கொரோனா வைரசின் முழுமையான, முப்பரிமாண மரபணு வரைபடம்!!

ஞாயிறு செப்டம்பர் 06, 2020

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் முழுமையான, முப்பரிமாண மரபணு வரைபடம் அண்மையில் உருவாக்கப்பட்டது.

அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தில், ஆன்னா மரி பைல் என்பவரின் தலைமையில் ஒரு ஆராய்ச்சிக்குழு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இடியாப்பம் போல, நீளமான, பலநுாறு உள் மடிப்புகளை கொண்டதாக அந்த வரைபடம் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 'சார்ஸ்-கோவ்-2' என்று மருத்துவர்களால் அழைக்கப்படும் கொரோனா வைரசின் மரபணுவிலுள்ள ஆர்.என்.ஏ., மூலக்கூறு, செல்களுக்குள் நுழைந்து தொற்றினை உருவாக்கிய பிறகு எப்படியான உருவத்தில் இருக்கும் என்பதை அளந்து அறிவதற்கு, பலவிதமான வேதியியல் உத்திகளை பயன்படுத்தவேண்டியிருந்தது என ஆன்னா மரி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இன்னும் புரியாத புதிராக இருக்கும் கொரோனா வைரசின் மரபணு கட்டமைப்பு முழுமையாக உருவாக்கப்பட்டு பொது வெளியில் போடப்பட்டுவிட்டது.

அடுத்து, உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், அந்த வரைபடத்தை வைத்து, எங்கெல்லாம் அந்த வைரசின் கட்டமைப்பில் பலகீனங்கள் உள்ளன என்பதை ஆராய்ந்து, அவற்றை தாக்க புதிய மருந்துகளை உருவாக்கலாம்.

அல்லது, அவை செல்களுக்குள் வெற்றிகரமாக நுழையாமல் தடுக்க, தடுப்பூசிகளை கண்டறியலாம்.