கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என்ன?

ஞாயிறு செப்டம்பர் 13, 2020

 கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள், சாப்பிட வேண்டிய உணவுகள், குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டபின்பும் தொடர்ந்து காய்ச்சல், இருமல், உடல்வலி, தொண்டை வலி,மூச்சுவிடுதலில் சிரமம் இருப்பதாக தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அது தொடர்பாக கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்கும் சென்று வருகின்றனர்.

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் அதன்பின் கரோனாவின் தாக்கங்கள் உடலில் நீண்டகாலம் இல்லாமல் இருப்பதற்கான வழிமுறைகளையும், உணவுகள், மருந்துகள் குறித்த விவரத்தையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி தனிநபர் ஒருவர் கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டநிலையில் அவர் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

.கரோனாவிலிருந்து குணமடைந்தபின்பும் வெளியே செல்லும் போது முகக்கவசம் பயன்படுத்துதல், சமூக விலகலைக் கடைபிடித்தல்,கைகளை சுத்தமாகப் பராமரித்தல் போன்றவற்றை செய்ய வேண்டும்.

போதுமான அளவு அவ்வப்போது இளம் சுடுநீரை பருக வேண்டும்.

ஆயுஷ் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆயுஷ் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

உடல்நிலை ஒத்துழைத்தால் வழக்கமான வீட்டுப் பணிகளைச்செய்யலாம். தொழில்ரீதியாக பணியில் படிப்படியாக ஈடுபடலாம்.

மிதமான உடற்பயிற்சிகள் செய்தல்.

மருத்துவர்கள் ஆலோசனைப்படி, சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ளுதல்.

தேவைக்கு ஏற்ப, உடல் ஒத்துழைக்கும் அளவுக்கு காலை, மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேர்கொள்ளுதல்.


சீரான சத்துள்ள உணவுகளை உண்ணுதல். குறிப்பாக அவ்வப்போது சமைக்கப்பட்ட சூடான எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.

போதுமான அளவு தூக்கம், ஓய்வு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல்.

மதுக்குடித்தல், புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

இணை நோய்கள் இருப்போர்(நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயநோய், சிறுநீரக்கோளாறு) கரோனாவுக்கு பிந்தைய மருந்துகள் எடுக்கும் போது, இணை நோய்களுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்வது குறித்து மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

.வீட்டில் இருக்கும் உடல் வெப்பநிலை குறித்து அவ்வப்போது பரிசோதனை செய்தல்,

ரத்த அழுத்தப்பரிசோதனை,

ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடலில் ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுதல் அவசியம்


தொடர்ந்து வறட்டு இருமல், தொண்டை கட்டு போன்றவை இருந்தால், ஆயுஷ் மருத்துவர்கள், அல்லது அலோபதி மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுக்கலாம்.

அல்லது ஆயுஷ் மூலிகைப் பொடிகள் மூலம் நீராவி பிடிக்கலாம், தொண்டையில் நீர் படுமாறு வாய் கொப்பளிக்கலாம்.

நாள்தோறும் காலையில் இளம் சடுநீர், அல்லது பாலில் சவன்பிராஷ் மருந்தை கலக்கி பருகலாம்.

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் சவன்பிராஷ் லேகியம் சாப்பிடுவது ஆயுஷ் மருத்துவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் தங்களின் அனுபவங்களை உறவினர்களிடம், நண்பர்களிடம் பகிர்ந்து சாதகமான சூழல்களை உருவாக்கி நம்பிக்கை ஏற்படுத்தலாம். சமூகவலைத்தளத்திலும் தனது கரோனா அனுபவங்களை விளக்கி எழுதி சமூகத்தில் நம்பிக்கையளிக்கலாம்.

கரோனாவிலிருந்து குணமடைந்தபின் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சுயஉதவிக் குழுக்கள், தகுதியான மருத்துவர்கள், மருத்துவ, மனநல பயிற்சியாளர்கள் ஆலோசனைகளை உதவிகளைப் பெறலாம்.

சமூக விலகலைப் பின்பற்றி, நண்பர்களுடன் யோகா, பிராணயாமம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்யலாம்.


இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.