கட்டாய கருத்தடை உரிமை மீறலாகும்!

திங்கள் ஜூலை 08, 2019

ஒரு சமூ­கத்தின் அதி­க­ரித்த சனத்­தொ­கை­யா­னது அச்­ச­மூ­கத்­துக்கு ஒரு பல­மாகும். எனவே தமது சமூ­கத்தின் சனத்­தொ­கையை அதி­க­ரிப்­பதில் பல சமூ­கங்கள் கவனம் செலுத்தி வரு­கின்­றன. இதே­வேளை ஒரு சமூ­கத்தின் ஆளு­மையை மழுங்­க­டிக்கச் செய்து, வீழ்ச்சிப் பாதையில் இட்டுச் செல்­வ­தற்கு அச்­ச­மூ­கத்தின் சனத்­தொ­கையை குறைப்­ப­திலும் சில நட­வ­டிக்­கை­களை இன­வா­திகள் மேற்­கொண்டு வரு­கின்­றனர். மலை­யக பகு­தி­களில் கட்­டாயக் கருத்­தடை என்னும் பெயரில் மேற்­கொள்ளப்படு­கின்ற நட­வ­டிக்கை இதில் ஒன்­றாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. கட்­டாய கருத்­த­டையின் கார­ண­மாக பாதக விளை­வுகள் பலவும் மேலோங்­கி­யுள்ள நிலையில் சமூ­கத்தின் இருப்பு, எதிர்­காலம் என்­ப­னவும் இதனால் கேள்­விக்­கு­றி­யாகி இருக்­கின்­றது. எனவே மலை­யக தமிழ் மக்கள் மீது திட்­ட­மிட்ட வகையில் மேற்­கொள்­ளப்­பட்ட கட்­டாய கருத்­தடை திட்டம் குறித்து தீர்க்­க­மான விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். தில­கராஜ் வலி­யு­றுத்தி இருக்­கின்றார். மேலும் கட்­டாய கருத்­த­டையின் பாதக விளை­வுகள் குறித்து தொழி­லா­ளர்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பது புத்­தி­ஜீ­வி­களின் கருத்­தாக உள்­ளது. 

மலை­யக சமூகம் வர­லாற்றில் பல்­வேறு சவால்­க­ளையும், நெருக்­கீ­டு­க­ளையும் சந்­தித்­தி­ருக்­கின்­றது. இவர்­களின் வர­லாறு என்­பது மிகவும் கசப்­பா­ன­தாகும். 19 ஆம் நூற்­றாண்டில் மலை­யக பகு­தி­களில் குடி­யே­றிய அல்­லது குடி­யேற்­றப்­பட்ட இம்­மக்கள் ஒரு பின்­தங்­கிய சமூ­க­மா­கவே இன்­று­வரை வாழ்ந்து வரு­வது ஒன்றும் புதிய விட­ய­மல்ல. இந்­தியத் தமிழ்த் தொழி­லாளர் இங்கு தரு­விக்­கப்­பட்டு குடி­யேற்­றப்­பட்ட தோட்­டங்கள் பெரும்­பாலும் மலைப்­பாங்­கான தொலைப் பிர­தே­சங்­களில் அமைந்­தி­ருந்­ததால் அவர்­க­ளது பல்­வேறு தேவைகள் தோட்­டங்­க­ளுக்­குள்­ளேயே பூர்த்தி செய்ய வேண்டி இருந்­தது. வாட­கை­யற்ற குடி­யி­ருப்பு, இல­வச மருத்­துவ விநி­யோகம், வைத்­தி­ய­சாலை, பிர­சவ விடுதி, குழந்தை பரா­ம­ரிப்பு நிலை­யங்கள் போன்ற வச­திகள் இவ்­வாறு செய்து கொடுக்­கப்­பட்ட வச­தி­களுள் சில­வாகும் என்­பது புத்­தி­ஜீ­வி­களின் கருத்­தாக உள்­ளது. எனினும் இவ்­வ­ச­திகள் ஒரு­போதும் ஆகக் குறைந்த மட்­டத்­திற்கும் மேலாக இருக்­க­வில்லை என்­ப­தையும் இவர்கள் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றனர். ஒரு ஒடுக்­கப்­பட்ட சமூ­க­மாக தோட்­டங்­களை நம்­பி­வாழும் சமூ­க­மாக அதி­க­மாக சுரண்­டப்­படும் ஒரு சமூ­க­மாக மலை­யக பெருந்­தோட்ட சமூகம் இருந்து வந்­தி­ருக்­கின்­றது.

