கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவு!

வியாழன் ஓகஸ்ட் 04, 2022

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐந்தாம் திகதி மாலை ஐந்துமணிக்கு முன்னர் அந்த பகுதியிலிருந்து வெளியேறவேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளமை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கரிசனை வெளியிட்டுள்ளது.

பொதுஇடங்களில் அமைதியாக ஒன்றுகூடலிற்கான மக்களின் உரிமைகளை அதிகாரிகள் மதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை அகற்றுவதற்கு பலத்தை அச்சுறுத்தலை அதிகாரிகள் பயன்படுத்தக்கூடாது எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவர்களை தொடர்ச்சியாக கைதுசெய்வதன் மூலம் அதிகாரிகள் அரசாங்கத்திற்கு எதிரான குரல்களிற்கு எதிரான ஒடுக்குமுறைகளை மோசமாகவும் வேகமாகவும் முன்னெடுத்துள்ளமை குறித்து கவலை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை அமைதியாக ஒன்றுகூடுவதற்கு தங்களிற்கு உள்ள உரிமையை பயன்படுத்தியமைக்காக மாத்திரம் கைதுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை அதிகாரிகள் விடுதலை செய்து அவர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

குற்றவியல் தவறுகள் இழைக்கப்பட்டன என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இருந்தால் சர்வதேச உரிய நடைமுறை மற்றும் நியாயமான விசாரணை தராதரங்களிற்கு ஏற்ப ஒவ்வொரு குற்றச்சாட்டையும் தனித்தனியாக விசாரணை செய்து குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

கருத்துச்சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடலிற்கான உரிமைகளை இலங்கை அரசாங்கம் மதிக்கவேண்டும் பாதுகாக்கவேண்டும் ஊக்குவிக்கவேண்டும் மக்கள் தங்கள் சுதந்திரத்தை அமைதியாக அனுபவிப்பதற்கு அனுமதியளிக்கவேண்டும்,எனவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு தெரிவித்துள்ளது.