கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

புதன் நவம்பர் 20, 2019

 கோத்தபாய ராஜபக்சவுக்கு விடுத்துள்ள அழைப்பை இந்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் 23-ந் திகதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்சவை இந்தியாவுக்கு வருமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அதை ஏற்று அவரை 29-ந் திகதி டெல்லி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய அரசு தனது அழைப்பை திரும்பப்பெறவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.

2009-ம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முதன்மையான காரணம் அன்றைய ராணுவ ஆலோசகராக இருந்த கோத்தபாய ராஜபக்ச தான். பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி என அவர் மக்களால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இன்று அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பதால் ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணை நடக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் அவசர அவசரமாக இந்திய அரசு கோத்தபயவுக்கு இந்தியா வர அழைப்பு விடுத்துள்ளது. இது ஈழத்தமிழர்களை மட்டுமன்றி இந்திய தமிழர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கோத்தபாய ராஜபக்சவுக்கு விடுத்துள்ள அழைப்பை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 23-ந் திகதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும். கோத்தபயவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.