கரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு!

திங்கள் சனவரி 27, 2020

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கரோனா' வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. கரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து சினுவா ஊடகம் திங்கட்கிழமை வெளியிட்ட செய்தியில், “ சீனாவில் கரோனா வைரஸ் பாதுகாப்பிற்கு இதுவரை 80 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 2,744 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 769 கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய வுஹான் நகரம் உள்ளிட்ட 17 நகரங்களில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இந்த 17 நகரங்களில்தான் பெரும்பாலும் உயிர்பலி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மற்ற நகரங்களிலும் இந்த பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தியுள்ளார்கள்.

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. பிரான்ஸில் (2) பேரும் ஆஸ்திரேலியா(1), தாய்லாந்து(7), ஜப்பான்(3), தென் கொரியா(2), அமெரி்க்கா (3), வியட்நாம்(2), சிங்கப்பூர்(3), நேபாளம்(1), ஹாங்காங்(5), மாக்காவ்(2), தைவான்(3) , பிரான்ஸ் (3), ஆஸ்திரேலியா (4) ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.