கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது!

வெள்ளி மார்ச் 20, 2020

கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கரை காவல் துறையினர்  கைது செய்தனர்.

அனைத்து வகை நோய்களுக்கும் எளிய முறையில் மாற்றுமுறை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களையும் மருத்துவ ஆலோசனைகளையும் வெளியிட்டு வருபவர் ஹீலர் பாஸ்கர். கிட்டத்தட்ட அவரது பதிவுகள் அனைத்தும் மருத்துவத் துறையை நம்பக்கூடாது என்ற அடிப்படையில்தான் இருக்கும். இதனால் பலமுறை சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் குறித்து அவர் வெளியிட்ட ஆடியோ பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மக்களை கொல்லும் நடவடிக்கை என்றும், அரசு சொல்வதை கேட்க வேண்டாம் என்றும் அவர் பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர். அந்த பதிவை நீக்க வேண்டும் என்றும் பலர் கூறினர்.

இந்நிலையில், கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கரை கோவை குனியமுத்தூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாவட்ட கலெக்டருக்கு சுகாதாரத்துறை கடிதம் எழுதிய நிலையில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.