கோவையில் தீண்டாமை சுவர்! கோவை ஆட்சியரிடம் தபெதிக மனு!

சனி ஜூலை 31, 2021

கோவை- கோவை அருகே அருந்ததியர் மக்கள் செல்லும் பாதையை மறித்து தீண்டாமைச் சுவர் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கண்ணபிரான் நகரிலிருந்து பன்னிமடை பாதைக்கு செல்லும் வழியில் உயரமாக தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டுள்ளதாக கொண்டை சாமி பகுதி மக்கள் குற்றம் சாட்டினார்.

இந்த உயரமான தடுப்பு சுவர் சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தத் தீண்டாமை சுவரை அகற்ற வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக அந்த பகுதியில் வாழும் மக்கள் தெரிவிக்கையில்;

ஒரு மதில் சுவர் என்பது குறிப்பிட்டு 4-அடி என்று தான் இருக்க வேண்டும், ஆனால் இந்த குறிப்பிட்ட சுவர் 10-அடி உயரத்தில் இருக்கிறது. மேலும் இந்த பகுதியில் இருக்கக்கூடிய வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன, பொது வழி உட்பட. இதனால் இந்த பகுதி மக்கள் வேறுவழியின்றி ஊரை சுற்றி வர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். இரவில் எங்களுக்கு பாதுகாப்பு என்பது அச்சுறுத்தலாக இருக்கிறது.

மேலும் குழந்தைகள் இந்த சுவர் பக்கத்தில் விளையாடுவதால், என்னேரமும் இந்த சுவர் விழக்கூடிய நிலைமையில்தன்  இருக்கிறது. எனவே அரசாங்கம் உடனடியாக இதற்கு தீர்வு கண்டு, இந்த தீண்டாமை சுவரை அகற்ற வேண்டுமென்ற மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், இன்று தீண்டாமைச் சுவரை அகற்றக்கோரி , தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கோவை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ட்டிணன் தெரிவிக்கையில்:

கொண்டை சாமி நகர் மக்கள், பயன்படுத்த முடியாத வகையில் சாலைகளை தடுத்து, சுவர் எழுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்ணபிரான் நகரில் பத்து அடி உயரத்திற்கு முழுநீள சுவர் கட்டப்பட்டு, அருகிலுள்ள கொண்ட சாமி நகரில் வசிக்கும் அருந்ததியர் மக்கள், உயர்ஜாதி மக்களின் கண்களில் படக்கூடாது என்ற வகையில் சுவர் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு தீண்டாமை சுவர் ஆகும்.

இந்த தீண்டாமை சுவரை கோவை மாவட்ட ஆட்சியர் அகற்ற உத்தரவிட்டு, அனைத்து மக்களும் பொழிவு வழித்தடங்களை பயன்படுத்தும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இதனடிப்படையில்தான் இன்று ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தோம் என்று தெரிவித்தார்.