கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பூரண உடல் நலத்துடன் பிறந்த பெண் குழந்தை!

புதன் பெப்ரவரி 12, 2020

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பூரண உடல் நலத்துடன் பெண் குழந்தை பிறந்துள்ளது.

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் கடந்த வருட இறுதியில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 20-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. 

வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் வைரஸ் பரவியிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் முதலில் எறும்பு தின்னியிடம் இருந்துதான் பரவியிருக்க வேண்டும் என தற்போது கண்டுபிடித்துள்ளனர். 

இந்த வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,110 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 44 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அந்நாட்டின்  ஷாங்ஹுலு நகரில்  உள்ள மருத்துவமனையில் 33 வயது நிரம்பிய கர்ப்பிணி பெண் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணாமாக அனுமதிக்கப்பட்டார்.  அப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

 

தாய் மற்றும் குழந்தை  

 

ஆனால் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அப்பெண் ஷான் ஜீ மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவந்தது. 

இந்நிலையில், 37 வார கர்ப்பிணி பெண்ணான அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து உடனடியாக அந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். 

அதிர்ஷ்டவசமாக அந்த பெண் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதையும், குழந்தை பூரண உடல் நலத்துடன் இருப்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஒரிரு நாட்களுக்கு பின்னர் குழந்தைக்கு மீண்டும் வைரஸ் பரிசோதனை செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், தாயும், குழந்தையும் பூரண உடல் நடத்துடன் இருப்பதாகவும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

வுகான் மருத்துவமனையில் கடந்த வாரம் புதன் கிழமை பிறந்து 30 மணி நேரமே ஆன ஒரு குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.