இச்­ச­மூ­கத்தின் உரி­மை­களை மழுங்­க­டிப்பு செய்து இச்­ச­மூ­கத்தை வேர­றுக்கும் முனைப்­புகள், நட­வ­டிக்­கைகள் இன்று நேற்று ஆரம்­பிக்­கப்­பட்­டவை அல்ல. இதற்­கான வித்து நீண்­ட­கா­லத்­துக்கு முன்­ன­தா­கவே இடப்­பட்டு விட்­டது. ‘கொழும்பில் வசிக்கும்’ இந்­தி­யரை விட தோட்­டத்து கூலிக்கு நான் மிகவும் அஞ்­சு­கின்றேன் என்று இந்­தி­யரின் வாக்­கு­ரி­மையை ஒரு­சாரார் எதிர்த்­தனர். இந்­தி­யரின் வாக்­கு­ரி­மையை எதிர்க்­காதார் துரோ­கிகள் என்று சி.டபிள்யூ.டபிள்யூ. கன்­னங்­கரா கோஷ­மெ­ழுப்பி இருந்தார். சுதந்­தி­ரத்­திற்கு முன்னும் பின்னும் மலை­யக மக்­களின் துன்ப வர­லாறு தொடர்ந்து கொண்­டுதான் இருக்­கின்­றது. 

இந்­திய வம்­சா­வளி மக்­களின் இருப்­பினை சீர்­கு­லைக்­கவும் சகல துறை­க­ளிலும் இம்­மக்­களை ஓரம் கட்­டவும் திட்­ட­மிட்ட பட்­டி­யலில் அடிப்­ப­டை­யி­லான செயற்­பா­டுகள் இடம்­பெற்­றுக்­கொண்­டுதான் இருக்­கின்­றன. இலங்­கையில் முன்­வைக்­கப்­பட்ட சில சட்­டங்கள் இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரின் உரி­மை­க­ளுக்கு ஆப்பு வைப்­ப­தாக அமைந்­தன. ஒப்­பந்­தங்­களின் விளை­வாக பலர் இந்­தியா செல்ல நேர்ந்­ததால் இம்­மக்­களின் செறிவு கேள்­விக்­கு­றி­யாகி இருந்­தது. மலை­யக மாவட்­டங்­களில் செறிந்து வாழ்ந்த இந்­தியத் தமி­ழர்­களில் மூன்று இலட்­சத்து 37 ஆயி­ரத்து 410 பேர் 1987 இன் இறு­தி­வரை இந்­தியா திரும்பி இருந்­த­தாக பேரா­சி­ரியர் சோ. சந்­தி­ர­சே­கரன் தனது கட்­டுரை ஒன்றில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். மேலும் 1981 ஆம் ஆண்டின் குடி­சன மதிப்­பீட்டு அறிக்­கையின்படி 75 ஆயிரம் பேர் வரை வட­மா­காணம் சென்று குடி­யேறி இருந்­தனர். 1958, 1977, 1981 ஆகிய ஆண்­டு­களில் மலை­யக மாவட்­டங்­களில் ஏற்­பட்ட இனக்­க­ல­வ­ரங்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­மை­யாலும், 1972 இல் பெருந்­தோட்­டங்­களை அர­சாங்கம் பொறுப்­பேற்ற பின்னர் ஏற்­பட்ட வேலை­யின்­மைப்­பி­ரச்­சினை, உண­வுப்­பற்­றாக்­குறை முத­லிய பாதிப்­பு­க­ளாலும் வட­மா­கா­ணத்­திற்குப் பலர் சென்று குடி­யேற நேர்ந்­தது. 

