கொரனா வைரஸ் பலமாக பரவுகின்றது, உலக நாடுகள் அச்சம்!

செவ்வாய் சனவரி 28, 2020

சீனாவில் உருவாகியுள்ள கொரனா வைரஸால் சீனாவில் 80 பேர் பலியாகியுள்ள நிலையில் பூகோள ரீதியில் 2,000 க்கும் மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கொரனாவைரஸ் பரவுவது பலமாகுவதாகவும், தொற்றாகுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கும் என சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரனாவைரஸ் பற்றி தகவலானது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழுவின் அமைச்சர் மா ஸியோவெய், செய்தியாளர் மாநாடொன்றில் கூறியுள்ளார்.

கொரனாவைரஸின் குணங்குறிகள் தென்படுவதற்கான காலமானது ஒன்றிலிருந்து 14 நாள்கள் வரையில் காணப்படலாமெனவும் குறித்த காலத்தில் தொற்று ஏற்படலாம் எனவும் மா ஸியோவெய் தெரிவித்துள்ளார்.

சீனாவில் 80 பேர் பலி, 2000 இற்கு மேற்பட்டோருக்கு தொற்று...

சட்டரீதியற்ற முறையில் காட்டுவிலங்குகளை விற்கும் மத்திய சீன நகரமான வுஹானிலுள்ள கடலுணவுச் சந்தையொன்றிலிருந்து கடந்தாண்டு இறுதியில் உருவாகியதாக நம்பப்படும் கொரனாவைரஸ் ஆனது தற்போது சீனத் தலைநகர் பெய்ஜிங், ஷங்காய் உள்ளிட்ட சீன நகரங்களுக்கும், ஐக்கிய அமெரிக்கா, தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், கனடாவுக்கு பரவியுள்ளது.

சந்தைகள், உணவகங்கள், மின் வணிகத் தளங்களில் காட்டுவிலங்குகளை விற்பனை செய்வதற்கான தேசியளவிலான தடையொன்றை இன்று சீனா அறிவித்திருந்தது.

கொரனாவைரஸ் பரம்பலை பூகோள சுகாதார அவசரநிலையொன்று என உலக சுகாதார ஸ்தாபனம் அழைக்காதபோதும் சீனாவால் இதன் பரம்பலைக் கட்டுப்படுத்த முடியுமா என சுகதார நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்நிலையில், நேற்று வரையில் கொரனாவைரஸால் 1,975 நோயாளர்கள் பீடிக்கப்பட்டுள்ளதாக இன்று உறுதிப்படுத்தியுள்ள சீனா, கொரனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 56ஆக உயந்துள்ளதாக அரச தொலைக்காட்சி சி.சி.டி.வி தெரிவித்துள்ளது. 

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதேவேளை, சீனாவிலிருந்து சிறிலங்காவுக்கு பயணிகளைக் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட வௌியேறும் பிரிவினூடாக வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் விசேட மருத்துவப் பிரிவினூடாக பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் விமான நிலையத்தின் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் அனைத்து ஊழியர்களையும் முகக்கவசத்தை அணிந்துகொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இதனிடையே கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றும் நேற்று (27) இடம்பெற்றது.