கரும்புலி மேஜர் டாம்போ நினைவு நாள்!!

செவ்வாய் மார்ச் 19, 2019

கரும்புலி மேஜர் டாம்போ அவர்களின் 28 ஆண்டு நினைவு நாள் இன்று.1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:சிலாபத்துறை படைத் தளம் மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

“அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்” இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது.

தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்டியை ஓட்டிச் செல்வது டாம்போதான் என்பது முடிவானது.

சண்டை தொடங்கி சிறிது நேரத்திற்குள்ளேயே படை முகாமின் கணிசமான பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது.

குறித்த நேரத்தில் கொண்டச்சி வீதி வழியாக வெடிமருந்து வண்டியை கொண்டு செல்வதற்கு வசதியாக போராளிகள் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டாம்போ அந்த இறுதி நேரத்திற் கூட எந்தவித படபடப்புமின்றி காயமடைந்த போராளிகளுக்கு மருந்து கட்டுவதிலும், பிற உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான்.

“எல்லாம் சரி. சக்கை வண்டியை அனுப்பலாம்” களத்தில் கட்டளை பிறக்கிறது. ”முடிஞ்ச அளவு முகாமின்ர உள்ளுக்க போய் மோதுறதுதான் என்ர நோக்கம்” சொல்லி விட்டு டாம்போ ஊர்தியில் ஏறத் தயாராகிறான்.

பக்கத்தில் நின்ற தோழனைக் கட்டியணைத்து முத்தமிடுகின்றான். “நானும் கொஞ்சதூரம் வாறன்” நண்பன் கூற, “வேண்டாம், ஏதும் தவறெண்டாலும் ஏன் வீணா எல்லாரும் சாவான்”கூறிவிட்டு, வெடிமருந்து வண்டியை எடுத்துக் கொண்டு விரைகிறான் டாம்போ.

எதிரியின் ஒருமித்த தாக்குதல் டாம்போவின் வாகனம் நோக்கி திரும்புகிறது. இலக்கை அடையுமுன்னரே அந்தக் கரும்புலி வண்டி வெடித்து சிதறுகிறது.