இவ்­வா­றான மக்கள் வெளி­யேற்றம் குடித்­தொகை ரீதி­யாக மலை­யக மாவட்­டங்­களில் இந்­தி­யர்­களின் வலி­மையைக் குறைத்­தி­ருக்­கின்­றது. 1958 தொடக்கம் ஏற்­பட்ட இனக்­க­ல­வ­ரங்­களும் பெருந்­தோட்ட தேசி­ய­மயம் ஏற்­ப­டுத்­திய பாதக விளை­வு­களும் இந்­தியத் தமி­ழர்கள் இலங்கை – இந்­திய ஒப்­பந்­தங்­களின் கீழ் தமது தாய­கத்தை நாடு­வதை ஊக்­கு­வித்­தன என்­ப­தையும் பேரா­சி­ரியர் சோ. சந்­தி­ர­சே­கரன் சுட்­டிக்­காட்டி இருக்­கின்றார்.

பிழை­யான பதி­வுகள்

மலை­ய­கத்தில் வாழும் இந்­திய வம்­சா­வ­ளி­யினர் சிலர் தாம் ‘இந்­திய வம்­சா­வ­ளி­யினர்’ என்று சில இடங்­களில் அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பு­வ­தில்லை. இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என்றால் தொழி­லா­ளர்கள், தோட்­டத்தில் வாழ்­ப­வர்கள் என்று நினைப்­பார்கள். இது நமக்கு நல்­ல­தல்ல. எனவே ‘இலங்கைத் தமிழர்’ என்று குறிப்­பி­டு­வதே சிறந்­தது என்று கருதும் சிலர் குடி­சன மதிப்­பீட்டு படி­வங்­க­ளிலும் ஏனைய ஆவ­ணங்­க­ளிலும் ‘இலங்கைத் தமிழர்’ என்றே அடை­யா­ளப்­ப­டுத்தி வரு­கின்­ற­மையை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இந்­நி­லை­யா­னது இந்­திய வம்­சா­வளி மக்­களின் சனத்­தொ­கையில் ஒரு பாதிப்பு நிலை­யினை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. இந்­தியத் தமி­ழர்­களின் உண்­மை­யான தொகை இதனால் மூடி மறைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இது இம்­மக்­களின் அபி­வி­ருத்­திக்கும், உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கும் உகந்த ஒரு விட­ய­மாக இல்லை. இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரின் தொகையில் குறைவு நிலை காணப்­ப­டு­வது மேலெ­ழும்பத் துடிக்கும் ஒரு சமூ­கத்­துக்கு உகந்­த­தல்ல. சனத்­தொகை அதி­க­ரிப்பு நிலை­யா­னது பேரம் பேசும் சக்­தி­யினை வலுப்­ப­டுத்தும். அர­சியல், பொரு­ளா­தார மற்றும் ஏனைய உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்ள உந்­து­சக்­தி­யாக அமையும். வாக்­குப்­பலம் ஆதிக்கம் செலுத்தும். சமூக பலம் இதனால் ஏற்­படும். சனத்­தொகை குறைவு என்­பது இவற்­றுக்­கெல்லாம் முற்­றுப்­புள்ளி வைப்­ப­தா­கவே அமையும். சமூ­கத்தின் கோரிக்­கைகள் ஈடு­ப­டாத ஒரு நிலை­யினை இது தோற்­று­விக்கும். இந்­நி­லையில் இன­வாத சிந்­த­னை­யா­ளர்கள் மலை­யக மக்­களின் எழுச்­சியை தடுத்து சகல துறை­க­ளிலும் நிர்­வா­ணப்­ப­டுத்தும் நோக்கில் பல்­வேறு புறக்­க­ணிப்பு நட­வ­டிக்­கைகள், மட்­டந்­தட்­டல்கள், உரி­மை­ மீ­றல்கள், கருத்­து­களை புறந்­தள்­ளுதல் போன்ற பல நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இத­ன­டிப்­ப­டையில் இம்­மக்­களின் சனத்­தொ­கையில் வீழ்ச்சி நிலை­யினை உண்­டு­பண்ணி இவர்­களின் ஆதிக்­கத்தை வேர­றுப்­பதும் இன­வா­தி­களின் ஒரு கைங்­க­ரி­ய­மாக உள்­ளது.

