கொரோனா பாதித்தவர்களிடம் புதிதாக தோன்றும் அறிகுறிகள்

சனி மே 09, 2020

லண்டன்: கொரோனா பாதித்தவர்களுக்கு சாதாரண அறிகுறிகள் இருந்தநிலையில், பின்னர் அறிகுறிகள் இல்லாமல் நோய் பரவியது. இப்போது இவை இல்லாமல் புதிய அறிகுறிகளுடன் கொரோனா பரவி வருவது தெரியவந்துள்ளது. இதனால் டாக்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொடக்க நிலையில், வறட்டு இருமல், தொண்டை எரிச்சல், தலைவலி, காய்ச்சல் ஆகியவை அறிகுறியாக இருந்தன. இந்நிலையில், கொரோனா வைரஸ் திடீரென அறிகுறி இல்லாமல் பரவ ஆரம்பித்தத. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானவர்கள், நோய் அறிகுறி இல்லாமல் இருந்ததுதான் ஆச்சரியமாக இருந்தது. இவர்கள் அறிகுறியின்றி நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் என்று பெயரிடப்பட்டனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை பெற்று மேலும் தீவிரம் அடைந்து பரவி வருகிறது. ஆனால், இப்போது கொரோனா புதுவித அறிகுறிகளுடன் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக ஐரோப்பிய மருத்துவர்கள் நடத்திய ஆய்வு குறித்து மருத்துவ இதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பருவ வயதினருக்கு, கால் பாதங்களில் அரிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. பாதத்தின் அடியிலும், பக்கவாட்டிலும் தோலின் நிறம் பழுப்பாக மாறுவது மற்றும் அரிப்பு ஏற்படுவது கொரோனாவின் அறிகுறியே என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சிலருக்கு கை மற்றும் விரல்களிலும் இதுபோன்ற அரிப்பு ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. இந்த புதிய அறிகுறிக்கு 'கோவிட் பாதம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதேபோல் கொரோனா வைரஸ் சுவாச மண்டலத்தின் மேல் பகுதியை பாதிக்கும்போது அதன் தொடர்ச்சியாக கண்கள் இளஞ்சிப்பாக மாறுவதும் கொரோனாவின் அறிகுறியாக கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்பெயின் டாக்டர்கள் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த ஓட்டம் தடை படுவதால் தோலின் நிறம் பழுப்பாகவோ அல்லது இளஞ்சிவப்பு பட்டையாக மாறுவதும் கொரோனாவின் அறிகுறியாக கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் மயக்கம் மற்றும் தலைவலி ஆகிய அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் டாக்டர்கள் மேற்கொண்ட ஆய்வில், உடல் எரிச்சலும் கொரேனாவின் அறிகுறியாக கண்டறியப்பட்டுள்ளது. உடலில் எதிர்ப்பு சக்தி உருவாவதன் அளவின் அடிப்படையில் இந்த அறிகுறி தென்படும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, அதிக அளவு எதிர்ப்பு சக்தி உருவாகும் பட்சத்தில் அது உடல் எரிச்சலை ஏற்படுத்தும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்படி புதுப்புது அறிகுறிகள் தென்படுவதால், கொரோனாவுக்கு எதிராக நிலையான அறிகுறிகள் குறித்து நோயாளிகளுக்கு எச்சரிக்கை விடுவதில் சிக்கல் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இவ்வாறு அந்த மருத்துவ இதழில் கூறப்பட்டுள்ளது.