கொங்கோ படுகொலையில் யுத்த குற்றங்கள்

ஞாயிறு ஜூலை 28, 2019

சர்வதேச நீதிமன்றம் உறுதி செய்தது விரைவில் பொஸ்கோவிற்கு தண்டனை

கொங்கோ ஜனநாயக் குடியரசு நாட்டின் தேசிய கொங்கிரசின் மக்கள் பாதுகாப்புப் படையின் இராணுவ உயரதிகாரியான பொஸ்கோ என்டிஏகாண்டா(Bosco Ntaganda - 47 ) யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அடுத்த வரும் மாதங்களில் இவருக்கான தண்டனை அறிவிக்கப்படவுள்ள நிலையில், குறைந்தது 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தக் குற்றங்களுக்காக இவர் தேடப்பட்டு வந்த நிலையில், 2013ம் ஆண்டு மார்ச் 18ம் திகதி இவர் தானாகவே ருவாண்டாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் சென்று சரணடைந்ததுடன்,தன்னை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்துமாறும் கோரியிருந்தார்.

இதனையடுத்து 22ம் திகதி இவர் சர்வதேச நீதிமன்றத்திடம் இவர் கையளிக்கப்பட்டு இவர் மீதான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று கடந்த 2019 யூலை 8ம் திகதி இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன.

இவர் சரணடைவதற்கான காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை. ஆனால்,ருவாண்டாவால் அவ்வாறு சரணடைய அவர் நிர்பந்திக்கப்பட்டார் அல்லது மே 23 இயக்கத்துடன் (இது கொங்கோ புரட்சிகர இராணுவத்தின் பிரிவு) வெடிக்கும் மோதலுக்கு அஞ்சியே சரணடைந்தார் என்றும் ஊகிக்கப்படுகின்றது.

மே 23 இயக்கம் மீதான பல்வேறு படுகொலைத் தாக்குதல் நடவடிக்கைக்கு இவரே தலைமை தாங்கியிருந்தார். இதனால் இவரைப் படுகொலை செய்வதற்கு அந்த இயக்கம் பலவழிகளிலும் முயன்று வந்தது.

எனினும், 2008ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தால் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இவர் தலைமறைவாகிவிடுவதுடன், விசாரணைகள் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என சர்வதேச நீதிமன்றம் எதிர்பார்த்திருந்த நிலையில், பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல் இவரது சரணடைவு, நீதிமன்ற விசாரணைகளை முன்னெடுக்க வழிவகுத்துவிட்டது.  

டெர்மினட்டர் (Terminator)என பலராலும் அச்சத்துடன் அழைக்கப்படும் பொஸ்கோ என்டிஏகாண்டா கொலைகள், பாலியல் வன்முறைகள், பாலியல் அடிமைத்தனம் மற்றும் சிறுவர்களை படையணிகளில் சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

சிறுவர்களைப் படையில் இவர் இணைத்தபோது அந்தச் சிறுவர்களிடம் நீங்கள் இராணுவமாக மாறினால் ஒரு பெண்ணை நீங்கள் இலவசமாக எடுத்தக்கொள்ளலாம், உங்களுக்கு எல்லாமே இலவசமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

111

தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இவர் மீதான வழக்கில் முதல் தடவையாக பாலியல் அடிமைத்தனத்திற்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தனது 17வயதில் 1990களின் முற்பகுதியில் படையில் இணைந்த இவர், ருவாண்டா தேசபக்தி இராணுவத்துடன் போராடியுள்ளார். பின்னர் 1994ல் ருவாண்டாவில் இடம்பெற்ற மிகப்பெரும் இனப்படுகொலையைத் தொடர்ந்து, ருவாண்டாவின் ஹூட்டு தலைமையிலான ருவாண்டா அரசாங்கத்தை அகற்றுவதில் பங்கேற்றார்.

இதன்போதும் இதற்குப் பின்னரும் இடம்பெற்ற பல மோதல்களில் பொதுமக்களை இலக்குவைத்து படுகொலை செய்வதற்கான உத்தரவுகளை இவர் வழங்கினார் என நீதிபதி ரொபேர்ட் பிரெமர் தெரிவித்துள்ளார்.

111

கொங்கோ தேசபக்தர்களின் ஒன்றியம் (Union of Congolese Patriots (UPC) அமைப்பின் சார்பிலும் அதன் ஆயுத பிரிவான கொங்கோ விடுதலைக்கான தேசபக்தி படைகள் (Patriotic Forces for the Liberation of Congo (FPLC)இ அமைப்பின் சார்பிலும் முக்கிய திட்டமிடல்களை மேற்கொண்டுஅவற்றை பொஸ்கோ என்டிஏகாண்டா நடைமுறைப்படுத்தினார் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2002 யூலை முதல் 2003 டிசெம்பர் வரை ஹேமா இனக்குழுவை சாராத சமூகத்தினர் மீது மிகப்பெரும் படுகொலைத் தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இவர்களின் படைக்குழு தாக்குதல்களை மேற்கொண்டது என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

ஒரு தாக்குதலின் போது வாழைத்தோட்டமொன்றில் 49 பொதுமக்களை கத்திகள் உட்பட பல ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அந்த வாழைத்தோட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் உடல்கள் காணப்பட்டன. சில உடல்களில் ஆடைகள் இருக்கவில்லை, சிலரின் கைகள் கட்டப்பட்டிருந்தன, சிலரின் தலைகள் சிதைக்கப்பட்டிருந்தன, பல உடல்கள் சிதைக்கப்பட்டிருந்தன என நீதிபதி தெரிவித்துள்ளார்.

என்டிஏகாண்டா கத்தோலிக்க மதகுருவொருவரை தனது கையால் கொலை செய்தார் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: ஈழமுரசு