வறுமை நிலை

பெருந்­தோட்ட மக்கள் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு அதி­க­மாக முகம் கொடுத்து வரு­கின்ற ஒரு நிலைமை நீண்­ட­கா­ல­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. உழைப்­புக்­கேற்ற ஊதியம் இல்­லாது வறு­மையில் இவர்கள் வாடு­கின்­றனர். இந்த வறு­மையை மையப்­ப­டுத்தி பல அத்­து­மீ­றல்கள் இச்­ச­மூ­கத்­தினர் மீது இடம்­பெ­று­கின்­றன. குடும்பக் கட்­டுப்­பாடு அல்­லது கட்­டாயக் கருத்­தடை இதில் ஆதிக்கம் செலுத்­து­கின்­றன. பெருந்­தோட்ட மக்­களின் வறு­மை­நிலை அச்­ச­மூ­கத்தின் வளர்ச்­சிக்கு ஒரு பாரிய தடை­யாக இருக்­கின்­றது என்­பது யாவரும் அறிந்த ஒரு விட­ய­மாகும். வறுமை கார­ண­மாக தொடர்ச்­சி­யாக அவர்கள் நீண்­டநாள் போராட்­டங்­களில் ஈடு­பட முடி­யாத ஒரு நிலையே காணப்­ப­டு­கின்­றது. 1990/91 இல் பெருந்­தோட்ட வறுமை நிலை 20.5 வீத­மாக இருந்­தது. 1995/96 இல் இது 38.4 வீத­மாக உயர்­வ­டைந்­தது. 2002 ஆம் ஆண்டில் பெருந்­தோட்ட வறுமை நிலை முப்­பது வீத­மா­கவும். 2006/07 இல் 32 வீத­மா­கவும் 2009/10 இல் 9.2 வீத­மா­கவும் இது காணப்­ப­டு­வ­தாக 2009/10 இன் ஆய்வு ஒன்றில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. 

எனினும் பெருந்­தோட்ட மக்­களின் வறுமை நிலை திடீ­ரென்று 9.2 வீத­மாக குறை­வ­டைந்­தமை தொடர்பில் பலரும் சந்­தேகம் வெளி­யிட்­டுள்­ள­மையும் நோக்­கத்­தக்க ஒரு விட­ய­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. பெருந்­தோட்ட மக்­களின் நீடித்த வறுமை நிலை­யா­னது பாதிப்­புகள் பல­வற்­றுக்கும் உந்து சக்­தி­யாக அமைந்­தி­ருக்­கின்­றது. அம்­மக்­களின் வறுமை நிலை­யினை சாட்­டா­கக்­கொண்டு அம்­மக்­களின் இருப்­பினைச் சீர்­கு­லைப்­ப­தற்கும் சில சக்­திகள் முயன்று வரு­வதும் தெரிந்த விட­ய­மாகும். 1981 இல் மேற்­கொள்­ளப்­பட்ட குடித்­தொகை கணிப்­பீட்டின் படி பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் குடும்­பங்­களின் சரா­சரி அளவு 5.4 ஆக இருந்­தது. சரா­ச­ரி­யாக குடும்பம் ஒன்­றிற்கு 3, 4 பிள்­ளைகள் என்ற அளவில் காணப்­பட்­டது. பெருந்­தோட்ட மக்கள் வறுமை நிலையில் உள்ள நிலையில் குடும்­பக்­கட்­டுப்­பாட்­டுத்­திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. தொழி­லாளர் குடும்­பங்­களில் வாழ்க்கைத் தரத்­தினை உரு­வாக்­கு­தலே குடும்பக் கட்­டுப்­பாட்டுத் திட்டம் பெருந்­தோட்டத் தொழி­லாளர் மத்­தியில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­மைக்­கான முக்­கிய நோக்கம் என்றும் தக­வல்கள் வலி­யு­றுத்தி இருந்­தன. இதனைச் சிலர் வர­வேற்றுப் பேசியும் இருந்­தனர். அதி­க­மான பிள்­ளை­களைப் பெற்­றுக்­கொள்­வதால் குடும்­பத்தின் சுமை மேலும் அதி­க­ரிக்கும். அவர்­க­ளுக்கு உரிய வச­தி­களைச் செய்து கொடுக்க முடி­யாத நிலையும் ஏற்­படும். எனவே திட்­ட­மிட்ட சிறிய குடும்பம் இம்­மக்­களின் நலன்­க­ளுக்கு வலுச்­சேர்க்கும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டது. 

