கோட்டாபாய விலகிய பின்னர்…?

ஞாயிறு ஜூலை 10, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இவர், கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி ஜனாதிபதியாகிய நிலையில் தற்போது அவருடைய பதவிக்காலம் 2ஆண்டுகளும் 7மாதங்களும் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் நிறைவுக்கு வரவுள்ளது.

இவ்வாறு ஜனாதிபதியொருவர் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக விலகினால் அடுத்த நடைமுறை என்னவென்பது குறித்து 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 40ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி பதவியானது பதவிக்காலம் முடிவதற்குள் வெற்றிடமாகும்போது 40ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒரு சிறப்பு நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.
அதன்படி ஜனாதிபதியின் வெற்றிடமான பதவியை நிரப்புவதற்கு, ஜனாதிபதி பதவி விலகிய ஒரு மாதத்திற்குள் பாராளுமன்றம் அதன் உறுப்பினர்களில் ஒருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதேநேரம், ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தால், ஜனாதிபதி இராஜினாமா செய்த மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட வேண்டும்.

அத்தகைய கூட்டத்தில், ஜனாதிபதியின் இராஜினாமா குறித்து பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் பாராளுமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் மற்றும் காலியாக உள்ள ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்களை பெறுவதற்கான திகதியை நிர்ணயிக்க வேண்டும்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே ஜனாதிபதியின் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டால், அந்த நபர் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக செயலாளர் நாயகத்தால் அறிவிக்கப்படுவார்.

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பரிந்துரைக்கப்பட்டால், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல்கள் பற்றி 1981ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமானது, பாராளுமன்றத்தால் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக் குறிப்பிடுகிறது.

அதனடிப்படையில், ஜனாதிபதியின் அலுவலகம் வெற்றிடமாகி புதிய ஜனாதிபதி பதவியேற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், தற்போதைய பிரதமர் பதில் ஜனாதிபதியாக செயற்படுகிறார்.

இந்த காலகட்டத்தில், அமைச்சரவையின் அமைச்சர்களில் ஒருவர் பிரதமரின் அலுவலகத்தில் செயற்படுவதற்காக நியமிக்கப்படுவார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மீதமுள்ள காலத்திற்கு பதவியில் இருக்க முடியும்.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி கோட்டாபய தனது பதவியை இராஜினாமா செய்யும் பட்சத்தில், ஒருமாத காலத்திற்குள் புதிய ஜனாதிபதியை பாராளுமன்றம் கூடித்தெரிவு செய்யும் வரை ரணில் விக்கிரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்பார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் பதவி விலகுமாறு கட்சித்தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அழுத்தம்பிரயோகித்து வருகின்றனர். ஜனாதிபதி விலகிய பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகினால் தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

அரசியலமைப்பில் அதற்கான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. எனினும், சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்படவுள்ளதாயின், அந்த அரசாங்கம் உருவாக்கப்படும் வரையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகாது இருப்பாராயின் அவரே தற்காலிக ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்கத் தகுதியானவர் ஆகின்றார்.