கொரோனாவிலிருந்து மீண்ட நபர்!

புதன் ஏப்ரல் 08, 2020

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் 287 நபர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 35 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 174 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ளவர்களின் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. முன்னச்சரிக்கை நடவடிக்கையாக 3,057 பேர் வீட்டுத்தனிமையில் கண்காணிக்கப்படுகின்றனர். 

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகால் விவேகானந்தா நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கடந்த மாதம் துபாயிலிருந்து கோவா வழியாக கர்நாடகா வந்துள்ளார். கொரோனா அறிகுறியுடன் இருந்த இவரை பரிசோதனை மேற்கொண்டதில் கடந்த மார்ச் 21-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மைசூரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் நபர் இவரே.

கர்நாடக அரசின் மைசூரு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 18 நாள்களாக தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா பிடியிலிருந்து மெல்ல மீண்டுவந்தார். முழு குணமடைந்த அந்த நபர் நேற்று வெற்றிகரகமாக வீடு திரும்பினார்.

 

கொரோனாவிலிருந்து முழுவதுமாக குணமடைந்துவிட்டாலும், தொடர்ந்து வீட்டுத் தனிமையில் 14 நாள்கள் கண்காணிக்கப்படுவார் என மைசூரு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு எதிராக இரவு, பகலாகப் போராடிவரும் மருத்துவப் பணியாளர்களுக்கு இந்த சம்பவம் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.