கோத்தபாயவின் வெறித்தனங்களை சர்வதேசத்தின் காதுகளுக்கு கொண்டு செல்லும் பொறுப்பு யார் கையில்?

சனி சனவரி 11, 2020

இலங்கைத்தீவு சிங்கள மக்களுக்கு மாத்திரமே உரிய நாடு என்பதையும் தமிழர்கள் விரும்பினால் இங்கு வாழ முடியும் என்பதையும் சிங்களக் கடும்போக்குவாதியும் தமிழின இனப்படுகொலைக் குற்றவாளியும் ஆகிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மீண்டும் ஒரு தடவை தெளிவாக உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் அதிகப்படியான வாக்குகளால் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட கோத்தபாய ராஜபக்ச, கடந்த 03 ஆம் திகதி தனது தலைமையில் புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே இலங்கைத் தீவில் சிங்கள மக்களுக்கான தனித்த உரிமை பற்றிய அறிவிப்பை மீள வலியுறுத்தினார்.

இலங்கைத் தீவில் ஒற்றையாட்சியை எப்போதும் பாதுகாப்பார் எனக் கூறிய கோத்தபாய, பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க மாட்டார் எனவும் கூறியிருக்கின்றார்.

தேர்தல் வெற்றிக்கு பின்னர், ஏலவே நாடாளுமன்ற அமர்வைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் இருந்த போதிலும், அதைப் பிற்போட்டுவந்தார் கோத்தபாய. இதுவரை ஆட்சி செய்த ஜனாதிபதிகள் அத்தனை பேருக்குள்ளும் தன்னை முற்போக்குவாதியாகக் காட்டிக்கொள்வதற்கு கோத்தபாய விரும்புகின்றார்.

சிறீலங்கா நாடாளுமன்ற சம்பிரதாயங்கள், பொது வெளியில் செயற்படும் சம்பிரதாயங்களைக்கூட அவர் மாற்றியமைத்திருக்கின்றார்.

போர்க்குற்றங்களில் இருந்து விடுபட்டு தன்னைப் புனிதவானாகக் காட்டிக்கொள்ள அவர் விளைகின்றார்.

சிறீலங்கா ஜனாதிபதியாகக் கோத்தபாய பதவியேற்றதில் இருந்து நாடாமன்றில் அக்கிராசன உரை ஆற்றும் வரையான காலத்தில் எந்தவொரு இடத்திலும் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எந்தவொரு வார்த்தைகளையும் வெளிப்படுத்தவில்லை. நாடாளுமன்றில் கன்னியுரையான அக்கிராசன உரையிலும் தமிழ் மக்கள் தொடர்பாக அவர் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.

ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவுடன் முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்குச் சென்ற கோத்தபாயவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து உரையாடினார்.

அப்போது, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விடயத்தில் கருத்துக்களை முன்வைத்த மோடி, 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அவசியத்தையும் எடுத்துரைத்திருந்தார்.

ஆனால், மோடிக்கு நேரடியாக - முகத்துக்கு முன்னால் - பதிலிறுப்பதைத் தவிர்த்துக்கொண்ட கோத்தபாய, சந்திப்பை முடித்துக்கொண்டு, இந்தியாவில் இருந்து திரும்புவதற்கு முன்னர், இந்தியாவில் வைத்தே மோடியின் கருத்தை நிராகரித்திருந்தார். 13 ஆவது திருத்தச்சட்டத்தின் சில சரத்துக்கள் தற்போதும் சிறீலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது எனக் கூறிய அவர், குறித்த திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்தார்.

பிராந்திய வல்லரசின் வேண்டுகோளை, அதுவும் அந்த வல்லரசுக்கும் சிறீலங்காவிற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட வலுவான ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாது என கோத்தபாய அறிவித்தமை குறித்து இந்தியா இதுவரை எந்தவித வெளிப்பாட்டையும் காட்டவில்லை.

நீடித்து, நீறுபூத்த நெருப்பாக எரிந்துகொண்டிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைக்காணுமாறு இந்தியா மட்டுமன்றி பன்னாடுகளும் சிறீலங்காவின் புதிய ஆட்சிபீடத்திடம் கோரிக்கை விடுத்துவருகின்றன. ஆனால், சிங்கள ஆட்சியாளர்களால் அத்தனை கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டே வருகின்றன. இதுவரை இருந்துவந்த ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் விடயத்தில் கருத்தியல் ரீதியாகவேனும் வெளிப்பாடுகளை மேற்கொண்ட போதிலும், கோத்தபாய ராஜபக்ச தமது கடும்போக்கு மனப்பதிவை மட்டும் வெளிக்காட்டுகின்றார்.

சிறீலங்காவின் தற்போதைய ஆட்சி குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கடும் விசனத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் நாடாளுமன்ற அக்கிராசன உரை தொடர்பாகவும் கூட்டமைப்பு ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை முன்னைய மகிந்த ராஜபக்ச ஆட்சியில் மறைமுகமாக அரசை எதிர்ப்பது போல நடித்துக்கொண்டு அந்த அரசின் சலுகைகளை அனுபவித்தனர். இதனால் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டது. மைத்திரி - ரணில் அரசாங்கத்தில் நேரடியாகவே அரசை ஆதரித்து, அரசின் அதிகூடிய சலுகைகளை அனுபவித்தனர். ஆனால், தற்போது கோத்தபாய ராஜபக்சவால் கூட்டமைப்பினர் நிராகரிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதனாலேயே அவர்கள் கவலை, ஏமாற்றம் எனக் கூறித்திரிகின்றனர்.

