" கொரோணா " தாண்டுவோம்!

சனி மார்ச் 28, 2020

இது இக்கட்டான தருணம். நோயை விட அச்சம் கொல்லும் பொழுது. எங்கும், எதிலும் கிரிக்கெட் ஸ்கோறைப் போல, தேர்தல் வாக்குகளைப் போல, ஒலிம்பிக் பதக்கங்களைப் போல புள்ளி விபரங்கள் நம்மைச் சுற்றி மிதந்து கொண்டிருக்கின்றன.

 பூட்டிய வீடுகளுக்குள், நாம் நிம்மதியற்று இருக்கிறோம். ஒரு பூச்சி ஊர்வதைப் போல, நமது உடல் அந்தரிக்கிறது. எல்லோருக்கும், எல்லோர் மீதும் பேரச்சம் படர்கிறது. ஒரு வியாதியைப் போல கைகளை கழுவத் தொடங்கியிருக்கிறோம். 

உணவுகளை வாங்கி வாங்கி பதுக்குகிறோம். குழந்தைகள், நம் பயத்தை உறிஞ்சுகின்றன. முதியவர்கள் விழி விரிய யோசிக்கிறார்கள். ஒரு தவிர்க்க முடியாத பீதி, எங்களை மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருக்கிறது.

இப்போது என்ன செய்யலாம்?

இந்த உறை மெளனத்தை உடைத்தெறிய வேண்டும். வீட்டை கலகலப்பாக்குவோம்.

ஒன்று சேர்ந்த விளையாட்டு
ஒன்று சேர்ந்த சுத்தப்படுத்தல்
ஒன்று சேர்ந்த படம் பார்த்தல்
ஒன்று சேர்ந்த ஞாபக மீட்பு

மெலடி பாடல்களை ஒலிக்க விடுவோம்.
பழைய அல்பங்களை பார்ப்போம்.
சிறுகதைகள் வாசிப்போம்.
டிஸ்கவரிப் படங்கள் பார்ப்போம்.
பழைய குறும்படங்கள்,
பழைய பாட்டு நிகழ்ச்சிகள்
பழைய நடனப் போட்டிகள்
பழைய பட்டிமன்றங்கள் என
தோண்டியெடுத்து ரசிப்போம்.
வடிவேலுவை, விவேக்கை, ரசிப்போம்.

துயரம் மறந்திருந்தல் கடினம் தான்.
வெளியே எரிகிற போது, உள்ளே உற்சாகமாயிருத்தல் எப்படியென்பது? நியாயம் தான்.

ஆனாலும், செய்து தான் ஆக வேண்டும்.

ஒரு மாரடைப்பை, ஒரு மூளை நரம்பு வெடிப்பை, ஒரு மன அழுத்தத்தை, ஒரு சர்க்கரை அதிகரிப்பை, குறைப்பை, ஒரு குருதித் தடையை என, எல்லாவற்றிலிருந்தும் நீங்கி இருத்தல் வேண்டுமெனில், நாமே நம் சூழலை மாற்றியாகவே வேண்டும்.

முடிந்தால், வாய் திறந்து ஒரு நம்பிக்கையின் பாடலை பாடுவோம். ஆடுவோம். ஒரு இசைக்கருவியில் உற்சாகம் மீட்டுவோம். ஒரு பச்சை ஓவியம் வரைவோம்.

சதுரங்கம், கரம் போட், காட்ஸ், தாயம், ஓரம்மா, நுள்ளுப்பிறாண்டி, டக்-டிக்-டொஸ் எதுவெனினும் விளையாடுவோம்.

ஓடும் வண்ண மீன்களை, துளிர்க்கும் வீட்டுச் செடியை, வளர்க்கும் செல்லப் பிராணியை ரசித்துக் களிப்போம்.

ஒரு கவிதையை, கடிதத்தை, நாட்குறிப்பை என, இலக்கியத் தரத்திற்குத் தயங்காமல் எழுதிப் பார்ப்போம்.

கோலம், தையல், ஒரு புது உணவு என ஏதும் புது முயற்சிகள் செய்து பார்ப்போம்.

இது
மனதை தைரியமாக்கும் காலம்.
நம்பிக்கைகளால் வீட்டை ஒளிர்விப்போம்.

"எதுவும் நிரந்தரமில்லை" என்பது உணர்வோம்.
நல்லவை நடக்குமென நம்புவோம்.

- தீபிகா-
27.03.2020
09.16 இரவு