குளிரும்.. இதய பாதுகாப்பும்..

செவ்வாய் சனவரி 07, 2020

குளிர் அதிகரிக்கும்போது சிலருக்கு ரத்தம் உறையக்கூடும். அது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்’ என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குளிர்காலத்தில் உடலில் குளிர்ச்சி தன்மை அதிகரிக்க தொடங்கும். அத்தகைய குளிர்ந்த வெப்பநிலை ரத்த ஓட்டத்தை பாதிக்கும். அதனால் ரத்தத்தின் வேகம் குறைய தொடங்கும். தமனிகளும் இறுக்கமடையக்கூடும். அது மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். ‘குளிர் அதிகரிக்கும்போது சிலருக்கு ரத்தம் உறையக்கூடும். அது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்’ என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குளிர்காலத்தில் உடலில் வெப்பநிலையை தக்கவைத்துக்கொள்ள இதயத்தின் செயல் திறன் அதிகரிக்கும். அதன் காரணமாக அதிக ஆக்சிஜனும் தேவைப்படும். ஒருசில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். குளிர்காலத்தில் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு உடல் வெப்பநிலை சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குளிர்ச்சியான பானங்கள், உணவு வகைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சூடான உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது.

குளிர்காலத்தில் காய்ச்சல் போன்ற பாதிப்பு நேரும்போது இதயம் வேகமாக துடிக்கும். அப்போது ரத்தத்திற்கு தேவையான ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கும். காய்ச்சல் காரணமாக உடலில் நீரிழப்பும் ஏற்படும். அதனால் குறைந்த ரத்த அழுத்த பிரச்சினையும் உருவாகும். இத்தகைய மாற்றங்கள் மாரடைப்புக்கான அபாயத்தையும் அதிகரிக்கும். அதிலும் இதய நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் மாரடைப்பு பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். குளிர்காலத்தில் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்வது நல்லது.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்பட இதய நோய் பாதிப்புக்கு ஆளாகிறவர்கள் குளிர்காலத்தில் கவனமாக செயல்பட வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் குளிர்காலத்தில் அதிக பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். பொதுவாக குளிர்காலத்தில் ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். உடலில் வெப்பநிலை குறைந்து ரத்த நாளங்கள் சுருங்குவதால் இத்தகைய பிரச்சினை ஏற்படக்கூடும். குளிர்காலத்தில் வைட்டமின் டி அளவும் குறைந்து போகும். ரத்தத்தில் அதன் தாக்கம் வெளிப்பட்டு அது ரத்த அழுத்தம் அதிகரிக்க காரணமாகிவிடும்.

குளிர்காலத்தில் முறையாக உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கையாள்வது உயர் ரத்த அழுத்த பாதிப்பை குறைக்கும். குளிர் காலத்தில் கதகதப்பான ஆடைகளை அணிந்து உடலை சூடாக வைத்திருப்பது நல்லது. தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வர வேண்டும். அது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.