கொரோனாவினால் ஆஸ்திரேலியா திரும்ப முடியாமல் தவிக்கும் ஆஸ்திரேலியர்கள் 

வியாழன் செப்டம்பர் 17, 2020

 ஆஸ்திரேலியாவுக்குள் வாரம் 4,000 வெளிநாட்டு வருகைகளை மட்டுமே அனுமதிப்பது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலையின்றி, விசாயின்றி, முறையான மருத்துவ வசதியின்றி நாட்டுக்கும் திரும்ப முடியாமல் ஆயிரகக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் தவித்து வருகின்றனர். உலகின் ஒன்பதாவது வலிமையான கடவுச்சீட்டை அவர்கள், தங்கள் (ஆஸ்திரேலிய) அரசு கொரோனா பெருந்தொற்று சூழலில் கைவிட்டு விட்டதாக கவலைத் தெரிவிக்கின்றனர். 

ஆஸ்திரேலியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்நோக்கியிருந்த நிலையில், வாரம் 4 ஆயிரத்திற்கு குறைவான வருகைகள் மட்டுமே அனுமதிக்கப்படும என்ற கட்டுப்பாட்டை கடந்த ஜூலை மாதம் முதல் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிமுகப்படுத்தியிருந்தார். 

கடந்த ஜூலை மாதம் முதல் பொருளாதார ரீதியாக மற்றும் சுகாதார ரீதியாக நலிவடைந்த 25,000 ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்ப பதிவுச் செய்துள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவு விவகாரங்கள் மற்றும் வரத்தகத் துறை தெரிவிக்கிறது. ஆனால், ஆஸ்திரேலியாவின் விமான பிரதிநிதிகள் குழுவின் கணக்கு சுமார் 1 லட்சம் ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளில் தவிக்கக்கூடும் என்கிறது.

இதற்கு முன்னதாக கடந்த மார்ச் முதல் கடுமையான கொரோனா பயணக் கட்டுப்பாடுகளை விதித்த ஆஸ்திரேலிய அரசு, வெளிநாட்டினர் நாட்டுக்குள் நுழையவும் ஆஸ்திரேலியர்கள் நாட்டைவிட்டு வெளியில் செல்லவும் முழுமையான தடை விதித்தது. இந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியர்களும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமைப் பெற்றவர்கள் மட்டும் நாட்டுக்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

ஆஸ்திரேலிய வெளியுறவு விவகாரங்கள் துறையின் கணக்குப்படி, சர்வதேச எல்லை மூடப்பட்டிருந்த முதல் மூன்று மாத காலத்தில் 357,000 ஆஸ்திரேலியர்கள் ஆஸ்திரேலியா திரும்பியிருக்கின்றனர். இந்த சூழலில், தற்போது நாடு திரும்ப முயலும் ஆஸ்திரேலியர்கள் பெருந்தொற்று சூழலுக்கு முன்பே நாட்டைவிட்டு வெளியில் சென்றவர்கள் என்றும் எவரும் விடுமுறைக்கால சுற்றுலா சென்றவர்கள் இல்லை எனவும் கூறப்படுகின்றது. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் பணியாற்றி வந்த ஆஸ்திரேலியரான ஸ்டீபன் ஸ்பென்சர் தனது வேலையை இழந்திருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளார். அபுதாபியில் உள்ள தனது குடும்பத்திற்கு பொறுப்பாளராக உள்ள ஸ்டீபன், தனது குடும்பத்தினருக்கான விசாவை ரத்து செய்யும் பட்சத்தில் 30 நாட்களுக்குள் அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேற வேண்டும். 

“ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கான விமானம் கிடைக்கவில்லை எனில், எந்தவித சட்ட உரிமையும் இல்லாமல் நாங்கள் அபுதாபியில் அகதிகளாக தான் வாழவேண்டும்,. வெளிநாடுகளில் உள்ள தங்கள் மக்களை ஆஸ்திரேலிய அரசு இவ்வளவு சீக்கிரத்தில் கைவிட்டுவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை,” எனக் கூறியுள்ளார் ஸ்டீபன்.