கொட்டைப் பாக்குக்கு விலைகூறும் சம்பந்தன் - பிலாவடி மூலைப் பெருமான்

புதன் நவம்பர் 27, 2019

வணக்கம் பிள்ளையள்.

மானமுள்ள எல்லோருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

என்னடா கிழவன் புதுசா எல்லோருக்கும் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லுது என்று தலையைச் சொறிய வேண்டாம். இன்றைக்கு எங்கடை தேசியத் தலைவரின்ரை பிறந்த நாள் மட்டுமில்லை பிள்ளையள். இன்றைக்குத் தான் மானமுள்ள ஒவ்வொரு தமிழர்களும் பிறந்த நாள் பாருங்கோ. தம்பி பிரபாகரன் பிறக்கும் வரைக்கும் ஒரு அடிமை இனமாக இருந்த எங்கடை இனம், தம்பிக்குப் பிறகு தான் தலைநிமிர்ந்தது. அந்த வகையில் மானமுள்ள ஒவ்வொருத்தரும் மறுபிறவி எடுத்த நாள் என்றால் அது இன்றைக்குத் தான் பாருங்கோ.

சரி, விசயத்துக்கு வாறன். ஒரு மாதிரி ஒரு தேர்தல் திருவிழா முடிஞ்சு போய்ச்சுது. ஆனால் இதோடு எங்கடை கூத்தமைப்புக்காரர் சும்மா இருக்கப் போகிறதில்லை பிள்ளையள். இனி அடுத்தது நாடாளுமன்றத் தேர்தல் வரும். அதுக்குப் பிறகு மாகாண சபைகளுக்குத் தேர்தல் வரும். இப்படி இருக்கேக்குள்ளை அவையளாலை சும்மா இருக்க முடியுமே?

அது தான் இனி எங்கடை மாவீரரின்ரை தியாகத்தை வைச்சுக் கொண்டு இனி அரசியல் செய்ய வெளிக்கிடுவீனம். இருந்து பாருங்கோ பிள்ளையள், நாளைக்கு மாவீரர் நாளை வைச்சு என்ன மாதிரி உந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர் அரசியல் செய்யப் போகிறாங்கள் என்று. இப்ப எனக்கு இருக்கிற கேள்வி என்னவென்றால், எப்ப தமிழீழத் தனிநாட்டை எங்கடை சம்பந்தன் ஐயா பிரகடனம் செய்யப் போகிறார் என்பது தான்.

ஒற்றையாட்சிக்குள் சமஸ்டி, அடுத்த தீபாவளிக்குள் அரசியல் தீர்வு, உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு, அது இது என்று கடந்த ஐந்து வருசமாக முழங்கித் தள்ளின எங்கடை சம்பந்தன் ஐயா, நடந்து முடிஞ்ச தேர்தலுக்கு முதல் சொன்னவர், தேர்தலில் சஜித் தோல்வியடைந்து தமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டால் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோருவதற்குச் சர்வதேச சட்டங்களின் கீழ் தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு என்று. இப்ப சஜித் பிரேமதாசாவும் கவிண்டு கொட்டுண்டுட்டார்.

சமஸ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எப்பவோ கோத்தபாய மாத்தையாவும் அறிவிச்சுப் போட்டார். பிறகென்ன? இனித் தனிநாட்டைப் பிரகடனம் செய்ய வேண்டியது தானே. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன் பிள்ளையள். இனி யாரும் போய் சம்பந்தன் ஐயாவிட்டை தனிநாட்டுப் பிரகடனம் பற்றிக் கதைச்சுப் பாருங்கோ. வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொன்ன கதையாகத் தான் சம்பந்தன் ஐயாவின்ரை பதில் இருக்கும் பிள்ளையள்.

பின்னை என்ன?

