குடியரசு தினத்தில் உழவு இயந்திரப் பேரணி நடத்த காவல்துறை தடை!

வியாழன் சனவரி 21, 2021

ஜனவரி 26ம் திகதி குடியரசுத் தினத்தன்று டெல்லியில் உழவு இயந்திர பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 

ஜனவரி 26ம் திகதி குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் அரசு சார்பில் பல்வேறு நிகழ்வுகள், ராணுவ அணிவகுப்பு, காவல்துறை அணிவகுப்புகள் நடைபெறுவது வழக்கம். அங்கு 4 அடுக்கு பாதுகாப்பு  போடப்பட்டுள்ளதால், தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் அன்றைய தினம் உழவு இயந்திர பேரணி நடத்தப் போவதாக அறிவித்தனர்.

இதற்கு தடை விதிக்கக்கோரி டெல்லி காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் காவல்துறை தேவையான நடவடிக்கையை எடுத்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தியது.

இந்த நிலையில், டெல்லி புறவழிச் சாலையில் உழவு இயந்திர பேரணி நடத்துவதற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, விவசாயிகள் அமைப்பிற்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதில் விவசாயிகள் உழவு இயந்திர பேரணி குறித்தும், வழித்தடங்கள் குறித்தும் விவசாயிகளுடன் காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கிராந்திகரி கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் தர்ஷன் பால், விவசாயிகளின் உழவு இயந்திர பேரணி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது என்று கூறினார். ஆனால், நாங்கள் அந்த வழியில் மட்டுமே உழவு இயந்திர பேரணி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை மீண்டும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.