கடலுக்கடியில் நெகிழி குப்பைகளை அகற்றும் 4 வயது சிறுமி!

ஞாயிறு ஜூலை 25, 2021

பிரேசில் - 4 வயது சிறுமி தன் தந்தையுடன் சேர்ந்து கடலில் இருக்கும் நெகிழி குப்பைகளை மீன்களும் ஆமைகளுக்கும் நடுவே சுத்தம் காட்சி செய்யும் காணொளி தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த நினா கோம்ஸ் என்ற 4 வயது சிறுமி, தந்தை கோம்ஸூடன் இணைந்து ரியோடிஜெனிரோ கடற்கரைப் பகுதிகளில் தேங்கியிருக்கும் நெகிழி குப்பைகளை அகற்றி வருகிறார்.

கடற்கரை பகுதிகள் மட்டுமல்லாது சிறிய படகு ஒன்றில் பயணித்து கடலுக்குள் இருக்கும் குப்பைகளையும் சேகரிக்கிறார். இதுகுறித்து பேசிய சிறுமி நினா கோம்ஸ், கடலை சுத்தப்படுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தந்தையிடம் இருந்து வந்ததாக கூறுகிறார்.

தனது தந்தை கோம்ஸ் கடல் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர் என தெரிவித்துள்ள நினா கோம்ஸ், அவற்றின் ஆரோக்கியமான வாழ்வுக்காகவும், கடலின் வளத்தை பாதுகாக்கவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

நெகிழி பொருட்கள், நெகிழி பைகள் ஆகியவை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் வளத்தை நேரடியாக பாதிப்பதாக நினா கோம்ஸ் தெரிவித்துள்ளார்.

கடலில் தேங்கியிருக்கும் நெகிழி குப்பைகளை அகற்றச் செல்லும்போது ஆமை உள்ளிட்ட உயிரினங்கள் நெகிழி பொருட்கள், வலைகளில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்ப்பது மனதுக்கு மிகவும் வேதனையாக இருப்பதாக சிறுமி நினா கோம்ஸ் கூறியுள்ளார்.

4 வயது சிறுமி, தந்தையுடன் கடலில் உள்ள நெகிழி குப்பைகளை சேகரிக்கும் காணொளி, தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அந்த சிறுமியின் செயலைக் கண்டு இயற்கை ஆர்வலர்கள் பலரும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் பதிவிட்டுள்ளனர்.