கொரோனா வைரஸால் பிரேசிலில் தொடர் மரணங்கள்! உலக நாடுகள் அதிர்ச்சி-

வியாழன் ஏப்ரல் 08, 2021

கடந்த ஆண்டு தொடக்கத்தில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதனுடைய விஸ்வரூபத்தை காட்டியது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்த நிலையில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மரணம் நிச்சயம் என நிரூபிக்கும் வகையில் தொடர் மரணங்கள் உலகம் முழுவதும் இந்த வைரசால் அரங்கேறியுள்ளது.

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில் 2ம் இடம் வகிக்கிறது பிரேசில். அங்கு இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.30 கோடியை கடந்துள்ளது.

அதே போல அங்கு நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 80,000-க்கு மேல் பதிவாகி வருகிறது.

பிரேசிலில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 4125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை நேற்று தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 4000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது அந்நாட்டினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், பிரேசிலில் மொத்த பலி எண்ணிக்கை 333,153 ஆக அதிகரித்திருக்கிறது. விரைவில் பிரேசில் பலி எண்ணிக்கையில் அமெரிக்காவை கடந்து முதல் இடத்தை பிடிக்கும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்

பிரேசில் நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 66,570 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பதாகவும், இந்த எண்ணிக்கையானது முந்தைய மாதத்தைக் காட்டிலும் இருமடங்கு அதிகம் எனவும் கூறுகின்றனர்.

கொரோனா பரவலை தடுக்க தீவிரமாக செயல்பட்டு வரும் சர்வதேச சமூகத்தின் ஒட்டுமொத்த முயற்சிகளுக்கும் பிரேசில் அச்சுறுத்தலாக மாறிவிட்டதாக கொரோனா பரவல் குறித்து கண்காணித்து வரும் மருத்துவர் மிகூல் நிகொலெடிஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பிரேசில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிட்டால் இந்த உலகம் பாதுகாப்பாக இருக்க முடியாது, ஏனெனில் ஒவ்வொரு வாரமும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு வருகிறது. மேலும் இவை நாடுகளின் எல்லைகளை கடந்து செல்லப்போகிறது என்றார்.

பிரேசிலில் பெரும்பாலான மாகாணங்களில் கொரோனா நோயாளிகள் 90%க்கும் அதிகமான அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளை ஆக்கிரமித்திருப்பதாகவும், பல மாகாணங்களில் ஆக்சிஜன் மற்றும் மயக்க மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றன.

இருப்பினும் இந்த அபாயகரமான சூழலிலும் கூட பிரேசிலின் சில நகரங்களும், மாநிலங்களும் ஏற்கனவே மக்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எளிதாக்கி வருகின்றன என மருத்துவர் மிகூல் நிகொலெடிஸ் கூறினார்.

பிரேசிலில் மட்டும் 92 வகை கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர், இது கவலைகுரியதாக பார்கப்படுகிறது, ஏனெனில் இது மிகவும் வேகமாக பரவுக்கூடிய தொற்றுநோயாக கருதப்படுகிறது.

இதனிடையே ஜூலை 1-ம் திகதி வாக்கில் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தொடும் எனவும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.