கொரோனாவுடன் நீண்டகாலத்துக்கு நாம் வாழ வேண்டியுள்ளது

திங்கள் நவம்பர் 16, 2020

“நீண்ட நாட்களுக்கு நாங்கள் coronavirus உடன் வாழ வேண்டும் என்றும் இதற்காக நாங்கள் வரும் கோடை காலம் வரை சில நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்” என்று Le monde பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் பிரான்ஸ் பிரதமர் Jean Castex தெரிவித்துள்ளார்.

“தடுப்பூசி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு அது மக்களுக்கு ஏற்றப்பட்டு வெற்றி அளித்தால் மட்டுமே நாங்கள் எங்களுடைய முயற்சிகளை குறைக்கலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு உண்மை என்னவென்றால் கொண்டாட்டங்கள் ஒன்று கூடல்கள் குடும்ப ஒன்று கூடல்கள் மண்டபங்களில் நடைபெறும் விழாக்கள் கொண்டாட்டங்கள் என்பவை நீண்ட நாட்களுக்கு நடைபெற மாட்டாது!

அருந்தகங்கள், உணவகங்கள் போன்றவை கொரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய இடங்களாக இருக்கின்றன.

இதனால் அவை டிசம்பர் மாதம் முதலாம் திகதி திறக்கப்பட மாட்டாது.

பண்டிகைக் காலங்களில் சிறுவர் – சிறுமியர்களுக்காக விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் திறக்கப்பட இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு எனத் தெரிவித்த பிரதமர், தடுப்பூசி சந்தைப்படுத்தப்படுவதற்கு நீண்ட நாட்கள் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த வாரம் வெளியான கருத்துக் கணிப்பில் பிரஞ்சு மக்கள் 59 வீதமானவர்கள் தான் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையிட்டு பிரதமர் கவலை தெரிவித்திருந்தார். நாட்டிலுள்ள அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.