கடல் பாசியால் செய்யப்பட்ட பானங்களை குடிக்க உதவும்(ஸ்ட்ரா) உறிஞ்சிகள்!

புதன் அக்டோபர் 09, 2019

உயரும் குப்பை மேடுகள். மூச்சுத் திணறும் கடல் வாழ் உயிரினங்கள். இத்தனைக்கும் காரணாமாக இருப்பவைகளுள், பிளாஸ்டிக்கால் ஆன, 'ஸ்ட்ரா' ஒரு முறை பயன்படுத்தி துாக்கிப் போடப்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு உலகெங்கும், தடை போடப்பட்டு வருகிறது.

என்றாலும், சுவையான பானங்களை உறிஞ்சிக் குடிக்க ஸ்ட்ரா தான் நல்ல சாதனம்.

எனவே, பிளாஸ்டிக் அல்லாத ஸ்ட்ராக்களை கண்டுபிடிக்க தேடல் நடக்கிறது. அண்மையில், அமெரிக்காவைச் சேர்ந்த, 'லோலிவேர்' (Loliware), பிளாஸ்டிக்கின் உறுதி கொண்ட ஒரு ஸ்ட்ராவை உருவாக்கியுள்ளது.

இது, கடல் பாசியால் செய்யப்பட்டது. எனவே, பயன்படுத்தும் வரை உறுதியாக இருந்தாலும், 18 மணி நேரத்திற்குள் நீரில் எளிதாக கரைந்துவிடும்.

அதுமட்டுமல்ல, குப்பையாக இந்த ஸ்ட்ராக்கள் கடலில் கொட்டப்பட்டாலும், அவை கரைந்து மீன்களுக்கு உணவாகவும் மாறிவிடும்.

காகித ஸ்ட்ராக்கள் சீக்கிரம் நீரி ஊறி நமுத்துப் போய்விடுகின்றன என்பதால், கடல் பாசியால் செய்யப்படும் ஸ்ட்ராக்களுக்கு நிச்சயம் மவுசு கூடும் என, லாலிவேர் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனவே, குளிர் பான உற்சாகிகள் விரைவில் கடல் பாசி ஸ்ட்ராக்களை எதிர்பார்க்கலாம்.