குழந்தையை துன்புறுத்திய பர்மியருக்கு இடமளிக்கிறதா ?

ஞாயிறு நவம்பர் 10, 2019

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள தஞ்சக்கோரிக்கையாளர்கள்/அகதிகள் மருத்துவ வெளியேற்ற சட்டத்தை பயன்படுத்தி ஆஸ்திரேலியா வருவதாக உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் விமர்சித்த வந்த நிலையில், தற்போது குழந்தையை துன்புறுத்திய பர்மியருக்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் டட்டன். 

“இந்த சட்டம் மோசமானது என ஏன் சொல்கிறோம் என்பதற்கு இச்சம்பவமே உதாரணம்,” என பீட்டர் டட்டன் கூறியுள்ளார். 

நவுருத்தீவில் இந்த பர்மியர் வைக்கப்பட்டிருந்த போது குழந்தையை துன்புறுத்தியதாக புகார் வழங்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டுள்ளது. பின்னர் இவருக்கு மேலதிக மருத்துவ உதவி தேவைப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவில் மருத்துவம் பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கூடுதல் மருத்துவ உதவி தேவைப்படும் தஞ்சக்கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வந்து மருத்துவமளிக்க இச்சட்டம் அனுமதிக்கிறது.

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உடல் மற்றும் மனநல ரீதியாக பாதிக்கப்பட்ட அகதிகளை ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டு வந்த மேலதிக சிகிச்சையை வழங்க ‘மருத்துவ வெளியேற்ற சட்டம்’ வழிவகைச் செய்கின்றது.  கடந்த பிப்ரவரி மாதம் , எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட இம்மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமானது. 

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: 

1. ஓர் அகதி அல்லது தஞ்சக்கோரிக்கையாளரை ஆஸ்திரேலியாவுக்கு இடம் மாற்ற இரண்டு அல்லது அதற்கு அதிகமான மருத்துவர்களிடம் மருத்துவ அறிவுரை பெற வேண்டும். 

2. ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சருக்கு இந்த இடமாற்றத்தை நிராகரிக்கும் அதிகாரம் உண்டு. எவரை நிராகரிக்கலாம்? சம்பந்தப்பட்ட அகதி மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்தால் நிராகரிக்கலாம். சம்பந்தப்பட்ட அகதியை இடமாற்றுவது பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என சந்தேகித்தால் நிராகரிக்கலாம். சம்பந்தப்பட்ட அகதியின் மீது குறிப்பிடத்தக்க குற்றப்பதிவுகள் இருந்தால் நிராகரிக்கலாம். இது குறித்த முடிவை 72 மணிநேரத்திற்குள் எடுக்க வேண்டும். 

3. சம்பந்தப்பட்ட அகதியின் இடமாற்ற கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில் இவ்விவகாரம் சுதந்திர சுகாதார ஆலோசனைக் குழுவின் பார்வைக்கு செல்லும். இரண்டாவது முறையாக பரிசீலித்து 72 மணிநேரத்திற்குள் தங்கள் முடிவினை அவர்கள் தெரிவிக்க வேண்டும். 

4. எவருக்கு பொருந்தும்? இந்த மருத்துவ வெளியேற்ற சட்டம் தற்போது நவுரு மற்றும் மனுஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். புதிதாக படகுகளில் வருபவர்களுக்கு பொருந்தாது. 

5. சம்பந்தப்பட்ட அகதி ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அவர் தடுப்புக்காவலிலேயே வைத்திருக்கப்படுவார். 


இந்த மருத்துவ வெளியேற்ற மசோதா எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பொழுதே அதனை ஆளும் லிபரல் கூட்டணி அரசு ஏற்க மறுத்தமை இங்கு குறிப்பிடத்தகக்து.