கப்பல் இன்று கொழும்பை வந்தடையும்

ஞாயிறு மே 22, 2022

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக சுமார் 2 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான அத்தியாவசியப்பொருட்களுடன் கடந்த புதன்கிழமை இந்தியாவிலிருந்து புறப்பட்ட கப்பல் இன்றைய தினம் கொழும்பை வந்தடையவுள்ளது.  

 இலங்கை மக்களுக்கு உதவுவதற்கென இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் தமிழக அரசினால் வழங்கப்பட்ட அரிசி, பால்மா, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப்பொருட்கள் ஏற்றப்பட்ட 'டான் பின்-99' என்ற கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து கடந்த புதன்கிழமை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கொடியசைத்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது 

 அந்தக்கப்பல் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பை வந்தடையும் என்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது 

 நாட்டில் டொலருக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை அடுத்து பால்மா, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை இறக்குமதி செய்யமுடியாததன் காரணமாக இப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி சந்தையிலுள்ள பொருட்களின் விலைகளும் பெருமளவால் அதிகரித்திருக்கின்றன 

 இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட பொருட்களில் 9000 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன்களுக்கும் மேற்பட்ட 55 வகையான அத்தியாவசிய மருந்துகள், 2 வகையான சிறப்பு மருந்துகள் என்பன உள்ளடங்குகின்றன. இவற்றின் பெறுமதி இந்திய ரூபாவில் முறையே 30.2 கோடி, 1.5 கோடி மற்றும் 8.85 கோடி ஆகும். அதன்படி மொத்தமாக சுமார் 40.55 கோடி இந்திய ரூபா பெறுமதியான (16 மில்லியன் அமெரிக்க டொலர்) பொருட்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன 

 இந்தப் பொருட்கள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் இலங்கை அரசாங்கத்தின் உயர்தலைமைத்துவத்திடம் கையளிக்கப்படும் 

 தமிழக அரசினால் உறுதியளிக்கப்பட்டிருக்கும் 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் மருந்துப்பொருட்களின் முதலாம்கட்ட விநியோகமாக இது அமைகின்றது. 

 இந்தப் பொருட்கள் அனைத்தும் நாட்டின் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் தென்மாகாணங்களில் உள்ள மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் பகிர்ந்தளிக்கப்படும் என்றும், இந்த உதவிகள் நாட்டின் அனைத்துச் சமூகங்களையும் உள்ளக்கியிருப்பதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 

 இந்தியாவின் சில தனியார் மற்றும் சமூக அமைப்புக்களாலும் அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கு அவசியமான உதவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள உயர்ஸ்தானிகராலயம், இலங்கையிலுள்ள தமது சகோதர உறவுகளுக்காக இந்திய மக்கள் துணைநிற்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது .