கப்பலோட்டிய தமிழச்சி!

ஞாயிறு மார்ச் 31, 2019

விண்வெளியில் பெண்கள் பயணம் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டாலும் கரையைத் தாண்டி கடலுக்குள் செல்லப் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சில பெண்களுக்கே அப்படியான மனத்தடை இருப்பதையும் மறுப்பதற்கில்லை. உலக அளவில் இதுபோன்ற பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகள் நிலவிவரும் சூழலில் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ரேஷ்மா நிலோஃபர் நாகா, நாட்டின் முதல் பெண் கப்பலோட்டி என்ற சரித்திரச் சாதனையைப் படைத்திருக்கிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த ரேஷ்மா நிலோஃபர் நாகா, தற்போது கொல்கத்தாவில் உள்ள பொறுப்புத் துறைமுகக் கழகத்தில் கப்பலோட்டியாகப் (MARINE PILOT) பணியாற்றிவருகிறார். படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் என அனைத்திலும் ஆல் ரவுன்டராக வலம்வந்தவருக்குப் பெரும்பாலான மாணவர்களைப் போல் பொறியியல், மருத்துவம் போன்றவற்றைப் படிப்பதில் ஆர்வமிருந்திருக்கவில்லை. அவற்றுக்குப் பதில் வேறு ஏதாவது வித்தியாசமான படிப்பைத் தேர்வுசெய்து படிக்க வேண்டும் என ரேஷ்மா திட்டமிட்டார்.

விளம்பரத்தால் மாறிய பயணம்

அப்போது நாளிதழ் ஒன்றில் உலகின் மிகப் பெரிய சரக்குப் பெட்டகக் கப்பல் நிறுவனமான ‘ஏபி மாலர் மெர்ஸ்க்’ சார்பில் நிதியுதவி, வேலைவாய்ப்புடன் கூடிய ஐந்தாண்டு கால பி.இ. மரைன் டெக்னாலஜி படிப்பதற்கான விளம்பரத்தைப்  பார்த்துள்ளார். “படிப்பதற்கு ஆகும் மொத்தச் செலவையும் ஏற்றுக்கொள்வதுடன் படித்து முடித்தபிறகு வேலைவாய்ப்பும் அளிக்கப்படும் என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பெற்றோரைத் தொந்தரவு செய்யாத அதேநேரம் நான் எதிர்பார்த்ததைப் போல் வித்தியாசமான படிப்பாகவும் அது இருந்தது. உடனே பி. இ. மரைன் டெக்னாலஜிக்கு விண்ணப்பித்து, சென்னையில் உள்ள அமெட் பல்கலைக்கழகத்தில் படித்தேன். இந்த ஐந்தாண்டு காலப் படிப்பில் முதல் மூன்று ஆண்டுகள் மட்டும் கல்லூரி வளாகத்துக்குள் கப்பல்கள் குறித்துக் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

இறுதி இரண்டு ஆண்டுகள் முழுவதும் கப்பல்களில் செயல்முறை விளக்கத்தோடு பாடம் நடத்தப்படுகிறது. செயல்முறை வகுப்பின்போதுதான் அவ்வளவு பெரிய கப்பலை முதன் முதலாகப் பார்த்தேன்.

அதற்கு முன்புவரை அவ்வளவு பிரம்மாண்ட கப்பலைப் பார்த்ததில்லை. கப்பலின் பிரம்மாண்டத்தைவிட அதில் இருக்கும் பெரிய இன்ஜின்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. ஆனால், அந்த பிரம்மாண்ட இன்ஜின்களைக் கண்டு அஞ்சாமல் அதில் எப்படி வேலைசெய்வது என்பதுதான் என் முதல் கடமையாக இருந்தது” என்கிறார் ரேஷ்மா.

இறுதி ஆண்டுப் படிப்பில் சரக்குப் பெட்டகக் கப்பல்களில் உலகைக் வலம்வந்த ரேஷ்மா, ஆஸ்திரேலியாவின் கடற்பரப்பைத் தவிர்த்து மற்ற சர்வதேசக் கடல்களில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மகளிர் தினத்தில் கிடைத்த விருது

ஐந்தாண்டு காலப் படிப்பை முடித்த ரேஷ்மா, ஏழு ஆண்டுகளாகப் பயிற்சி கப்பலோட்டியாகக் கடுமையான பணிகளைச் செய்துள்ளார். 2018-ல்தான் ரேஷ்மாவுக்குக் கப்பலோட்டுவதற்கான உரிமம் வழங்கப்பட்டது. தான்தான் இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டி என்பதே அப்போதுதான் ரேஷ்மாவுக்குத் தெரியவந்தது. 

பணி நிரந்தரம் பெற்று கொல்கத்தா பொறுப்புத் துறைமுகத்தில் கப்பலோட்டியாகப் பணியாற்றிவருகிறார். நாட்டின் முதல் பெண் கப்பலோட்டி என்ற சாதனையை மட்டுமல்லாமல் மிக இளம் வயதிலேயே கப்பலோட்டியவர் என்ற பெருமையையும் ரேஷ்மா நிலோஃபர் நாகா பெற்றுள்ளார். இவரின் இந்தச் சாதனையைப் பாராட்டி, மகளிர் தினமான மார்ச் 8 அன்று குடியரசுத் தலைவர் கையால்  ‘நாரி சக்தி புரஸ்கார் விருது’ அளிக்கப்பட்டது.

