கொரோனா கட்டுப்பாட்டை மீறிய பிரஞ்சு நாட்டவர் நாடுகடத்தல் 

வியாழன் சனவரி 21, 2021

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக புத்தாண்டு விருந்து நிகழ்வை ஏற்பாடு செய்த பிரஞ்சு நாட்டவர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய எல்லைப்படை தெரிவித்திருக்கிறது. 

ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்த் மாநிலத்தின் Gympie பகுதியில்  சட்டவிரோதமான முறையில்  இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டதை காவல்துறையினர் அறிந்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பிரஞ்சு இளைஞரின் விசா ரத்து செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளார். 

1958ம் ஆண்டின் புலம்பெயர்வு சட்டத்தின் கீழ், ஆஸ்திரேலிய சமூகத்தின் சுகாதாரத்துக்கு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள வெளிநாட்டவரின் விசா ரத்து செய்யப்படவும் சம்பந்தப்பட்ட வெளிநாட்டவரை நாடுகடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. 

அந்த வகையில், கொரோனா காலத்தில் சுகாதார கட்டுப்பாடுகளை  மீறி கொண்டாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்து ஆஸ்திரேலிய சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக இந்த பிரஞ்சு நாட்டவர் நாடுகடத்தப்பட்டிருக்கிறார். 

ஆஸ்திரேலியர்கள் அல்லாத வெளிநாட்டவர்கள் இவ்வாறு குற்றச்செயலில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ள ஆஸ்திரேலிய எல்லைபப்டையின் தளபதி டர்பி, அதிலும் கொரோனா காலக் கட்டுப்பாடுகளை மீறி சமூகத்துக்கு பேரழிவை ஏற்படுத்துபவர்களை எல்லைப்படை சகித்துக் கொள்ளாது என அவர் எச்சரித்திருக்கிறார்.