கொரோனாவால் மூடப்பட்ட விசா அலுவலகம்: நிர்கதி நிலையில் அகதிகள்

வியாழன் டிசம்பர் 31, 2020

ஆஸ்திரேலியாவில் உள்ள 97 அகதிகளை கனடாவுக்கு வரவேற்க கனடாவில் உள்ள Vancouver குடியமர்த்தல் முகமை தயாராக உள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு தற்போதைய கொரோனா சூழல் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது. 

இந்த அகதிகளை கனடாவுக்குள் அனுமதிப்பதற்கான முதல்கட்ட விண்ணப்ப பணி நிறைவடைந்துள்ள நிலையில், சிட்னி நகரில் உள்ள கனடா விசா அலுவலகத்துக்கு அடுத்தக்கட்ட அனுமதிக்காக இந்த விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

“ஆனால், கொரோனா சூழல் இதனை அத்தனையும் மாற்றிவிட்டது,” என்கிறார் அகதிகளுக்கான ஏற்பாட்டை மேற்கொள்ளும் சலீம் ஸ்பிண்டரி.

கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக, கனடா விசா அலுவலகம் மூடப்பட்டு விட்டதால் 97 அகதிகள் விண்ணப்பங்களை தற்போது பரிசீலிப்பது சாத்தியமற்றதாகி உள்ளது. 

“இதில் சிலர் 2013ம் ஆண்டு முதல் மோசமான சூழலுக்கிடையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்ளனர்,” எனக் கூறுகிறார் சலீம். 

இந்த நிலையில், இந்த பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார் அகதிகள் மீள்குடியேற்றத்திற்கான ஏற்பாட்டை மேற்கொண்டு வரும் சலீம்.