குளத்தை புனரமைப்பு செய்ய முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை!

செவ்வாய் சனவரி 28, 2020

பொலனறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நவசேனபுர பகுதியிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் தங்களுடைய ஜீவனேபாய தொழிலை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த கஸ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

நவசேனபுர பகுதியிலுள்ள அவ்வாட குளம் மற்றும் வில் குளம் என்பவற்றில் தமிழ், முஸ்லிம் மக்கள் என ஐயாயிரத்தி ஐம்பது குடும்பங்கள் மீன் பிடி மற்றும் விவசாய செய்கையை நம்பி தங்களது வாழ்க்கையை நடாத்தி வருகின்றனர்.

குறித்த குளத்தில் நவசேனபுர கிராமத்திலுள்ள முஸ்லிம் மக்களும், தீவுச்சேனை கிராமத்திலுள்ள தமிழ் மக்களும் நவசேனபுர பகுதியிலுள்ள குளத்தில் கட்டு வலை கட்டி மீன் பிடிக்கின்றனர்.

அத்தோடு சில விசாயிகள் குளத்தினூடாக வயல்களுக்கு நீர் பாய்ச்சுகின்றனர்.

குறித்த குளமானது தற்போதை பிரதமர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மக்கள் மீன் பிடித்த குளம் வெட்டப்பட்டு விவசாய செய்கைக்கு அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களுக்கு நீர் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் பின்னடைவில் குளத்தில் நீர் தேங்கி நிற்க முடியாத நிலைமை காணப்பட்டு வந்துள்ளது.

இதன் காரணமாக நவசேனபுர கிராமத்திலுள்ள முஸ்லிம் மக்களும், தீவுச்சேனை கிராமத்திலுள்ள தமிழ் மக்களும் மீன் பிடிக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் காணப்படுகின்றனர்.

மழை காலத்தில் மாத்திரம் நீர் காணப்படுகின்றது. வெயில் காலத்தில் நீர் இல்லாமல் குளமானது மணல் வீதி போன்று காட்டியளிக்கும் நிலைமை காணப்படுகின்றது.

அரசியல்வாதிகள் எங்களால் விடுக்கப்படும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு பல வாக்குறுதிகளை வழங்கி செல்கின்றனர். ஆனால் தேர்தல் முடிந்ததும் எங்களை வந்து பார்ப்பது கிடையாது.

111

எங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றுவது கிடையாது. நாங்கள் பெரும்பான்மை சமூகம் வாழும் பொலனறுவை மாவட்டத்தில் சிறுபான்மை சமூகம் வாழ்வதால் தங்களை கவனிக்காமல் உள்ளனரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஒரு புரியாத புதிராக காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆகவே குளத்தினை நம்பி தங்களது வாழ்க்கையை நடாத்தும் ஐயாயிரத்தி ஐம்பது குடும்பங்களின் வாழ்க்கையை திறம்பட நடாத்திச் செல்வதற்கும், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையை மேலோங்கச் செய்வதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள், நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.