கதிரையை தக்க வைக்க போராடும் ரணில்?

ஞாயிறு செப்டம்பர் 01, 2019

ஜக்கிய தேசியக்கட்சியில் ரணிலிற்கு எதிரான குரல்கள் வலுத்துவருகின்ற நிலையில் அதனை எதிர்கொள்ள அவர் திண்டாடத்தொடங்கியுள்ளார்.இதனிடையே ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற வேண்டுமாயின் கட்டாயமாக வெற்றிப் பெறக்கூடிய நபருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவைக் கோரிய பின்னரே ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட செயலாளரினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையானது ஒரு மோசடியான அறிக்கை என சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.

அதேபோல் , தற்போது நாட்டு மக்களில் 10 பேர் இல்லை 100 பேரிடம் கேட்டாலும், நான் நினைக்கின்றேன் 99 பேர் ரணில் விக்கிரமசிங்க இருந்தது போதும் என கூறுவார்கள் என சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாலைதீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை ரணில் விக்ரமசிங்க வெளியிடவுள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தெரியவந்துள்ளது.

கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து, விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய கூட்டணி மற்றும் அதன் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிடப் போவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தெரிவித்தார் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்தது.

அதேவேளை, ஜனநாயக தேசிய முன்னணியின் யாப்பு வரையும் பணிகளும் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கூட்டணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் இருக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.