கரும்பு கசப்பது கரும்பின் குற்றமா? வாயின் குற்றமா?

புதன் செப்டம்பர் 18, 2019

வணக்கம் பிள்ளையள்.

வர வர ஒவ்வொருத்தரும் செய்கிற கூத்துக்களை பார்க்கேக்குள்ளை எனக்கென்றால் நாலு பேரை இழுத்து வைச்சு கன்னம் மின்னுகிற அளவிற்கு வெளுக்க வேண்டும் போல் இருக்குது. ஆனாலும் என்ன செய்கிறது? இந்தக் கிழட்டு வயதில் நான் கை நீட்டப் போய் என்ரை கால், கைகளை வேறை ஆட்கள் முறிக்கிறதில் தான் முடியும்.

அதிலும் பார்க்க சும்மா வாயால் வெட்டி வீழ்த்துகிறது தான் புத்திசாலித்தனம்.

விசயம் இது தான் பிள்ளையள். போன கிழமை கொழும்பு சங்கிரி லா யஹாட்டேலில் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவாக கூட்டம் ஒன்று நடந்தருக்குது. அதில் கோத்தபாயவிற்கு ஆதரவாக வந்து கதைக்கச் சொல்லி எங்கடை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரனைக் கேட்டிருக்கீனம்.

111

இரும்பு பிடித்த கையும், சிரங்கு பிடித்த கையும் சும்மா இராது என்று அந்த நாட்களில் சும்மாவே சொல்கிறவையள்?

அவரும் இது தான் சந்தர்ப்பம் என்று விழுந்தடிச்சுக் கொண்டு போயிருக்கிறார். உயர உயரப் பறக்கும் பொழுது ஊர்க் குருவிக்கு தான் பருந்தாகி விட்டேன் என்று நினைப்பு வாறது இயல்பு தானே? அது தான் கிரிக்கெட்டில் சுழன்று, சுழன்று பந்து வீசி உயரப் பறந்த முரளீதரன் மல்லிக்கு, அரசியலிலும் உயரப் பறக்க ஆசை வந்திட்டுது போலை.

அது மட்டுமில்லை. அவரின்ரை அப்பா பிஸ்கெட் கொம்பனி ஒன்று நடத்துகிறார்.அந்தக் கொம்பனி இன்னும் கொடி கட்டிப் பறக்க வேண்டும் என்றால் ராஜபக்சாக்களின்ரை அரவணைப்பு வேணும் தானே?

கோத்தபாயவிற்கு வால்பிடிக்கப் போனவர் அப்படியே அவருக்குத் துதி பாடிப் புகழ்ந்து, அவரது காலை நக்கி, வாலைப் பிடிச்சுக் கொண்டு நிற்கிறதோடு விட்டிருக்கலாம். ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சுக் கடைசியில் மனுசனைக் கடிச்ச கதையாக எங்கடை விடுதலைப் போராட்டத்தைப் பற்றியயல்லே விசர்க் கதையள் கதைச்சிருக்கிறார்.

இவ்வளவுக்கு சிங்கள இனவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழ்க் குடும்பத்தில் இருந்து வந்தவர் இந்த முரளீதரன். இவரின்ரை தாத்தா பெரியசாமி சின்னசாமி இலங்கைக்கு வந்தது 1920ஆம் ஆண்டில். தமிழ்
நாட்டில் திருச்சிராப்பள்ளி என்கிற இடத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின்ரை பாட்டனார் கொஞ்சக் காலம் கண்டியில் இருக்கிற தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்திருக்கிறார்.

அந்த நாட்களிலேயே இந்திய வம்சாவழித் தமிழ் மக்களை கண்டிச் சிங்களவருக்கு கண்ணில் காட்டக் கூடாது. அந்த அளவுக்கு இனவெறி. ஆனாலும் ஏதோ பிரிட்டிஸ்காரனின்ரை ஆட்சி என்கிற படியால் அடக்கி வாசிச்சுக் கொண்டு இருந்தவையள்.

111

முரளீதரனின்ரை தாத்தா இலங்கைக்கு வருகிறதுக்கு ஐந்து வருசத்துக்கு முதல் தான் கண்டியில் சிங்கள ஆட்களுக்கும், ஹம்பேய முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் வெடிச்சு, முஸ்லிம் ஆட்களை சிங்களவன்கள் வெட்டிச் சாய்க்க, பிரிட்டிஸ் அரசாங்கம் மார்சல் சட்டத்தை அமுல்படுத்தி சிங்கள இனவாதிகளின்ரை கொட்டத்தை அடக்கினது.