தமிழீழத் தனிநாட்டுக் கோரிக்கைக்கு அடிப்படையாக இருக்கிற முதலாவது அரசியல் ஆவணம் வட்டுக்கோட்டைத் தீர்மானம். ஆனால் உதைப் போய் சம்பந்தன் ஐயாவிட்டைக் கதைச்சால் மனுசன் உங்களிட்டைக் கட்டாயம் கொட்டைப் பாக்கைத் தந்து அதுக்கு காசு பிடுங்குகிற வழியைத் தான் பார்க்கும். இல்லையயன்றால் புத்தி கெட்ட சம்பந்தன் என்கிற ராஜாவுக்கு, ஒரு மதி கெட்ட மந்திரி என்ற கதையாக இருக்கிற எங்கடை சுமந்திரன் மாத்தையா, சிறீலங்கா அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளை எடுக்கப் போவதாக தேர்தல் முடிந்த கணமே அறிவிப்பாரே? மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம் என்ற கதையாக, ஆடும் வரைக்கும் ரணில் மாத்தையாவோடு ஆடிப் போட்டு இப்ப கோத்தபாயவோடு கொட்டமடிக்கிறதுக்கு கூட்டமைப்பு தயாராகுமே?

ஆனால் நாட்டில் இருக்கிற எங்கடை சனம் தான் பாவம் பிள்ளையள். நான் எங்கடை சனம் என்று சொல்கிறது தமிழ் மக்களை மட்டுமன்றி, எங்கடை தமிழ் பேசுகின்ற முசுலிம் சகோதரர்களையும் சேர்த்துத் தான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம் காங்கிரசும் சொன்னதைக் கேட்டு எங்கடை தமிழர் தாயகத்தில் வசிக்கிற மக்களில் எண்பது வீதமான ஆட்கள் சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களிச்சு இருக்கீனம். சஜித் வந்தால் அரசியல் தீர்வு கிடைக்கும், சிங்கள - பெளத்த பேரினவாதத்தை மனுசன் அடக்குவார், தமிழ் - முசுலிம் மக்கள் நினைச்சால் கோத்தபாயவை ஆட்சிக்கு வராமல் தடுக்கலாம் என்றெல்லாம் உந்த பாழாய்ப் போன அரசியல்வாதிகள் சொன்னதை நம்பி சஜித்திற்கு வாக்களிச்சுப் போட்டு பாழ்படுவான் இனி என்ன செய்வான் என்று தெரியாமல் இன்றைக்கு எங்கடை தமிழ் பேசுகின்ற சனம் பதற்றத்திலை முழுசிக் கொண்டு இருக்குது.

பேய்க்குச் சிரிச்சாலும் கோபம் வரும், அழுதாலும் கோபம் வரும் என்ற கதையாக இனித் தமிழர்களும் சரி, தமிழ் பேசும் முசுலிம்களும் சரி என்ன செய்தாலும் கோத்தபாய ஈவிரக்கம் இல்லாமல் கொல்லுவான். கடைசியாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கின்ற தகவல்களின் படி, கிழக்கில் முசுலிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடங்கிறதுக்கும், வடக்கில் சிங்களக் குடியேற்றங்களையும், புத்த விகாரைகளையும் நிறுவுவதற்குமான ஏற்பாடுகளில் கோத்தபாய இறங்கியிருக்கிறதாகத் தெரிய வருகுது.

இனி வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதை தான்.

பேசாமல் தேர்தலைப் புறக்கணிச்ச ஆறரை இலட்சம் தமிழ் - முசுலிம் உறவுகளோடு சேர்ந்து எங்கடை ஏனைய தமிழ் - முசுலிம் மக்களும் தேர்தலைப் புறக்கணிச்சிருந்தால் சர்வதேசத்திற்காவது ஒரு அழுத்தம் திருத்தமான செய்தியைச் சொல்லியிருக்கலாம்.

ஈக்களிடமிருந்து மன்னரைக் காப்பாற்றப் போர் வாளை எடுத்த முட்டாள் தளபதி போல் எங்கடை கிழட்டுச் சம்பந்தன் செய்த முட்டாள்தனமான காரியத்தால் இப்ப முழுசிக் கொண்டிருக்கிறது எங்கட சனம் தான்.

ஏதோ, மாவீரர்கள் தான் எங்கடை சனத்துக்குத் துணை நிற்க வேண்டும்.

வரட்டே?

நன்றி: ஈழமரசு