கடற்கரும்புலிகளின் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பிய 600 சிறீலங்கா கடற்படையினர்!!

புதன் ஜூலை 21, 2021

18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கை தொடங்கப்பட்டு படைத்தளத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கையை முறியடிக்கவும்,இழந்த தளத்தை மீளக் கைப்பற்றவும் சிறீலங்கா கடற்படையினரால் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட படையினரால் முல்லைத்தீவு தளம் நோக்கி பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க மேலதிக தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறீலங்கா கடற்படைக் கலங்கள் மீது கடற்புலிகளால் கடுமையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.

21.07.1996 அன்று 600 படையினருடன் அலம்பில் கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறீலங்கா கடற்படைத் தரையிறங்கு கலத்தினை இலக்கு வைத்து கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் ஆகியோரால் தாக்குதல் நடாத்தப்பட்டது.

கரும்புலிப் படகு தரையிறங்கு கலத்தினை நெருங்கி வருவதை கண்டுகொண்ட சிறீலங்கா கடற்படையினர் ஒரு சேர கடற்கரும்புலிகளின் படகின் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர்.

கடற்படையின் தாக்குதலில் சிக்காதவாறு கடற்கரும்புலிகள் தமது படகினை செலுத்தி தரையிறங்கு கலத்தினை நெருங்கியவேளை எதிர்பாராதவிதமாக படகு வெடித்துச் சிதறியது.

இதனால் குறித்த தரையிறங்கு கலமும் அதில் சென்ற 600 படையினரும் மயிரிழையில் உயிர் தப்பினர்.

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

111