மலை­யக மக்­க­ளி­டையே கல்வி விருத்தி உரி­ய­வாறு காணப்­ப­ட­வில்லை. பெண்­களின் கல்வி நிலை­மைகள் மிகவும் பின் தங்­கிய ஒரு நிலையில் உள்­ளன. வீட்டு வச­திகள் உரி­ய­வாறு இல்லை. இந்­நி­லையில் குடும்­பக்­கட்­டுப்­பாட்டு விட­யங்­களை விளங்கிக் கொண்டு செயற்­ப­டு­வதில் தொழி­லா­ளர்கள் பல்­வேறு சிக்­கல்­களை எதிர்­நோக்­கு­வ­தாக 1992 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் கருத்­துக்கள் மேலோங்கிக் காணப்­பட்­டன. குடும்பக் கட்­டுப்­பாட்டுத் திட்டம் தொடர்பில் பல்­வேறு கேள்­விகள் அக்­காலப் பகு­தியில் எழுப்­பப்­பட்­டமை குறித்து பேரா­சி­ரியர் மா.செ. மூக்­கையா தனது நூல் ஒன்­றிலும் சுட்­டிக்­காட்டி இருக்­கின்றார். வீட்டு வசதி குறிப்­பாக தனி­யறை வச­தி­க­ளற்ற வீடு­களில் குடும்பக் கட்­டுப்­பாட்­டினைப் பின்­பற்றும் தம்­ப­தி­யி­ன­ருக்கு வச­தி­களை எவ்­வாறு வழங்­கலாம்? குடும்பக் கட்­டுப்­பாட்டை வெற்­றி­யுடன் செயற்­ப­டுத்த உத­வி­யாக தோட்ட மருத்­துவ நிலை­யங்­களை அரசின் சுகா­தார திணைக்­க­ளத்தின் பொறுப்பில் விட்­டு­வி­டாமல் இன்னும் ஏன் அரை குறை வச­தி­யுடன் தோட்ட நிர்­வா­கத்தின் கீழேயே செயற்­பட விடப்­ப­டு­கின்­றது? நாட்டின் ஏனைய அரச தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் அரசின் சம்­பள உயர்­வுகள் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு மட்டும் அசட்டை செய்­யப்­ப­டு­கின்­றது. ஆனால் குடும்பக் கட்­டுப்­பாட்டு விட­யத்தில் மாத்­திரம் விசு­வா­ச­மாக சம சந்­தர்ப்பம் வழங்கி செயற்­பட காரணம் என்ன? நிரந்­தர கட்­டுப்­பாட்டு அறுவைச் சிகிச்­சைக்கு மூன்று குழந்­தைகள் உள்ள குடும்­பங்­களே தெரி­யப்­படும் என்­பது கொள்கை. ஆனால் இரண்டு குழந்­தைகள் மட்டும் உள்ள பெண்கள் சில­ருக்கு அத்­த­கைய குடும்பக் கட்­டுப்­பாட்டு அறுவைச் சிகிச்சை அளிக்­கப்­பட்­டி­ருப்­பது ஏன்? என்று பல கேள்­வி­களை இங்கு எழுப்­பி­யுள்­ள­மையும் நோக்­கத்­தக்­க­தா­கவே உள்­ளது. பின்­தங்­கிய மக்கள் என்ற ரீதியில் குடும்பக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கைகள் மலை­யக பெருந்­தோட்ட மக்­க­ளி­டையே இல­குவில் சாத்­தி­ய­மா­கின. இம்­மக்­களின் ஏழ்மை, அறி­யாமை என்­பன கருத்­த­டைக்கு வலுச்­சேர்த்­தன. கணவன் –மனைவி இரு­வரும் கலந்­து­பேசி தமது நிலை­யினை உணர்ந்­து­கொண்டு புரிந்­து­ணர்வின் அடிப்­ப­டையில் குடும்பக் கட்­டுப்­பாடு விட­யத்தில் கவனம் செலுத்த வேண்டும். எனினும் இது எந்­த­ள­வுக்கு மலை­யக பெருந்­தோட்­டப்­பு­றங்­களில் சாத்­தி­ய­மாகி இருக்­கின்­றது என்று சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. நிர்­வா­கத்தின் தலை­யீ­டுகள் கட்­டாய கருத்­தடை நிலை­மை­க­ளுக்கு வித்­திட்­டி­ருக்­கின்­றன. தனிப்­பட்ட அந்­த­ரங்க வாழ்க்­கையில் நிர்­வா­கத்தின் தலை­யீட்­டினை எம்மால் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. பெருந்­தோட்ட முறை­மைக்குள் வாழும் மக்­களின் சகல அம்­சங்­களும் நிர்­வா­கத்­தினால் கட்­டுப்­ப­டுத்­தப்­படும் ஒரு நிலை­மை­யினை  அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­கவே உள்­ளது.