பிரிட்டிஸ்காரன் மார்சல் சட்டத்தை அமுல்படுத்தவில்லை என்றால் அடுத்தது இந்திய வம்சாவழித் தமிழர்களில் தான் சிங்களவன் கைவச்சிருப்பான். அந்த அளவுக்கு மலைநாட்டுத் தமிழ் மக்களிலை சிங்களவன்களுக்கு வெறுப்பு.

இந்தியாவில் இருந்து தங்கடை நாட்டுக்கு வந்து தங்கடை வளத்தைச் சுரண்டுகிறது இந்தியச் செட்டிகளும், கூலிகளும் தான் என்று அந்த நாட்களில் காந்தியை சந்திக்கேக்குள்ளை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சொன்னவர் என்றால் பாருங்கோவன் பிள்ளையள்.

உது மட்டுமே? பிரிட்டிஸ் காலனித்துவ ஆட்சி அகன்ற பிறகு டி.எஸ்.சேனநாயக்கா கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டதும் உந்த முரளீதரனின்ரை குடும்பம் தான். ஏதோ, முரளீதரனின்ரை தகப்பன் இலங்
கையில் பிறந்ததால் தப்பி விட்டார்.

ஆனால் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து போட்டு இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் மீது சிங்களவன் விதிச்ச விசா கெடுபிடிகளுக்கு முகம்கொடுக்க விருப்பமில்லாமல் அவரின்ரை பாட்டன் பேசாமல் எல்லாத்தையும் எழுதிக் கொடுத்துப் போட்டுத் தனது பெண் பிள்ளைகளோடு தமிழ்நாட்டுக்கே திரும்பிப் போய் விட்டார். ஏதோ, அந்த நேரத்தில் அவர் தமிழ்நாட்டில் பிறந்ததுக்கு ஆதாரம் இருந்ததால் ஆள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இந்தியாவிலேயே குடியேறி விட்டார்.

ஏனைய சனங்கள் தான் பாவம். தாங்கள் இந்தியாவில் பிறந்ததுக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் திரும்பிப் போன எத்தனை ஆயிரம் இந்திய வம்சாவழித் தமிழர்கள் அகதி முகாம்களில் இருந்தவை தெரியுமே? அதுவும் கொஞ்ச நாட்கள் இல்லை. வருசக்கணக்காக இருந்தவையள்.

எது எப்படியோ, ஒரு பக்கம் அப்புவும், ஆச்சியும், அக்கா, தங்கச்சிமாரும் தமிழ்நாட்டிலை, மறு பக்கம் தானும் தன்ரை குடும்பமும் இலங்கையில் என்று ஒரு சீரழிஞ்ச வாழ்க்கை தான் முரளீதரனின்ரை அப்பர் வாழ்ந்தவர்.

அது மட்டுமில்லை பாருங்கோ. முரளீதரனின்ரை தகப்பன் முத்தையா, கலவரம் என்கிற பெயரில் அந்த நாட்களில் கண்டியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரங்கேற்றின தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்.

அவரின்ரை உடம்பிலை சிங்கள இனவெறியர்கள் ஏற்படுத்தின காயங்களின்ரை தழும்புகள் இப்பவும் இருக்கு
தாம்.

அப்படி இருந்த முரளீதரன் இப்ப விசர்க் கதை கதைச்சிருக்கிறார் என்றால் பிறகு நாங்கள் என்னத்தைச் சொல்கிறது? கரும்பு கசக்கிறது என்றால் அது கரும்பின்ரை குற்றமோ? இல்லாவிட்டால் வாயின்ரை குற்றமோ?
சரி, ஓணான் எவ்வளவு தூரம் ஓடுது என்று பார்ப்போம்.

முரளீதரன் மல்லி சொல்கிறார், அரசாங்கத்தின்ரை தரப்பிலையும் தவறு இருக்குதாம், விடுதலைப் புலிகளின்ரை தரப்பிலையும் தவறு இருக்குதாம். முந்தி யுத்தம் நடந்த காலத்தில் கொழும்பில் அரசியல்வாதிகளை இலக்குவைச்சு குண்டுவெடிப்புக்கள் நடத்தப்பட்டதால் பாராளுமன்றப் பக்கமாக உள்ள வீதியால் அந்த நாட்களில் தான் பயணம் செய்தது இல்லையாம்.