இன அழிப்பு இடம்பெற்ற நாடொன்றில், கடும்போக்குவாதிகளின் அரசாங்கத்தினது செயற்பாடுகள் அந்த நாட்டின் மீது சர்வதேசத் தலையீட்டை அதிகரிக்க உதவும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. தற்போது சிறீலங்கா மீது சர்வதேசத் தலையீட்டை உள்ளீர்ப்பதற்கான காலம் கனிந்துள்ளது.

தமிழ்த் தரப்பு இந்தச் சூழ்நிலையைச் சரியாகப் பயன்படுத்தப்போகின்றதா?

என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கான நெருக்கடிகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. 

பாதுகாப்பு நெருக்கடிகள் இறுக்கமாக்கப்பட்டுள்ளன. ஈ.பி.டி.பி உள்ளிட்ட அரச ஒட்டுக்குழுக்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. ஈ.பி.டி.பியை விட்டு விலத்திவைக்கப்பட்ட கமலேந்திரன், திரிலோகநாதன் உள்ளிட்ட கொலைகாரர்கள் மீண்டும் கட்சியில் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வாளர்கள் மீண்டும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு
வருகின்ற தமிழ்த் தேசிய எழுச்சியை அடக்குவதிலும், போராட்டங்களை முடக்குவதிலும் கோத்தபாய அரசுக்கு இவர்கள் தீவிர பங்களிப்பை வழங்கிவருகின்றனர்.

வீதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வழிமறிப்புக்கள், திடீர் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய சந்திகளில் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அரசின் உத்தியோகபூர்வ வர்த்தமானிப் பத்திரிகை அறிக்கை மூலம் நாட்டின் பாதுகாப்பு முப்படையினரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறீலங்காவில் ஜனநாயக ஆட்சி என்பது குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது.

20 வருடங்களாக சிறீலங்கா இராணுவத்தில் பணியாற்றிய கோத்தபாய ராஜபக்ச ஆட்சிப்பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து படையினருக்கான சலுகைகளும் அதிகாரங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆக, இலங்கைத் தீவில் தற்போது இராணுவ ஆட்சியே நடைபெற்றுவருகின்றது என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

இந்த விடயத்தை சர்வதேசத்தின் காதுகளுக்கு கொண்டுசெல்லும் பொறுப்பை எடுக்கப்போவது யார்?

இந்த விடயத்தில் புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழர் கட்டமைப்புக்களின் பொறுப்பு என்ன?

தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்பு என்ன?

தாயகத்தில் உள்ளவர்களையும் புலம்பெயர் தேசத்தவர்களையும் ஒருங்கிணைக்கப்போவது யார்? தாயகம், தேசியம் சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ந்து உறுதியோடு குரல்கொடுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வகிபாகம் என்ன? இந்தக் கேள்விகள் தமிழ் மக்களிடம் எழுந்திருக்கின்றன.

இலங்கைத் தீவில் குறிப்பாக தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது சிங்கள பேரினவாதத்தின் திட்டமிட்ட செயற்பாடு. பெளத்த சிங்கள நாடு என்ற கோசத்துடன், ஒன்றையாட்சித் தத்துவத்தில் செயற்படும் சிறீலங்கா அரசாங்கத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சர்வதேச சட்டங்கள் இருக்கின்றன.

மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்டது இன அழிப்பு யுத்தம் என்பதை சர்வதேச நாடுகளே ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றன.

தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட இன அழிப்பு நடைபெற்றது என்பதை சர்வதேச நாடுகளின் மனித உரிமை அமைப்புக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும் அவர்கள் அதை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர்.

ஜனநாயக நாடொன்றுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது என்பது அவர்களின் கருத்தாக இருக்கின்றது. ஆனால், சிறிலங்காவில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சி அல்ல, அரசின் உத்தியோகபூர்வ பத்திரிகை மூலம் இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பதை  ஆதாரங்களுடன் சர்வதேச சமூகத்திற்குக் கொண்டுசெல்ல முடியும்.

பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதை விடுத்து, தாயகம் - புலம்பெயர் தேசம் என இரண்டும்  தமிழர் தேசத்தின் இறைமையைப் பாதுகாக்க ஒன்றிணையவேண்டும். இது காலத்தின் கட்டாய தேவை. இந்த ஒருங்கிணைவுக்கு தமிழ்த் தேசியத்தின் பெயரால் நேர்மையுடன் செயற்பட்டு வருகின்ற அச்சு இலத்திரனியல் ஊடகங்களும் தமது காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும்.

தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் கடந்த 25 ஆண்டுகாலமாக அப்பளுக்கற்ற பணியாற்றி வருகின்ற ஈழமுரசு பத்திரிகையின் தாயக செய்தியாளர்கள் இந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்கு தயாராக இருக்கின்றனர்.

தாயகத்திலும் பன்னாடுகளிலும் இருக்கின்ற தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்களும் இப்பணிக்காகத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

தமிழீழ தேசியத் தலைவர் கூறியதைப் போன்று, இலட்சியத்திற்காக ஒன்றுபட்ட மக்களை எந்தச் சக்தியாலும் அழித்துவிட முடியாது என்பதற்கு இணங்க, எமது விடுதலைக்கான எழுச்சிக்கு அனைவரும் தயாராகவேண்டும்.

இதுவே, எமது நிம்மதியான வாழ்விற்காக தங்களை ஆகுதியாக்கிய வீர மறவர்களுக்கு நாம் செய்யும் மகத்தான கைமாறு ஆகும். அந்த மாவீரர்களின் கனவை நனவாக்க அனைவரும் அணிதிரள்வோம்.

‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

நன்றி: ஈழமுரசு

111