கலா­நிதி ஏ.எஸ். சந்­தி­ரபோஷ் 

மலை­யக பெருந்­தோட்­டங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட குடும்பக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கைகள் பல தாக்க விளை­வு­களை ஏற்­ப­டுத்தி இருந்­தன. குடும்­பங்­களின் வாழ்க்கைத் தரத்­தினை உரு­வாக்­கு­வ­தற்­காக குடும்பத் திட்­ட­மிடல் முன்­வைக்கப் பட்­ட­தாக கூறப்­பட்­டமை தொடர்பில் விமர்­ச­னங்கள் மேலெ­ழுந்­தன. குடும்­பங்­களின் வாழ்க்­கைத்­த­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கு குடும்­பத்­திட்­ட­மிடல் மட்டும் சாத்­தி­ய­மா­குமா? என்றும் கேள்வி எழுப்­பப்­பட்­டது. இந்த கேள்­வியின் நியா­யத்­தன்மையினையும் நாம் புரிந்து கொள்­ளுதல் வேண்டும். இதற்­கி­டை­யில குடும்பக் கட்­டுப்­பாடு அல்­லது கட்­டாய கருத்­த­டை­யினால் ஏற்­பட்ட பாதக விளை­வுகள் பல­வற்றை திறந்த பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி ஏ.எஸ். சந்­தி­ரபோஷ் பின்­வ­ரு­மாறு வலி­யு­றுத்தி இருந்தார். குறைந்­த­ளவு மக்கள் தொகை வளர்ச்­சி­யுள்ள இன­மாக மலை­யக சமூகம் காணப்­ப­டு­வ­தாக கடந்­த­கால ஆய்­வுகள் வலி­யு­றுத்தி இருந்­தன. 1980– 1990 காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வுகள் மலை­யக மக்­களின் வறுமை நிலையை தெளி­வாக வெளிப்­ப­டுத்தி இருந்­தன. வறு­மையும் குடும்பக் கட்­டுப்­பாடும் தொடர்­பு­பட்ட நிலையில் குடும்பக் கட்­டுப்­பாட்­டுக்கு அழுத்­தங்கள் கொடுக்­கப்­பட்­டன. குடும்பக் கட்­டுப்­பாட்டு நிலை­யா­னது பாரிய விளை­வு­களை சமூ­கத்தில் ஏற்­ப­டுத்தி  இருந்­தது. கட்­டாய கருத்­தடை நிலை­மைகள் கணி­ச­மான சமூக பாதிப்­பிற்கு வித்­திட்­டி­ருந்­தது. பெண்கள் பல­வித நோய் நொடி­க­ளுக்கு ஆளாகி இருந்­தனர். சில பெண்கள் அதி­க­ளவு இரத்தப் போக்­கிற்கு உள்­ளா­னார்கள். உடல் பல­வீ­ன­மா­னது. உடல் ஆரோக்­கி­யத்­திற்கு பாதிப்பு ஏற்­பட்­டது. 1990 ஆம் ஆண்டில் மலை­யக தோட்­ட­மொன்றில் அதிக வீத­மான பெண்கள் கருத்­தடை செய்து கொண்­டனர். கருத்­தடை செய்து கொண்ட பெண்­க­ளுக்கு வாகன வச­திகள், கொடுப்­ப­னவு, விடு­முறை என்­பன வழங்­கப்­பட்­டன. அற்ப சலு­கை­க­ளுக்­காக பல பெண்கள் கருத்­தடை செய்­து­கொள்ள முன்­வந்­தனர். சனத்­தொகை வீழ்ச்சி நிலை­க­ளுக்கும் மத்­தியில் இனம் பற்­றிய சிந்­தனைச் சீர­ழிவு ஏற்­பட்­டது. கருத்­த­டையின் ஊடாக ஆரோக்­கி­ய­மான சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்­பலாம் என்று எண்ணம் கொண்­டி­ருந்­தனர். எனினும் இது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. ஆரோக்­கி­ய­மான சமூக வளர்ச்சி எதுவும் ஏற்­ப­ட­வில்லை. மோச­மான அத்­து­மீறல் நட­வ­டிக்­கை­யாக இது அமைந்­தது என்றே நான் கரு­து­கின்றேன் என்று கூறி­யுள்ள கலா­நிதி ஏ.