குளச்சல் துறைமுகம் தேவையா? சுப. உதயகுமாரன்

ஞாயிறு நவம்பர் 22, 2015

கன்னியாகுமரி மாவட்டத்தின் அரபிக்கடல் கரையோரத்திலுள்ள குளச்சல் எனும் ஊரில் துறைமுகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளூர் மக்களின் நீண்டநாள் விருப்பம். ஒவ்வொரு தேர்தலிலும் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த அனைத்து வேட்பாளர்களும் இந்த வாக்குறுதியைத் தவறாது கொடுப்பார்கள், தவறாது மறப்பார்கள். வேடிக்கை என்னவென்றால், மக்கள் மீன்பிடித் துறைமுகக் கனவிலிருந்தனர்; அரசியல்வாதிகள் வர்த்தகத் துறைமுகக் கண்ணாமூச்சிக் காட்டினர். ஆளாளுக்கு எதையெதையோப் பேசிக் கொண்டிருந்தாலும், எதுவும் நடக்கவில்லை.

“மீன்பிடித் துறைமுகம் கட்டுங்கள், மீன் பதனிடும் நிலையம் கட்டுங்கள், எங்கள் மீனுக்கு அதிக விலை கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்பதுதான் மீனவர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் நமது அதிகார வர்க்கம் கொட்டைப்பாக்குக்கு விலை கேட்டால், பட்டுக்கோட்டைக்குத்தானே வழி சொல்லும்? அதற்கிணங்க, மத்திய, மாநில அரசுகள் வர்த்தகத் துறைமுகம் கட்டுவோம் என்றார்கள். இப்படியாக குளச்சல் பற்றிய குழப்பங்களுக்கு குறைச்சலே இருக்கவில்லை.

கடந்த 2013-ஆம் ஆண்டின் இறுதியில் ஜெயலலிதா அரசு ரூ. 87.75 கோடியை இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கியது. குளச்சல் கடற்கரையின் கிழக்குப் பகுதியில் 540 மீட்டர் நீளத்திலும், மேற்குப் பகுதியில் 230 மீட்டர் நீளத்திலும் அலைமுறித் தடுப்புச்சுவர்கள் கட்டும் பணி தொடங்கியது.

தற்போது குளச்சல் வர்த்தகத் துறைமுகத்தின் சாத்தியக் கூறுகளை கண்டறிவதற்காக ஸ்பெயின் நாட்டு நிறுவனமான டெக்னிக்கா யி பிரயக்டோஸ் (Tecnica y Proyectos) மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப்—இந்தியா (Boston Consulting Group--India) எனும் இரண்டு நிறுவனங்களை தூத்துக்குடி துறைமுகத்தின் தலைமைப் பொறியாளர் திருமதி. எல். ஏ. மாத்யூ பணித்திருகிறார். மார்ச் 17, 2015 தேதியிட்ட அவரது ஆணையில் 90 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி மேற்கண்ட நிறுவனங்களைக் கோரியிருக்கிறார். இந்தத் திட்டம் குறித்து சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை எதுவும் இதுவரை தயாரிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

குளச்சல் கடற்கரையிலிருந்து சுமார் 2 கி.மீ. நீளத்துக்கு பாலம் அமைத்து நடுக்கடலில் சுமார் 400 ஹெக்டேர் பரப்பளவில் செயற்கை நிலப்பரப்பை உருவாக்கி, அங்கே கப்பல்களை நிறுத்தத் திட்டமிடுகிறார்களாம். கிழக்கு ஆசியாவிலிருந்து வரும் கப்பல்கள் இந்தத் துறைமுகத்தில் தங்கள் பொருட்களை இறக்கிவைத்துவிட்டுச் சென்ற பின்னர், மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் செல்லும் கப்பல்கள் இந்தச் சரக்குகளை ஏற்றிச் செல்லுமாம். குளச்சல் கடல் தூத்துக்குடி துறைமுகக் கடல் பகுதியை விட மிகவும் ஆழமானது என்பதால், இந்தத் திட்டத்தை மத்திய அரசு விரும்புகிறதாம்.

குளச்சல் வர்த்தக துறைமுகத் திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன், அடுத்த அங்கமாக கடற்கரைப்பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்படுமாம். ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தப்பட்டத் தொழில்கள், பல்வேறுப் பொருட்களின் உற்பத்தி ஆலைகள் என ஏராளமான நிறுவனங்கள் வந்தேறும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவச நிலம், தண்ணீர், மின்சாரம், மாசுபடுத்தும் உரிமை, தொழிலாளர் நலம் மற்றும் சூழல் நலனை எல்லாம் புறக்கணிக்கும் அனுமதி போன்றவற்றை வாரிக் கொடுத்துவிட்டு, “வேலைவாய்ப்பு உருவாகிறது பார்” என்று மத்திய, மாநில அரசுகள் வழக்கம்போல நம்மை ஏமாற்றும்.