சவாலான நதியில் பயணம்

பொதுவாகக் கப்பல்களில் கேப்டன்களைப் பற்றித்தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், எவ்வளவு பெரிய கப்பல்களை இயக்கும் கேப்டனாக இருந்தாலும் ஒரு நாட்டின் துறைமுகத்துக்குள் நுழைவதற்கு அந்தத் துறைமுகத்தில் உள்ள கப்பலோட்டியின் உதவியில்லாமல் கப்பலை மேற்கொண்டு செலுத்த முடியாது.  அப்படிப்பட்ட பணியைத்தான் ரேஷ்மா செய்துவருகிறார்.

“நேரம், காலம் பார்க்காமல் செய்யும் இந்தப் பணியில் வேலையின் மீது இருக்கும் ஆர்வமும், குடும்பத்தின் ஆதரவும்தான் அவசியம்” என்கிறார் எழுத்தாளர் அமரந்தா, நடராஜன் தம்பதியின் மகளான ரேஷ்மா.  பறந்து விரிந்து காணப்படும் ஹூக்ளி நதியில்தான் கொல்கத்தா துறைமுக எல்லை அமைந்துள்ளது. இது கடற்பரப்பில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது. “உலகில் சவால்கள் நிறைந்த நதிகளில் ஹூக்ளியும் ஒன்று. இங்கே எப்போதும் நீரோட்டம் அதிகரித்தபடியே இருக்கும்.

எப்போது மணல் திட்டு ஏற்படும் என்பதை ஊகித்த பின்னர்தான் கப்பல்களை ஹால்டியா துறைமுகத்துக்குள் கொண்டுவர முடியும்” என்கிறார் அவர். பல கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றுக்கும் சுழித்தோடும் அலைகளுக்கு நடுவிலும் ஹூக்ளி நதியில் ஒவ்வொரு நாளும் சென்று, கப்பல்களைத் துறைமுகத்துக்குள் கொண்டுவந்து நங்கூரமிடுகிறார் ரேஷ்மா.

இதற்காகத் தினமும் இரவு பகல் பாராது 150 கிலோ மீட்டர் தொலைவுக்கு நதியில் சிறு படகில் பயணம் செய்கிறார். பின்னர் கப்பல்களின் வெளியே கட்டப்பட்டிருக்கும் தொங்கும் ஏணியில் ஏறி, கப்பல்களை  துறைமுகத்துக்கு அழைத்துவருகிறார். “ஒவ்வொரு நாளும் கப்பலைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு வெளியேறும்போது அப்பாடா எனப் பெருமூச்சுவிடுவேன். இப்படியொரு மனநிறைவான வேலையைச் செய்வதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது.

நாம் செய்யும் வேலையில் சவால் இருந்தால்தான் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் எனத் தோன்றும். அதிலும் ஒரு பெண்ணாக இந்தத் துறையில் என் திறமையை ஆண்களுக்கு நிகராக அல்லாமல் அதற்கும் மேலாகச் செய்துகாட்டினால்தான் என் உழைப்பு மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படும்.  இந்த வித்தியாசமான அனுபவம்தான் என்னை இந்தத் துறையில் நிலைத்திருக்கச் செய்கிறது” என்கிறார் ரேஷ்மா.

பிற்போக்கைப் புறக்கணிக்கலாம்

சவால்கள் நிறைந்த நதியில் பயணம் சென்று, கப்பல்களைத் துறைமுகத்துக்குக் கொண்டுவந்து நிறுத்துவதற்கு பத்திலிருந்து பன்னிரண்டு மணி நேரமாகும்.

ஆண்கள் சூழ்ந்த இந்தத் துறையில், ‘பெண்களுக்கு எல்லாம் எதற்கு இந்த வேலை? ஒழுங்காக வீட்டைப் பார்த்துக்கொண்டால் என்ன?’ எனக் கூறியவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் எனக் கூறும் ரேஷ்மா, அப்படிச் சொல்கிறவர்களின் வார்த்தைக்குத் தான் மதிப்பு கொடுத்ததும் கிடையாது என்கிறார்.

“எந்தத் துறையாக இருந்தாலும் நம்முடைய திறமையும் உழைப்பும்தான் நாம் யார் என்பதை மற்றவர்களுக்குச் சொல்லும். எதிர்மறையாகவும் பிற்போக்குத்தனத்துடனும் பேசுபவர்களின் வார்த்தைகளுக்குக் காது கொடுக்காமல் சாதித்துக்காட்ட வேண்டும் என்ற லட்சியம் மட்டும்தான் என் கண் முன்னால் தெரிந்தது.

இந்தத் துறையில் முதல் பெண்ணாக இருப்பதே  எனக்குப் பெரும் சவாலாகத்தான் இருந்தது. ஏனென்றால் மற்றவர்களைவிட என்னுடைய திறமையை இரட்டிப்பாக நிரூபிக்க வேண்டியிருந்தது. இந்தத் தலைமுறைப் பெண்களுக்குச் சுதந்திரமான சூழலும் ஊக்கமும்தான் தேவை. இந்த இரண்டையும் ஏற்படுத்திக் கொடுத்தாலே பெண்கள் சுயமாக முன்னேறுவார்கள்.

என்னைப் போல் மேலும் பல பெண்கள் இந்தத் துறையில் இணைந்து பணியற்றுவதை நான் விரும்புகிறேன். இங்கே எனக்குப் பல தோழர்கள் இருந்தாலும் ஒரு தோழியின் வருகைக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் ரேஷ்மா.

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் பெண்கள் முதல் அடியை எடுத்துவைப்பதுதான் சற்றுச் சிரமமாக இருக்கும். ஒருவர் முன்னேறிவிட்டால் மற்றவர்களின் வருகையை எளிதில் தடுக்க முடியாது.