கொரோனா: தாய்லாந்திலிருந்து நாடு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

வெள்ளி மே 29, 2020

 உலகெங்கும் கொரோனா அச்சம் நிலவிவரும் சூழலில், மியான்மர் தூதரகத்தின் ஏற்பாட்டில் தாய்லாந்திலிருந்து 210 மியான்மரிகள் நாடு திரும்பியுள்ளதாக பாங்காக்கில் உள்ள தொழிலாளர் விவகாரங்கள் தொடர்பான உயர்மட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. 

“இவர்கள் பல்வேறு சூழ்நிலைகளின் கீழ் நாடு திரும்பியிருக்கின்றனர். நாடு திரும்பிய பலர் வேலைகளை ராஜினாமா செய்தவர்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் வேலைகளை இழந்தவர்கள், விசா காலாவதியானவர்கள்,” எனக் கூறியுள்ளர் மியான்மரின் Kayin மாநில நாடாளுமன்ற உறுப்பினர் Thant Zin Aung.

விசா காலாவதியாகி இருந்த மியான்மரிகளும் முறையாக பதிவுச்செய்யாமல் தாய்லாந்தில் தங்கியிருந்தவர்களையும் நாடு திரும்ப தாய்லாந்து அரசு அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாய்லாந்திலிருந்து மியான்மருக்கு திரும்ப சுமார் 30,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மியான்மர் தூதரகத்திடம் பதிவுச்செய்துள்ளதாக மியான்மரின் Myawaddy மாவட்ட நிர்வாக அலுவலகத்திலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் கூறப்படுகின்றது. 

இவ்வாறு மியான்மருக்கு திரும்புபவர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் அங்கமாக 21 நாட்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.