கரும்புலிகள் நாளை முன்னிட்டு பிரான்சில் தமிழ் இளையோர்கள் முன்மாதிரி!

ஞாயிறு ஜூலை 05, 2020

கரும்புலிகள் நாளை முன்னிட்டு இன்று 05.07.2020 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் தமிழ் மக்களின் வர்த்தக மையப்பகுதியான லாச்சப்பல் பகுதியில் சிரமதானப் பணிகளை மீண்டும் முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் எரிமலையின் செய்திப் பிரிவுக்கு பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் சார்பில் கருத்து வெளியிடுகையில், எம்முடன் Colombes மற்றும் Clichy பகுதி இளையோர்களும் இணைந்து இந்தப் பணியை முன்னெடுத்தனர்.

நாம் இந்தப் பணியின் மூலம் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். நாம் தொடர்ச்சியாக இப்பணியை முன்னெடுத்துச் செல்லும் போது, மற்றவர்கள் எம்மைப் பார்த்துத் தாமும் சுத்தமாக வைத்திருக்க நினைப்பார்கள் என்றனர். கடந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டும் குறித்த தூய்மைப் பணியை லாச்சப்பல் பகுதியில் பிரான்சு தமிழ் இளையோர்கள் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது லாச்சப்பல் பகுதி மிகவும் தூய்மையாக விளங்குவதை எம்மால் அவதானிக்க முடிகிறது.