நானும் தெரியாமல் தான் கேட்கிறன், யுத்தம் நடந்த காலத்தில் யாழ்ப்பாணப் பக்கமாகவும், வன்னிப் பக்கமாகவும், மட்டக்களப்பு பக்கமாகவும், திருகோணமலை பக்கமாகவும் ஏன் மல்லி போகாமல் விட்டனியள்? அங்கை யார் குண்டு போட்டவையள்?

111

செவ்வாய்க்கிரகத்தில் இருந்த வந்த வேற்றுக்கிரகவாசிகளே குண்டு போட்டவங்கள்?

அங்கை சனத்துக்கு மேல் குண்டு போட்டது இன்றைக்கு இவர் தூக்கிப் பிடிக்கிற கோத்தபாய ராஜபக்சவும், சிங்கள வான்படையும் தானே!

எங்கடை தமிழீழப் பக்கம் யுத்தம் நடந்த காலத்தில் முரளீதரன் போயிருந்தார் என்றால் கொழும்பில் இடைக்கிடை வெடிச்ச பட்டாசுகளோ, அல்லது தமிழீழத்தில் மக்களின் தலையில் விழுந்த குண்டுகளோ தன்ரை உயிரைப் பறிச்சிருக்கும் என்று ஆளுக்குத் தெளிவாக விளங்கியிருக்கும்.

அது சரி, கொழும்பில் புலிகள் பட்டாசு வெடிக்க வைச்சவயள், அதனால் தனக்கு குலை நடுங்கிச்சுது என்கிற தொனியில் குற்றம் சுமத்துகிற முரளீதரன், 2004ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் கிளிநொச்சிக்கு சுற்றுப் பயணம் செய்த பொழுது இதைப் பற்றிக் கதைச்சிருக்கலாம் தானே?

அந்த நேரத்தில் ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின்ரை நல்லெண்ணப் பிரதிநிதி என்ற கோதாவில் கிளிநொச்சிக்குப் போன இவரை சரியான முறையிலை, உரிய மரியாதைகளோடு தானே தமிழீழ விடுதலைப் புலிகள் கவனிச்சு விட்டவையள். கிளிநொச்சியில் பள்ளிக்கூடம் ஒன்றில் கூட்டம், பிறகு பூநகரி நல்லூர் கிராமத்தில் ஒரு கூட்டம் என்று புலிகளின்ரை ஆட்சிக்குட்பட்ட பகுதிக்குள்ளை திரியும் பொழுது இதைப் பற்றி நாலு வார்த்தை கதைக்கிறதுக்கு அவருக்குத் திராணி இருக்கவில்லையோ?

இல்லாட்டி யாழ்ப்பாணம் போகிற வழியில் பளை சோதனைச் சாவடியில் இவருக்கு கைலாகு கொடுத்து மரியாதையாக முகமாலைக்கு அனுப்பி வைச்ச மாலதி படையணி பெண் போராளிகளிட்டை பல் இளிச்சுக் கொண்டு படம் எடுக்கேக்குள்ளை இந்த ஞானம் எங்கே போய்ச்சுது?

உதுக்குத் தான் எங்கடை அப்பு அந்த நாட்களில் சொல்கிறவர், ஏர் இழுக்கிறவன் இளப்பமானால் எருதும் மச்சான் முறை கொண்டாடும் என்று.

அந்த நேரத்தில் முயல்வேசம் போட்டவர் முரளீதரன். அதாலை அவர் ஒரு எலி என்கிறது பலருக்குத் தெரியாது. இப்ப எலியின்ரை வால் முயல் வேசத்துக்குள்ளால் தெரியத் தொடங்கி விட்டது.

இனியயன்ன? உண்டு கொழுத்த நண்டு சும்மாவே இருக்கும்? அடுத்தது அரசியல் பிரவேசம் தான். ஏதோ நடக்கட்டும். நல்லா இருந்து நாசமாகப் போகட்டும்.

வேறை என்ன பிள்ளையள்? அடுத்த முறை சந்திப்பம்.

நன்றி: ஈழமுரசு