கொரோனா வைரசின் தாக்கமும் கோத்தபாய கொலைவெறி அரசும் - ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

செவ்வாய் மார்ச் 24, 2020

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என தமிழில் ஒரு முதுமொழி இருக்கின்றது. அந்த மொழிக்கு அர்த்தம் கொடுப்பவர்கள் சிங்களவர்கள்தான். இலை அசைந்தாலே புலி என கதறி  துப்பாக்கிகளை இயக்குகின்றவர்கள்தான் சிங்கள படைகள். கறுப்பு நிறத்தை கண்டால் கரும்புலி என அச்சமடைபவர்கள்தான் சிங்கள சிப்பாய்கள். பால்ராஜ், தீபன், விதுசா, துர்க்கா உள்ளிட்ட கட்டளை தளபதிகளின் பெயர்களை கேட்டால் களமுனையில் நிற்கும் சிங்கள படைகளுக்கு குலை நடுக்கம் வரும்.  அதேபோலத்தான், தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை பார்க்கும்போது சிங்கள காடையர்களுக்கு புலிகளின் நினைவு வந்திருக்கின்றது.

கொரோனோவையும் புலிகளையும் ஒப்பிடும் அளவிற்கு சிங்களத்தின் சிந்தனை மட்டமானதாயிருக்கின்றது. விடுதலைக்காக போராடிய புலிகளையும் கொடூரமான கொரோனோ வைரசையும் ஒரு நேர்கோட்டில் வைக்கின்றது சிங்களம்.

புலிகளை அழித்ததை போல கொரோனோவையும் அழிப்போம் என சூளுரைத்திருக்கின்றார் யஹகலிய ரம்புக்வெல்ல. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பாதுகாப்பு தொடர்பாக பேச்சாளராக இருந்து தமிழ் மக்களின் அழிவுகள் உலகின் காதுகளுக்கு எட்டவிடாமல் மூடி மறைத்தவரே இந்த யஹகலிய ரம்புக்வெல. ஆக, இவரும் சர்வதேசத்தின் பார்வையில் ஒரு போர்க்குற்றவாளிதான்.

உலகளாவிய ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் குறித்து இப்போது  தமிழர் தாயகத்திலும் மக்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சிறிலங்கா தீவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தால், தென்னிலங்கையை விடவும் வடக்கு - கிழக்கிலேயே இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. இதற்கு காரணம் பேரழிவு யுத்தம்.

சீனாவின் வுஹான் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்று இன்று உலகளாவிய ரீதியாக பரந்து சென்று கொண்டிருக்கின்றது. பல நாடுகள் இதை தடுப்பதற்கு கடும் முயற்சிகளை எடுத்து வருகின்ற போதிலும், அதன் தொற்று அதிகமாகவே உணரப்படுகின்றது.

சிறீலங்காவிலும் பலர் இதன் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தை பொறுத்தவரை கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கையை தாங்கள் தீவிரப்படுத்தியுள்ளனர் என அறிவித்துள்ளனர். அதன் ஒரு கட்டமாக இம்மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

தமிழ் மக்களை பொறுத்தவரை எந்த வைரசுக்கும் அவர்கள் அஞ்சியவர்கள் அல்லர். சிங்கள பேரினவாதம் என்ற பெரும் வைரஸ் அழித்ததைப்போல எந்த வைரசும் தமிழ் மக்களை அதிகம் அழிக்காது. 1948 ஆம் ஆண்டு தமிழர்களை அழிக்க ஆரம்பித்த சிங்கள பேரினவாத வைரஸ் 2009 ஆம் ஆண்டு அதி உச்சம் பெற்று இன்றுவரை அழிப்பை தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. ஏழு தசாப்தங்கள் தமிழர்களை இருண்ட யுகத்திற்குள் தள்ளிவிட்டிருக்கின்ற சிங்கள தேசம் இன்று கூட தன்னை திருத்திக்கொள்ள தயாராக இல்லை. மாறாக, கொரோனோ வைரஸ் இன்று அரசியலாக்கப்பட்டு வருகின்றது. இந்த வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் கூட சிங்கள தேசம் மீண்டும் ஒரு இன அழிப்பை மேற்கொள்ள தயாராகி வருகின்றது.

கொரோனோவால் பாதிக்கப்பட்ட சிங்களவர்களை தமது தேசத்தில் வைத்து பராமரிக்காமல் தமிழர் தேசத்தில் பராமரிப்பதற்கு முயற்சி எடுத்திருக்கின்றது. இந்த வைரஸ் சீனாவில் உருவாகியிருந்தாலும் ஈரான், இத்தாலி, தென்கொரியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்த நாடுகளில் அதிகளவானோர் கொரோனோவினால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். கொடிய உயிர்கொல்லி தொற்று நோயான இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். இல்லையயனில், அது ஏனையோருக்கு தொற்றிவிடும்.