எஸ். சந்­தி­ரபோஸ் எதிர்­பா­ராத வகையில் குடும்பப் பிரச்­சி­னைகள் பலவும் மேலோங்கி இருப்­ப­தா­கவும் கூறி­யுள்ளார். கருத்­த­டையை முன்­வைத்த அறி­ஞர்கள் தொடர்­பிலும் அவர் கேள்வி எழுப்பி இருக்­கின்றார். கருத்­தடை செய்து கொண்ட சில பெண்கள் முறை­யற்ற உற­வு­களில் ஈடு­பட்­டி­ருந்­தனர். கண­வனைத் தவிர வேறு ஆண்­க­ளு­டனும் சிலர் தொடர்­பு­களை வைத்துக் கொண்­ட­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­கவே இருந்­தது. தனக்கு கருத்­த­ரிப்பு நிக­ழாது என்ற துணிவு சில பெண்­களை பிழை செய்யத் தூண்டி இருந்­தது. இதனால் குடும்ப உற­வுகள் சீர்­கு­லைந்து பிரச்­சி­னைகள் மேலோங்கி இருந்­தன. இதே­வேளை கருத்­தடை முறை­யாக இடம்­பெ­றாத ஆண்கள் தொடர்­பிலும் பிரச்­சி­னைகள் மேலெ­ழுந்­தன. இது ஒரு­பு­ற­மி­ருக்க மலை­யகப் பகு­தி­களில் சில கருக்­க­லைப்பு நிலை­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. இங்கு அவ்­வப்­போது கருக்­க­லைப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்­நி­லை­மை­யா­னது பிறப்பு குறைவு நிலைக்கு வித்­தி­டு­வ­தோடு எமது சனத்­தொ­கை­யிலும் தாக்க விளை­வு­களை உண்­டு­பண்­ணு­கின்­றது.

கட்­டாயக் கருத்­தடை

குடும்பத் திட்­ட­மிடல் என்­பது அவ­ரவர் இயல்­பாகத் தீர்­மா­னிக்க வேண்­டிய ஒரு விட­ய­மாகும். இதில் பிறரின் தலை­யீடு கண்­டிக்­கத்­தக்­க­தாகும். இந்­நி­லையில் எவரும் கட்­டாய கருத்­த­டைக்கு தூண்டவிய­லாது. அவ்­வாறு தூண்­டப்­ப­டு­மி­டத்து அது பல்­வேறு சந்­தே­கங்­க­ளையும் தோற்­று­விப்­ப­தாக அமையும். இந்த வகையில் மலை­ய­கத்தில் கடந்த காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட கட்­டாயக் கருத்­தடை குறித்து விசா­ரணை வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். தில­கராஜ் அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் வலி­யு­றுத்தி இருக்­கின்றார். இது மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்க ஒரு கோரிக்­கை­யாக உள்­ளது. மலை­யக மக்­களின் குடி­யு­ரிமை பறிக்­கப்­பட்­டமை, சிறிமா– சாஸ்­திரி ஒப்­பந்­தத்தின் கீழ் இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரை நாடு கடத்­தி­யமை, பொரு­ளா­தார ரீதி­யாக மலை­யக மக்­களை நசுக்கும் வகையில் பெருந்­தோட்ட பொரு­ளா­தா­ரத்தை திட்­ட­மிட்டு வீழ்ச்­சி­ய­டையச் செய்­தமை, மலை­யக மக்கள் மீது திட்­ட­மி­டப்­பட்ட முறையில் கட்­டாய கருத்­தடை முறை­மையை நடை­முறைப்படுத்­தி­யமை என்று இந்­நாட்டு மலை­யக மக்­களின் மீது நான்கு அநீ­திகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன.

