிலும் வற்றாப்பளையிலும் குமுழமுனையிலும் ஒட்டுசுட்டானிலும் முழங்காவிலும் ஏக்கர் கணக்கில்  நடப்பட்ட மரங்கள் இன்றும்  உள்ளன.

பூநகரியில் 500 க்கு மேற்பட்ட வேம்புகள் இன்று பெரும் தோப்பாக வளர்ந்திருக்கின்றன. இதை விட 500 ஏக்கரில் மரமுந்திரிகை.  500 க்கும் அதிகமான ஏக்கரில் தென்னைகள். பல்லாயிரம் பனைகள்.

யுத்தத்தினால் கோடிக்கணக்கான மரங்களை இழந்தவர்கள் நாம். நமது கைகால்களையும் கண்ணையும் இழந்ததைப்போல எங்கள் நிலத்தின் மரங்களையும் இழந்திருக்கிறோம். இதை மீளருவாக்கம் செய்வதற்கு தினமும் மரங்களை நட்டாலும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகும் பழைய நிலை வருவதற்கு. ஆனால், அந்தளவுக்கு எங்களுடைய மரநடுகைகள் உள்ளனவா?

ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மர நடுகை நடக்கிறது. அரசியல் நிகழ்ச்சியாக மாறினாலும் சனங்களும் கூட இதைச் செய்கிறார்கள் என்பதையிட்டுச் சற்று ஆறுதல். ஆனால்,அப்படி நடப்படும் மரங்கள் தொடர்ந்து பராமரிக்கப்படுகின்றனவா? என்பது கேள்வியே. ஒவ்வொரு ஆண்டும் நடப்படுகிற மரங்களில் எத்தனை தப்பிப் பிழைக்கின்றன என்பது இன்னொரு கேள்வி.

நமது முன்னோர் மரங்களை நடுவதை தங்கள் வாழ்வில் ஒரு செயல்முறையாகக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் நட்ட மரங்களை பல இடங்களிலும் பார்க்கிறோம். குறைந்த பட்சம் தெருவோரங்களில் நிற்கும் மரங்களை வெட்டாமல், அழியாமல் பாதுகாத்திருக்கிறார்கள்.

கவிஞர் இளவாலை விஜேந்திரன் கூறுவதைப்போல, “எமது முன்னோர்கள் தெருவோரங்களில் நட்டுவைத்த பெருவிருட்சங்களின் அழகு என்னை எப்போதும் மயக்குகிறது. அவை எமது சந்ததிக்கு என அவர்களால் வழங்கப்பட்ட முதுசங்கள்.

111

ஒரு தெரு உங்கள் நினைவில் நூற்றுக்கணக்கான தடவைகள் தோன்றினால் அதன் அழகு உங்களைத் தொடர்கிறது என்றே அர்த்தம் என்பது ஆயிரம் மடங்கு வலுமிக்க உண்மை.

எம் இயற்கை வளங்களான மரங்களை நினைவுச் சின்னங்களாக்கலாம். உயிர்ப்புள்ள நினைவுச் சின்னங்களே மண்ணுக்கு அழகு. அதுவே மண்ணுக்கும் மக்களுக்கும் வளமாகும்.

நன்றி-முகநூல்