எத்தனை லட்சம் மீனவர்களின், விவசாயிகளின் வாழ்க்கையை அழித்துவிட்டு, இந்த சில ஆயிரம் துறைமுக வேலைகளை உருவாக்குவார்கள்? இவ்வளவு பெரிய துறைமுகத்துக்கும், அதன் பின்னணியில் நடைபெறவிருக்கும் குடியேறல்களுக்கும், தொழில்களுக்கும் ஏராளமான நன்னீர் தேவைப்படுமே, அதற்கு என்ன செய்வது? பரப்பளவில் மிகச் சிறியதான குமரி மாவட்டத்தின் வளமான நிலங்களை “வளர்ச்சி”யின் பெயரால் அழித்துவிட்டால், உணவுக்கும் (அரிசி, தேங்காய்), ஊட்டச்சத்துக்கும் (மீன்) என்ன செய்வோம்? ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை அனைத்து கடலோர கிராமங்களிலும் நீடித்த, நிலைத்த மீன்பிடித் தொழில் செய்து வாழும் மீனவ மக்களின் வாழ்க்கை, வாழ்வுரிமை என்னவாகும்? குளச்சல் துறைமுகத்தால் எழும் மாசு, திடக்கழிவு, திரவக்கழிவுகளை எப்படிக் கையாள்வது? ஏற்கெனவே புற்றுநோயால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும் குமரிமாவட்ட கடற்கரைப் பகுதி இன்னும் பல நோய்களால் பாதிப்படையும்போது என்ன செய்வது? துறைமுகத்தோடு போதைப் பொருட்களும், விபச்சாரமும், இன்னும் பல விபரீதங்களும் வந்திறங்குமே? “கண்ணை விற்று சித்திரம் வாங்கும் இந்தத் திட்டம் தேவையா” என்று கேள்வி கேட்கின்றனர் மக்கள்.

ஆனால் அதிகார வர்க்கமோ அகப்படும் இடத்தில் எல்லாம் ஆப்பு வைப்பதில் குறியாக இருக்கிறது. குளச்சலின் மிக அருகேயுள்ள (திருவனந்தபுரம் மாவட்டம்) விழிஞ்ஞம் எனுமிடத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்படாத “விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் லிமிட்டெட்” எனும் ஒரு பெரிய தனியார் வர்த்தகத் துறைமுகம் உருவாக்கப்படுகிறது. இந்தத் துறைமுகத்துக்கு வேண்டிய நிலம், நீர், மின்சாரம் அனைத்தையும் கேரள அரசு கொடுக்க வேண்டும்.

இந்தத் துறைமுகத்திலிருந்து வரும் வருமானத்தில் ஒரு சதவீதத்தை துறைமுகம் இயங்கத்துவங்கிய 16-வது வருடத்திலிருந்து மேற்கண்ட தனியார் நிறுவனம் கேரள அரசுக்குக் கொடுக்கும். பின்னர் ஆண்டுதோறும் ஒரு சதவீதம் வருமானத்தை உயர்த்திக் கொடுப்பார்கள். நாற்பது ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் அமுலில் இருக்குமாம். இந்த திட்டப்பணிகளை உடனடியாகத் துவக்கும் விதத்தில் ஊக்குவிப்புத் தொகையாக மத்திய அரசு சுமார் ரூ. 817.8 கோடியை அண்மையில் ஒதுக்கியிருக்கிறது. இந்தக் கடனை திருப்பியளிப்பதில் கேரள அரசுக்கும் பங்கு உண்டாம். மொத்தத்தில் கேரள அரசு அரிசி கொண்டு வரும், தனியார் உமி கொண்டு வருவார்கள். இருவருமாக ஊதி ஊதித் தின்பார்கள்.

தூத்துக்குடி மற்றும் விழிஞ்ஞம் எனுமிடங்களில் இரண்டு பெரும் வர்த்தகத் துறைமுகங்கள் இயங்கும்போது, குளச்சலில் எதற்கு இன்னொரு வர்த்தகத் துறைமுகம் என்று கேள்வி கேட்டால், உங்களுக்கு ‘வளர்ச்சி’ பற்றிய புரிதல் போதாது என்று அர்த்தம். அதிகமான துறைமுகங்கள், அதிகமான சரக்குகள், அதிகமான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், அதிகமானக் கழிவுகள், அதிகமான மாசு, அதிகமான நோய்கள், அதிகமான அழிவு – இவைதானே வளர்ச்சியின் அடிப்படைகள்? குளச்சல் வளர்ச்சி குமைச்சல் வளர்ச்சியாகுமோ?