கொந்தளிப்பான சூரியனின் மேற்பரப்பு!

வியாழன் சனவரி 30, 2020

சூரியனின் கொந்தளிப்பான மேற்பரப்பு இதுவரை இல்லாத வகையில், அமெரிக்காவில் உள்ள புதிய நவீன தொலைநோக்கியின் மூலம் துல்லியமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுதியே அண்டம். கோடிக்கணக்கான அண்டங்களின் தொகுதியே பேரண்டம். பேரண்டத்தில் காணப்படும் பல்வேறு அண்டங்களில் ஒன்றுதான் பால்வெளி மண்டலம். சூரியன் உட்பட நம்ம கண்களுக்குத் தெரியும் அனைத்துமே பால்வெளி மண்டலத்தைச் சார்ந்தவை. சூரியனைப்பற்றியும், சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்கள் பற்றிய ஆராய்ச்சிகளிலும் உலகின் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், வானியற்பியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நாடான அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பு சூரியனின் மேற்பரப்பை இதுவரை யாரும் எடுக்காத வகையில் துல்லியமான புகைப்படத்தை நவீன நுண்ணோக்கி மூலம் படம்பிடித்துள்ளது.  

இதுகுறித்து அந்த அமைப்பின் இயக்குநர் கூறுகையில், ‘சூரியனின் இதுவரை காணப்படாத மேற்பரப்பை இந்த இன்யூய் சூரிய தொலை நோக்கி கண்டறிந்துள்ளது. இது சூரியனைப் பற்றிய அறிவியல் பிரிவின் சகாப்தத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த தொலைநோக்கி படம்பிடித்துள்ள சூரியனின் படம் தான் மிக மேம்படுத்தப்பட்ட படமாகும். 

 

அமெரிக்கா அறிவியல் அமைப்பு வெளியிட்டுள்ள சூரியனின் படம்

 

சமீபத்திய படங்கள் முழு சூரியனையும் உள்ளடக்கிய கொந்தளிப்பான கொதிக்கும் பிளாஸ்மாவின் வடிவத்தைக் காட்டுகின்றன. இந்த இன்யூய் சூரிய தொலைநோக்கி மூலம், சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புறப்பகுதியில் உள்ள காந்தப்புலங்களை வரைபடமாக்க முடியும்’  என தெரிவித்தார்.