குழு மோதல் ஒருவர் பலி : இருவர் படுகாயம்

புதன் மே 22, 2019

கிராண்பாஸ் பிரதேசத்தில் இருக்குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்த நிலையிலே வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது தொடர்பில் சந்தேக நபர்கள் நாள்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

கிராண்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேஹெரகொடெல்ல - கம்பி தொடுவ பகுதியில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோதலின் போதே இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது வெல்லம்பிடிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மல்காவத்து கோரலாகே சுகத் இந்தரஜித் எனப்படும் நபர் உயிரிழந்துள்ளதுடன். படுகாயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

முச்சக்கர வண்டியொன்றை விற்பனை செய்வது தொடர்பில் எற்பட்ட கருத்து முரண்பாடுகளின் போதே மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்தள்ளது.

சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான டெனிகிலாஸ் எனப்படும் நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதுடன் , இவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சைப் பெற்று வருகின்றார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பொலிஸார் சம்பவம் குறித்து மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளதுடன் , இவர்களை இன்றைய தினம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டனர்.