இந்த நிலையில், மேற்படி பாதிப்பிற்குள்ளான நபர்களை தென்னிலங்கை வைத்தியசாலைகளில் அனுமதித்து சிகிச்சை வழங்குவதற்கு அங்குள்ள சிங்கள மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். அங்கு வைத்து சிகிச்சை வழங்கினால் தங்களுக்கும் அந்த நோய் தொற்றிவிடும் என்பதால் இதை தாங்கள் அனுமதிக்க மாட்டார்கள் என அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனால், அரசாங்கம் திடீரென தமது நடவடிக்கையை மாற்றி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாம் போன்ற தமிழர் பிரதேசங்களுக்கு கொரோனோ நோயாளர்களை அனுப்பியிருக்கின்றது. இந்த விடயத்தில்கூட சிறீலங்கா அரசும் சிங்கள தேசமும் தமிழின அழிப்பை மேற்கொள்ள கங்கணம் கட்டியிருக்கின்றன. சிங்களவர்களுக்கு எந்த துன்பமும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்ற அரசு, தமிழர்கள் விடயத்தில் எந்த அக்கறையும் எடுக்கவில்லை.

கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தேக ஆரோக்கியம் இல்லாதவர்களை கடுமையாக பாதிக்கும் என சுகாதாரத்துறை எச்சரித்திருக்கின்றது. கொரோனோ என்பதற்கு கொடூரமானது என்பது பொருள். இந்நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் இந்த வைரஸ் தொற்று ஏற்படுமாயின் இது இன்னுமொரு இன அழிவாகவே மாறும். காரணம், 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற யுத்தத்தால் தமிழர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இறுதி யுத்தத்தில் சிக்கிய தமிழர்கள் இரசாயன குண்டுகளின் தாக்கத்தால் உடற் பலவீனத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள். இவ்வாறானவர்கள் மத்தியில் கொடூரமானது என வர்ணிக்கப்பட்ட இந்த வைரஸ் தாக்குமாயின் அது பெரும் அழிவை ஏற்படுத்தும்.

சீனா, ஈரான், இத்தாலி மற்றும் தென்கொரிய நாடுகளை விடயும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.  இதனாலேயே மட்டக்களப்பு தமிழ் மக்கள் போராட்டங்களை ஆரம்பித்திருக்கின்றனர். தமது பிரதேசத்தில் கொரோனா நோயாளர்களை பராமரிப்பதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். எனினும், அரசு இதை தனது செவியில் வாங்கவில்லை. ஏனெனில், தமிழ் மக்களை அரசு மாக்களாவே கருதுகின்றது. தென்னிலங்கையில் கொரோனோ தடுப்பு மையம் வேண்டாம் என அந்த மக்கள் நடத்திய போராட்டங்களுக்கு செவி சாய்த்த சிங்கள அரசு, தமிழ் மக்களின் போராட்டங்களை கண்டுகொள்ளவேயில்லை.

சீனாவை பொறுத்தவரை, கொரோனோ தொற்றுக்குள்ளானோரை பராமரிப்பதற்கு என பத்து நாட்களில் ஒரு வைத்தியசாலையை கட்டி முடித்திருக்கின்றது. தனியான, ஒதுக்குப்புறமான இடத்தில் - பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத சூழலில் - குறித்த நோயாளர்கள் பராமரிக்கப்படுகின்றனர். இதேபோல, பரந்த நிலப்பரப்பு உள்ள தென்னிலங்கையில் மேற்படி நோயாளர்களை வைத்து பராமரிப்பதற்கு முடியுமாக இருக்கின்ற போதிலும், தமிழ மக்கள் செறிந்து வாழும் மட்டக்களப்பு மற்றும் வவுனியா போன்ற இடங்களுக்கு அவர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

சிங்கள அரசியல்வாதிகள் கொரோனோவை புலிகளுக்கு ஒப்பிட்டு பேசுகின்ற அளவுக்கு தமிழ் அரசியல்வாதிகள் மெளனமாக இருக்கின்றனர். தமிழ் மக்களுக்கு பாதிப்பில்லாத இடத்தில் குறித்த நோயாளர்களை வைத்து பராமரிக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டிய தமிழ் அரசியல்வாதிகள் அது குறித்து எதையும் பேசாமல், வரவிருக்கின்ற தேர்தலில் எப்படி வாக்கு பொறுக்க முடியும் என்பதையே சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.