1985 இற்கும் 2015 ற்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் மலை­யக பெருந்­தோட்டப் பகு­தி­களில் திட்­ட­மி­டப்­பட்ட வகையில் கட்­டாய கருத்­தடை நிகழ்ச்சித் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. தற்­போது நாட்டில் சனத்­தொ­கையை இன ரீதி­யாக  கட்­டுப்­ப­டுத்தும் கைங்­க­ரி­யங்கள் இடம்­பெ­று­வ­தா­கவும் அது பற்­றிய தீர்க்­க­மான விசா­ரணை வேண்­டு­மென்றும் கோரிக்­கைகள் எழுந்­துள்­ளன. அவ்­வாறு விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­மாயின் மலை­யக தமிழ் மக்கள் மீது திட்­ட­மி­டப்­பட்ட வகையில் மேற்­கொள்­ளப்­பட்ட கட்­டாய கருத்­தடை திட்டம் தொடர்­பில தீர்க்­க­மான நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். மலையக மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்தார். உண்மையில் இது வரவேற்கக்கூடிய ஒரு விடயமேயாகும். கட்டாய கருத்தடை என்பது ஒரு உரிமை மீறலாகும். மலையக சமூகத்துக்கு இது ஒரு அவமானமாகும். கட்டாய கருத்தடை இன அழிப்புக்கு வித்திடுமாகையால் இது பற்றி கூடுதலாகவே கவனம் செலுத்த வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது. 1985 முதல் கட்டாய கருத்தடையின் பேரில் மலையகத்தில் இன அழிப்பு இடம்பெறுகின்றமை தொடர்பில் இப்போது அதிகமாகப் பேசப்படுகின்றது. அரச வைத்தியர்கள், தோட்ட நிர்வாகம், தோட்ட மருத்துவ உதவியாளர்கள் இணைந்து கொண்டு கருத்தடை நடவடிக்கைகளுக்கு உரமூட்டி வருகின்றமையை அறியக்கூடியதாக உள்ளது. மலையக சனத்தொகை 4.5  வீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்றால் அதில் கட்டாய கருத்தடையின் பங்களிப்பு என்பது அதிகமாகவே காணப்படுகிறது எனலாம். மலையகத்தைப் பொறுத்தமட்டில் கருத்தடை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் அழுத்தமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது குறித்து மலையக அரசியல்வாதிகள் கூடுதலாகவே கவனம் செலுத்துதல் வேண்டும். முறையற்ற செயற்பாடுகளினால் ஒரு இனம் அழிவதை பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிடுதல் அவ்வினத்துக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

இனவாதிகள் வறுமையை சாதகமாக்கிக்கொண்டு இன அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதையே உணரக்கூடியதாக உள்ளது. இந்நிலையில் வறுமையில் இருந்தும் மலையக மக்கள் மீண்டெழுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அரசாங்கத்தின் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மலையகத்திற்கு விஸ்தரிக்கப்படுதல் வேண்டும். கட்டாய கருத்தடை நிலைமைகள் சமூகத்தில் பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் மலையக மக்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசியல் வாதிகள் சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் அனைவரின் பங்குபற்றுதலுடன் ஒன்றிணைந்த வேலைத் திட்டம் அவசியமாகும்.

துரைசாமி நடராஜா