கும்பிடு பூச்சி

திங்கள் ஜூன் 15, 2020

ஏன்
நானென் பேனாவைக் காட்டி
யாசிக்கிறேன்?

ஏன்
என் வீரியம் மிக்க சொற்களின் தட்டில்
அடுத்தவர்களைப் பிச்சை போடக் கேட்கிறேன்?

ஏன் என் முதுகை
நீவி விடச் சொல்லி வளைகிறேன்?

ஏன் எனது சொற்களுக்கு
சுயமரியாதையை சொல்லிக் கொடுக்க தவறுகிறேன்?

ஏன் என் பிள்ளைகளை
எடை போட்டுத் தரச்சொல்லி
அடுத்தவர்களின் தராசுக்கு
வரிசையில் நிற்கிறேன்?

ஏன் எனக்கிந்த வியாதி
தொடர்ந்து கொண்டிருக்கிறது?

ஏன் நானொரு
கும்பிடு பூச்சியாகி கீழிறங்குகிறேன்?

எப்போது விடும்
இந்தப் பொல்லாத காய்ச்சல்?

 

தீபிகா