தமிழர் தேசத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது, இது எதிர்காலத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தப்போகின்றது என்ற எந்த கவலையும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு அறவே இல்லை. தமிழர்களின் அழிவைப்பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை.

2009 ஆம் ஆண்டு, இறுதி யுத்தம் நடைபெற்றபோது இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராஜா உள்ளிட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தொலைபேசிகளையும் முடக்கிவைத்துவிட்டு அமைதியாக இருந்தனர். அதே போக்கையே இன்றும் கடைப்பிடிக்கின்றனர். சிங்களவர்களுக்கு ஆபத்து வரின் நீதிமன்று வரை சென்று அதற்கு நியாயம் பெற்றுக்கொடுக்கின்ற சுமந்திரன், தமிழர்களுக்கு ஆபத்து வரும்போது மட்டும் அமைதியாக இருக்கின்றார்.

சிங்களத் தலைவர்களிடம் சலுகைகளையும் சிங்கள மக்களிடம் மதிப்பையும்  பெற்றுக்கொள்வதற்காக அவர்களுக்கு விசுவாசமாக செயற்படுகின்ற சுமந்திரன் போன்றவர்கள், தமிழர்களுக்கு ஆபத்து வரும்போது மட்டும் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். இவர்கள் தமிழ் மக்களின் துரோகிகள். ஒற்றையாட்சிக்கும் பெளத்த மேலாண்மைக்கும் துணைபோகின்ற இவ்வாறான தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள். தமிழர் தேசத்தை விட்டு துரத்தப்படவேண்டியவர்கள்.

கொரோனா வைரஸ் தாக்கம் மிக தீவிரமாக உலகை ஆட்கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் தமிழர் தாயகத்தில் உள்ள மருத்துவத்துறை அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ இதுவரை தடுப்பு முன்னாயத்த நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. இது பாரிய ஆபத்தானது. அரசியல்வாதிகள் ஒருபுறம் இருக்க அரச அதிகாரிகள் இந்த விடயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றமை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஏற்கனவே, கூறியதைப்போன்று கொத்துக்குண்டுகள், இரசாயன குண்டுகளின் தாக்கத்தாலும் போசாக்கான உணவை பெற்றுக்கொள்ள வசதியீனத்தாலும், உணவு தவிரப்பு, தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களாலும் உடல் ஆரோக்கியம் குன்றி இருக்கின்ற தமிழ்த் தாய்மார்கள், பெரியவர்களை கொரோனா தாக்கக்கூடிய அபாயத்தை புறந்தள்ள முடியாது.

எனவே, உலகை அச்சுறுத்தும் கொரோனோவால் எமது தமிழர் தாயகத்து உறவுகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை துரிதமாக ஏற்படுத்துமாறு தமிழ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். சிங்களவன் அழிக்கத் துடிக்கின்ற எமது தமிழ் இனத்தை நாமே பாதுகாக்க வேண்டும். எமது இருப்பை நாம் தக்கவைக்க வேண்டும். இதற்காக புலத்திலும் நிலத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

தமிழ் மக்களின் விடுதலைக்கான யுத்தத்தை எதிர்கொள்கின்ற அதேவேளை, இயற்கையாக வரும் பாதிப்புக்களில் இருந்தும் எமது மக்களை பாதுகாக்கவேண்டும் என்பதை கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழீழ தேசியத் தலைவரும் தளபதிகளும் போராளிகளும் செயற்படுத்திக் காட்டினர். உலகின் பல நாடுகளை பேரழிவுக்கு உட்படுத்திய சுனாமி ஆழிப்பேரலை தாக்கத்தில் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுத்து பன்னாட்டு தலைவர்களிடம் நற்பெயரைப் பெற்றுக்கொண்டனர்.

இதுவே விடுதலை அரசியல், விடுதலை செயற்பாடு. எந்த இனத்திற்காக நாம் எங்களை அர்ப்பணித்திருக்கின்றோமோ அந்த இனத்திற்கு ஆபத்து வரும்போது விழித்தெழ வேண்டும். இதுவே தேசியத் தலைவரின் சிந்தனை. எனவே, உலகின் எந்த மூலையிலும் இருக்கின்ற தமிழர்கள் தங்களை பாதுகாக்கும் செயற்பாட்டில் இறங்குங்கள். அதேவேளை, தாயகத்தில் இருக்கும் உறவுகளிலும் அக்கறையுடன் செயற்படுங்கள்.  

நன்றி: ஈழமுரசு