கடல்சார் மீட்பு மையம் அமைக்க சிறிலங்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது ஏன்?

வெள்ளி ஏப்ரல் 01, 2022

சமீபத்தில் சிறிலங்காவுக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது,    கொழும்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்திய பொதுத் துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம், நவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை (MRCC)
இலங்கையில் அமைக்க வழிவகை செய்வதாகும்.

இந்த ஒப்பந்தம் அமைச்சர் ஜெய்சங்கர், சிறிலங்கா  வெளியறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் ஆகியோர் முன்னிலையில் மார்ச் 28ஆம் தேதி கையெழுத்தானது.

இரு நாடுகளுக்கு இடையே இந்தியப் பெருங்கடலின் பிராந்திய பாதுகாப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் இந்த ஒப்பந்தம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்திய பெருங்கடலின் ஒரு சில பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக சிறிலங்கா  உதவியுடன் சீனா தனது செல்வாக்கை நிலைநிறுத்தியிருக்கிறது.

முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் சிறிலங்கா  கடற்படைக்கு மிதக்கும் கப்பல் கட்டுமானத்தளத்தையும், விமானப்படைக்கு இரண்டு டோர்னியர் விமானங்களையும் இந்தியா வழங்கியது.

கூட்டுப்பயிற்சி

மார்ச் 23ஆம் தேதி முதல் இலங்கை விமானப் படைக்கும் கடற்படைக்கும் இந்திய கடற்படை குழு ஹெலிகாப்டர்களை இயக்கும் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இந்தப் பயிற்சியின்போது இலங்கை விமானிகள் இந்தியாவின் மேம்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்களை ஏற்கனவே பரிச்சயமானது போன்று இயக்கினர்.

மேலும், இரு நாட்டு கடற்படைகளும் கொழும்பில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ள கடல் பிராந்தியத்தில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டன. இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான சாரதா கப்பலும் இந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.

இதேபோல் ஓபிவி சாயுரலா கப்பலும் இந்தப் பயிற்சியில் இணைந்து செயல்பட்டது. இதுகுறித்து மூத்த அதிகாரிகள் கூறுகையில், கடத்தலை முறியடிக்கவும், கடல்சார் தகவலை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

சிறிலங்கா  திறனை மேம்படுத்துதல்

MRCC-கள் ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் கீழ் வரும் சர்வதேச நெட்வொர்க் ஆகும்.
இவை, கடலில் ஏதாவது அவசர உதவிகள் தேவைப்படும்பட்சத்தில் கண்காணித்து நிறைவேற்ற விரைந்து உதவும் பணிகளை மேற்கொள்ளும். உதாரணத்துக்கு எண்ணெய் எடுத்துச் செல்லும் கப்பல் விபத்தில் சிக்கி விடும் பட்சத்திலும், மனிதர்கள் கடலில் சிக்கித் தவிக்கும் சமயங்களிலும் இவை உதவும்.

ஒவ்வொரு நாடும் அதன் சொந்த தேடல் மற்றும் மீட்புப் பகுதிக்கு பொறுப்பாகும். MRCC களின் பணி ஒவ்வொரு நாட்டிலும் கடற்படை அல்லது கடலோர காவல்படையால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

இந்தியாவில், கடலோர காவல்படை ஒருங்கிணைக்கும் நிறுவனமாகும். சிறிலங்கா  கடற்படைதான் இதனை செய்கிறது. பெங்களூருவை தளமாகக் கொண்ட BEL நிறுவனம், இலங்கையின் சிறிய MRCC ஐ மேம்படுத்துவதற்கு மேம்பட்ட மென்பொருள் அமைப்புகளை அமைப்புக்கும் பணிகளில் ஈடுபடவுள்ளது.

மேம்படுத்தப்பட்ட MRCC ஆனது கொழும்பில் உள்ள இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் இருந்து செயல்படும்.

அம்பாந்தோட்டாவில் ஒரு துணை மையம் இயங்கும். அங்கு சீன அரசுக்கு சொந்தமான நிறுவனம் ஆழமான நீர் துறைமுகத்தை நடத்தி வருகிறது. 2016 இல் இலங்கை அரசு சீனாவுக்கு அந்த இடத்தை குத்தகைக்கு கொடுத்தது.


இந்த ஒப்பந்தம் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் SAGAR (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) முன்முயற்சியின் ஒரு பகுதியாகத் தோன்றுகிறது. இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகள் 2011 இல் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பேசியதை தற்போது நடைமுறைக்குக் கொண்டு வருவதாக தெரிகிறது. இப்போது மொரிஷியஸும் இதில் உள்ளடங்கியுள்ளது.

 இலங்கை நிதி அமைச்சர் பி.ராஜபக்சே உடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
CSC தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் சமீபத்திய கூட்டத்தில், ஒத்துழைப்பின் “ஐந்து தூண்களை” அடையாளம் கண்டுள்ளது. அவை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு; தீவிரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்தல்; கடத்தல் மற்றும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல்; இணைய பாதுகாப்பு, முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு; மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவை ஆகும்.

சிறிலங்கா  விளக்கம்

MRCC இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு சில பகுதிகள் இலங்கை ஊடகங்களில் கசிந்தது.

இந்தியாவுடன் கையெழுத்தான இந்த ஒப்பந்தங்கள் பற்றி இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்தது.

இந்திய அரசாங்கத்துடன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் பாதுகாப்பு உடன்படிக்கைகள் பல அச்சு மற்றும் ஊடகங்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களால் சிறிலங்காவின்  தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.