கத்தியின்றி,ரத்தமின்றி சீனாவின் தந்திர யுத்தம்!!

செவ்வாய் நவம்பர் 17, 2020

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேரும், சீன தரப்பில் 35 பேரும் உயிர் இழந்தனர்.

இது தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இரு தரப்பிலும் ஒப்பு கொள்ளப்பட்டது.  

எனினும், எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்தது.

இந்நிலையில் சீன படையினர் இந்திய வீரர்களை பின்னோக்கி செல்ல பயன்படுத்திய யுத்த முறைகள் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  

சீன படைகள் இமயமலை பகுதியில், இந்திய ராணுவ வீரர்களை பின்னோக்கி செல்ல வைக்க தந்திர யுத்த முறையை கையாண்டுள்ளது.

இதுபற்றி பீஜிங் நகரில் சர்வதேச படிப்புக்கான நிபுணர் ஜின் கேன்ராங் தனது மாணவர்களிடையே கூறும்பொழுது, சீன படைகள் மைக்ரோவேவ் ஆயுதங்களை பயன்படுத்தியது.

இந்த மின்காந்த (எலெக்ட்ரோமேக்னடிக்) ஆயுதங்கள் ஆனது, எதிரி படைகளில் உள்ள மனிதர்களின் திசுக்களை சமைக்க கூடிய சக்தி படைத்தது.  இதனால் மலை முகடானது மைக்ரோவேவ் ஓவனாக மாற்றப்பட்டு உள்ளது.  

ஆயுதங்களை குவித்த 15 நிமிடங்களில் அவை வாந்தி உண்டு பண்ணும்.

இதனால், மலை உச்சியில் திரண்ட வீரர்கள் அனைவரும் வாந்தியெடுக்க தொடங்கி, நிற்க முடியாமல் தப்பியோடி விட்டனர்.  நிலம் மீண்டும் நமது கட்டுக்குள் வந்தது என கூறியுள்ளார்.

மைக்ரோவேவ் ஆயுதங்கள், சமையலறையில் பயன்படுத்தும் ஓவன்களின் செயலை ஒத்தது.  

அவை நீர் மூலக்கூறுகளை வெப்பமடைய செய்யும்.  இதன்படி, தோலின் அடிப்புறம் உள்ள நீரானது இலக்காக கொள்ளப்பட்டு,0.6 மைல்கள் தொலைவில் உள்ள நபருக்கும் பெருத்த வலியை உண்டு பண்ணும்.  பின்னர் வலி அதிகரிக்கும்.

சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் ஒப்பந்தத்தின்படி, துப்பாக்கி சூடு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.  

இதனை குறிப்பிட்ட ஜின், விதிகளை மீறாமல்,இந்திய வீரர்களை மிக அழகாக சீன படையினர் வெளியேற்றி விட்டனர் என மாணவர்களிடம் புகழ்ந்து கூறியுள்ளார்.

இந்த ஆயுதங்களை பயன்படுத்தும் யுத்த தந்திரம், இரு படை வீரர்களுக்கும் இடையேயான கல் வீச்சு  ஆகஸ்டு இறுதியில் நடத்தப்பட்டு உள்ளது.

இவ்வகை ஆயுதங்கள், ஒரு சூடான பல்பை தொட்டால் ஏற்படும் உணர்வை தரும்.  

இந்த தாக்குதலில் நீண்டநேரம் இருக்கும்பொழுது, கதிர் வீச்சினால் தலைவலி, மூச்சு திணறல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும்.

சீனாவின் இந்த ஆயுதங்களையொத்த,அமெரிக்காவின் ஆயுதங்கள் இதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் குவிக்கப்பட்டன.  

எனினும்,மனிதர்களுக்கு எதிராக அவற்றை பயன்படுத்துவதற்கு முன்பே அமெரிக்கா வாபஸ் பெற்று கொண்டது.

அமெரிக்காவில் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் அரசு இந்த முறையை வாபஸ் பெற்றது என கூறப்படுகிறது.  

ஆனால்,சீனாவில் எதிர்க்க அரசியல் கட்சிகள் இல்லாத சூழலில், தொடரும் ஒரு கட்சி ஆட்சி நடைமுறையால் தைரியமுடன் இதுபோன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

இதனால், உலகில் எதிரி படைகளுக்கு எதிராக முதன்முறையாக இந்த வகை ஆயுதங்களை பயன்படுத்திய நாடாக சீனா அறியப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டிலேயே அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு எதிராக இதுபோன்ற ஆயுதங்களை சீனா பயன்படுத்தியது என்றும் சில சந்தேகங்கள் உலா வருகின்றன.  

இதனால் சீனாவில் அமெரிக்க தூதர்கள் உடல்நலம் குன்றினர்.  

இதன் தொடர்ச்சியாக கியூபாவிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.