கரும்புலி நாள் வணங்கி நிற்போம்...!

வெள்ளி ஜூலை 05, 2019

அழகெனும் மாணிக்கமாய் அனைவரும் அணியாது

விழாதெழு மத்திவாரங்களாயொரு தமிழீழ அமைப்பதற்காய்

வெளியில் தோன்றா வித்தாகிப் புதைந்தவர்களங்கே

களிப்போடங்கே தேடாமுகமாக வாழ்வைத் தொலைத்தவர்கள்

மதில்மேலொட்டுகின்ற சுவரொட்டி மருந்துக்கும் தெரியாது

விதிநொந்து போகாமல் விழுதுகள் ஆனவர்கள்

உதிக்கின்ற தமிழீழ உயர்வுக்காய் உழைத்தவர்கள்

விதிக்கின்ற கட்டளையை விரும்பி யேற்றவர்கள்

மண்ணின் விடிவுதன்னை மகிழ்வாய் தேடியவர்

எண்ணத்தை மாற்றார்க்கு எடுத்துரைக்க மறுத்துவிட்டால்

கண்மணிகள் கரும்புலிகள் கூற்றுவனை வலிந்தழைத்து

மின்னலென வெடிமுழங்க மலர்சாய்ந்து போனவர்கள்

கல்லறைகள் தோன்றாது கழிவிரக்க அஞ்சலியால்

இல்லாத உடலுக்கு கண்ணீரைத் தானழைத்து

வெந்து உடல்கருகும் வேங்கைகள் ஆனவர்கள்

ம‌ண்மீது ப‌டையெடுத்த‌ மாற்றானின் முக‌ம் க‌ண்டு

நெஞ்ச‌ம‌தில் வீர‌த்துட‌ன் மெய்த‌னிலே வெடிக்குண்டால்

அஞ்சாது அலங்கரித்து அணிதிரண்டு சென்றங்கே

வெடித்து சித‌றிய‌ கரும்புலி வீரர்கள்

வேத‌னைக் க‌ட‌லில் ஆழ்ந்த போதும்

சோத‌னையெனும் புய‌லில் சிக்கிய‌ போதும்

சாத‌னை கண்ட ச‌ரித்திர‌ நாய‌க‌ர்க‌ள்

பேசும் த‌மிழ்மொழியை பெருமையுடன் ம‌தித்து

நேசத் தமிழினத்தை நெஞ்ச‌ம‌தில் நிறுத்தியங்கே

ம‌ன‌தில் உறுதியுடன் கொள்கையும் கொண்டு

க‌ட‌ற்புலியாக‌வும் க‌ள‌ப்புலியாக‌வும் கரும்புலியெனவே

சாத‌னை பலப‌டைக்கும் சான்றாகுந் தியாகிகளின்

க‌ரும்புலி நாளைந்தென்று கருத்தோட னைவருமே

காத்திருந்த நாளதனில் ஆடிவந்து விட்டால்

பூத்தகொடி பூக்களின்றித் தவிப்பதுபோல்

சித்தங் கலங்கிநிற்கும் சர்வதேசத் தமிழுறவு

நீத்தார வர்நினைவை நெஞ்சார நினைந்தழுது

எத்தாலு மவர்பணியை தலைவணங்கி அஞ்சலிப்போம்.

"கவிக்குமரன்"