குண்டு உடலை ஒல்லியாக்கும் பாக்டீரியாக்கள்!

வெள்ளி ஓகஸ்ட் 02, 2019

மனிதர்களின் உடல் நலமாக இருக்க, வயிற்றில் வாழும் பல்லாயிரம் வகை நல்ல நுண்ணுயிரிகள் உதவுகின்றன.

அவற்றில்,சில பாக்டீரியா வகைகள் இருந்தால், உடல் பருமன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை இருக்கும் என்பதை, சமீபத்தில்,'சயின்ஸ்'இதழில் வெளியான ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலுள்ள யூடா பல்கலைக் கழக விஞ்ஞானிகள், சோதனைக்குள்ளாகும் ஆய்வக எலிகள்,பருமனாக இருப்பதை கவனித்தனர்.

இது ஏன் என்று ஆராய்ந்தபோது, அவற்றின் வயிற்றில், 'குளோஸ்ட்ரிடியா' என்ற வகை பாக்டீரியாக்கள் இல்லாமல் இருப்பதை கண்டறிந்தனர்.

இந்த வகை பாக்டீரியாக்கள் வயிற்றில் இருக்கும் எலிகள், ஆரோக்கியமான எடையுடன் இருப்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.

குளோஸ்ட்ரிடியா பாக்டீரியாக்கள், எலிகளின் வயிற்றில் வினைபுரிந்து, கொழுப்பை நன்கு செரிமானம் ஆகும்படி செய்கின்றன. இதனால்,அவை இருக்கும் எலிகள் பருமனாவதில்லை என்பதோடு, எலிகளின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அவை வலுவாக்குகின்றன.

அதேபோல,பருமனாக இருக்கும் மனிதர்களின் வயிற்றிலும் குளோஸ்ட்ரிடியா பாக்டீரியாக்கள் இருப்பதை,மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதற்காக,குளோஸ்ட்ரிடியா பாக்டீரியாக்களை மனிதர்கள் வயிற்றில் செலுத்துவதை விட,அவை கொழுப்பை எப்படி கையாள்கின்றன, என்ன வினை புரிந்து நோய் எதிர்ப்பை வலுப்படுத்துகின்றன என்பதை கண்டறிந்தால்,அந்த வினைகளை உண்டாக்கும் மருந்துகளை தந்து, மனிதப் பருமனை கட்டுப்படுத்தி, நோய் எதிர்ப்பை அதிகரிக்க முடியும் என,விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.