கடந்த காலங்களில் இருந்து சிறிலங்கா பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை என ஐ.நா வின் முன்னாள் பிரதி செயலாளர் சார்லஸ் பற்ரீ தெரிவித்துள்ளார்.

வியாழன் அக்டோபர் 24, 2019

சிறிலங்காவில் கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்களில் இருந்து சிறிலங்கா அரசாங்கமும் சர்வதேச சமூகமும் படிப்பினைகளை  கற்றுக்கொள்ளாமல் இருப்பதால் எதிர்காலத்தில் என்ன நடைபெற போகின்றது என அச்சம் கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பிரதி செயலாளரும், ருவண்டா இனப்படுகொலையின் போது ஐக்கிய நாடுகள் சபைக்கான மனிதாபிமான இணைப்பாளராக இருந்தவருமான சார்லஸ் பற்ரீ தெரிவித்துள்ளார்.

மேலும் சிறிலங்காவில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மூன்று வருடங்களின் பின்னர் 2012 இல்  ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க தவறிவிட்டது என்ற அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையை தயாரித்தவரும் சார்லஸ் பற்ரீ என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழீழ தமிழின படுகொலையை அங்கீகரிக்கும் மாநாடு இன்றைய தினம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது ஆக்கிய இராச்சியத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ருவண்டாவில் நிலைகொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் படைகள் வெளியேறி இரண்டு வராங்களின் பின்னர் தான் ருவண்டா இனப்படுகொலை நடைபெற்றது.  இவ்வாறு கடந்த காலங்களில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை படிப்பினைகளை கற்றுக்கொள்ளவில்லை. நூறாயிரக்கான மக்கள் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் தான் ஐக்கிய நாடுகள் சபைய அந்த விடயத்தை பாதுகாப்பு சபைக்கு பாரப்படுத்தியிருந்தது. மனித அழிவுள் நடைபெற்ற பின்னர் தான் சர்வதேச சமூகம் செயலாற்ற தொடங்குகின்றது எனவும் தெரிவித்தார்.